Posted by S Peer Mohamed
(peer) on 12/7/2023 9:57:20 AM
|
|||
என் மனதின் குரல்.... சென்னையின் சில பகுதிகளில் சுமார் 36 மணி நேரம் மின்சாரம் இல்லை. பால் வினியோகம் இல்லை. சென்னையின் பல பகுதிகளில் இவற்றுடன் மழைநீர் வீடு புகுந்துவிட்டது அல்லது சாலையில் தேங்கி நிற்கிறது. சில மணி நேரம் சில அசௌகரியங்களைத் தாங்க முடியாமல் தவித்துப் போன மக்கள். ஒவ்வொருவரும் அடுத்தவரிடம், "மின்சாரம் வினியோக அலுவலகத்தில் தொடர்பு கொண்டீர்களா? எப்ப வினியோகம் நடக்கும்?" என்று ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தனர். ஒரு நாள் பால் வினியோகம் இல்லை. காலை சுடச்சுட காபி கோப்பையுடன் தினசரி கையில் வைத்திருக்க முடியாத "பெருந்துயரில்" தவித்து விட்டனர் சென்னையின் மேட்டுக்குடி. இதன் நடுவே, இவற்றைக் குறித்து மற்றவர்களுக்காகவாவது விசாரிப்பதும், துயரத்தில் இருந்த மக்களுக்கு ஆறுதல் சொல்வதுமாய் இயந்திர கதியில் ஈடுபட்டிருந்தாலும், மனதிற்குள் பெரும் துயரம்; தனது சிக்கல் தீர்க்க வழி இல்லாமல் ஏதோ பேசுகிறேன் என்று அடுத்தவர் கருதக்கூடும் என்பதால் மற்றவரிடம் பகிர்ந்துக் கொள்ள இயலாமல், மிகப் பெரும் பாரமாக மனதை வாட்டியது. சொந்த மண்ணில் அகதிகளாக; நேற்று வரை உறவாக பார்த்தவர், இன்று பகையாக, இடமில்லை, குடிநீர் இல்லை, மின்சாரம் இல்லை, வாழ்க்கைக்கான எந்த உத்தரவாதம் இல்லாமல் பல மாதங்களாக தவிக்கும் மணிப்பூர் பழங்குடி மக்களின் துயரம் நமக்கு ஒரு பொருட்டாக அமையாமல் போனதை எப்படி புரிந்துக் கொள்வது? எழுபத்தைந்து வருடங்களாக; நித்தம் நித்தம் குண்டுமழை, அகதி முகாம், மின்சாரமில்லை, குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதற்கு தாய் உயிருடன் இல்லை, பாலோ, மாவுபாலோ எதுவும் இல்லை. குழந்தை பசியினால் துடிக்கிறது. குண்டு மழை பொழிகிறது. மூன்றடி அடி நிலம் கேட்டு மூன்றாவது அடிக்கு நிலம் தந்தவன் தலையிலேயே கால் வைத்த கதையை புராணத்தில் படித்திருக்கிறோம். அதே சூழ்ச்சியை திட்டமிட்டு ஏகாதிபத்திய வல்லரசுகளின் துணையுடன் இஸ்ரேல் கண்முன்னே அரங்கேற்றிக் கொண்டுள்ளது. மணிப்பூர் மக்களின் துயரம், பாலஸ்தீன மக்களின் துயரம் இவற்றுக்கு முன்பாக சென்னை வாசிகளின் துயரம் என்னை பொருத்தவரை ஒரு பொருட்டே அல்ல. மின்சாரமில்லாத சில மணி நேரங்கள், பால் வினியோகமில்லாத காலை பொழுதுகள், மழை சூழ்ந்து வீட்டிலும், மழை வீட்டிற்குள் புகுந்ததால் ஒரு நாள் மழையில் சென்னை வெள்ளக்காடாக மாறி நீரில் மிதந்ததற்கு சென்னையில் நுகர்வோராய் வாழும் உயிர் இனங்களின் சுயநலமே காரணம். அனுபவத்தில் இருந்து பாடம் கற்க மறுக்கும் அரசு இயந்திரத்தின் அடாவடித்தனமான அணுகுமுறையே காரணம். நமது செயலால் நாம் உருவாக்கிக் கொண்ட துயரத்திற்கும், தனது ஒரு தவறும் இல்லாமல், மற்றவர்களின் சூழ்ச்சியால், ஏகாதிபத்தியத்தின் யுத்த வெறியால் மக்கள் சந்திக்கும் துயரத்திற்கும் தீர்வு ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை. நமது சில நாள் துயரை போக்க துடிக்கும் நாம், நெடுநாள் துயரில் வாழும் மக்கள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் இருப்பது மனித பண்பாகுமா? மனிதராக வாழ விரும்பினால் சிந்திப்போம்! சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் அனைவருக்குமானது, இவையே கண்ணியமிக்க வாழ்க்கையின் அடிப்படை என்பதை உணர்ந்து நடக்க முயற்சி செய்வோம். தோழமை அன்புடன், |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |