|  
             Posted by  S Peer Mohamed 
               (peer)  on 11/3/2025 3:53:20 PM 
             
           | 
        |||
#நெல்லைஏர்வாடி கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை #சேக் என்ற #சேக்_செய்யது_சபீன் கோவில்பட்டியில் வைத்து வாகன விபத்தில் வபாத் ஆனார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 
கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார், வேனில் இருந்த பள்ளி மாணவிகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி வேன், மாணவ மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக நாலாட்டின் புத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்து. 
வேனை கருப்பசாமி என்பவர் இயக்கியபோது, உதவியாளர் அய்யம்மாள் மற்றும் 10ம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். 
பள்ளி வேன் மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது நெல்லையில் இருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், திடீரென சாலையை தாண்டி அதி வேகமாக வந்து பள்ளி வேன் மீது மோதியது. இதில் பள்ளி வேனின் முகப்பு மற்றும் காரின் முகப்பு அப்பளம் போல் நொறுங்கின. 
விபத்தில், சம்பவ இடத்திலேயே காரில் வந்த ஏர்வாடியூரை சேர்ந்த ஷேக் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அகஸ்டின், பள்ளி வேன் ஓட்டுநர் கருப்பசாமி, உதவியாளர் அய்யம்மாள் மற்றும் 10ஆம் வகுப்பு மற்றும் 2ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு குழந்தைகள் ஆகிய ஐந்து பேரும் காயம் அடைந்தனர். 
பள்ளி வேன் மற்றும் காரின் முகப்பு அப்பளம் போல் நொறுங்கியதால் பள்ளி வேன் டிரைவர் கருப்பசாமி மற்றும் கார் ஓட்டுநர் அகஸ்டின் ஆகியோர் வெளியே வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
பள்ளி வேன் மற்றும் காரில் சிக்கி இருந்த ஓட்டுநர்கள் இருவரையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். காயம் அடைந்த ஐந்து பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ஷேக் உடல், கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
இந்த விபத்து காரணமாக மதுரை - நெல்லை இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 
விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 
 | 
        |||
| 
          
 | 
        |||
| News Home | Old News | Post News | 
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..  | 
        ||