|
Posted by S Peer Mohamed
(peer) on 4/4/2026 6:09:20 AM
|
|||
அது ஜெயிக்க முடியாத, நிறுத்த முடியாத, மற்றும் வெளியேற முடியாத ஒரு போர். இப்போது நான் சொல்லப் போகும் உண்மைகள், இந்த தசாப்தத்தின் மீதமுள்ள நாட்களில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு தலைப்புச் செய்தியின் தன்மையை மாற்றப்போகிறது. இது அரசியல் அல்ல, உலகின் நிதி கட்டமைப்பு (Financial Architecture) கண்முன்னே சிதைக்கப்படுவதைப் பற்றியது. ஈரானுடனான போரில் அமெரிக்கா ராணுவ ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் ரத்தம் சிந்தி வருகிறது. வெறும் 48 மணி நேரத்தில் பென்டகன் 5.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள வெடிபொருட்களைப் பயன்படுத்தியுள்ளது. தயாரிக்க பல ஆண்டுகள் ஆகும் Tomahawk ஏவுகணைகள், 100 மணி நேரத்திற்குள் ஈரானை தாக்கித் தீர்ந்துவிட்டன. ஒரு நாளைக்கு இந்த போரில் ஒரு பில்லியன் டாலர்கள் எரிந்து சாம்பல் ஆகின்றது. அமெரிக்கா நினைத்தாலும் இந்த போரை நிறுத்த முடியாது. ஏன் தெரியுமா? நிறுத்துவதால் ஏற்படும் விளைவுகள், போரைத் தொடர்வதை விட மோசமானது. இன்று போரை நிறுத்திவிட்டு அமெரிக்கா ஈரானிடம் சமாதானம் பேசினால், பதிலாக ஈரான் என்ன கேட்கும்? மத்திய கிழக்கிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என கேட்கும். ஒவ்வொரு தளம், கப்பல், சிப்பாய் வெளியேற வேண்டும் என கேட்கும். பில்லியன் கணக்கில் நஷ்டஈடு தர வேண்டும் என கேட்கும். ஈரானிற்கு பணிந்து அமெரிக்கா வெளியேறினால் என்னவாகும்? என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை சவப்பெட்டிக்குள் போட்டு அடிக்கப்படும் கடைசி ஆணியாக அமையும். அமெரிக்காவின் உண்மையான பலம் அதன் ராணுவம் அல்ல, உண்மையான பலமே அதன் டாலர் தான். இன்று உலகம் முழுவதும் எண்ணெய் வியாபாரம் டாலரில் நடக்கிறது. சவுதி, கத்தார், குவைத் போன்ற நாடுகள் தங்கள் எண்ணெயை டாலருக்குத்தான் விற்கின்றன. உலக நாடுகள் எரிசக்தி வாங்க வேண்டுமென்றால், டாலரை வைத்திருக்க வேண்டும். இது டாலருக்கான தேவையை உலகளவில் நிலைநிறுத்துகிறது. டாலர் வர்த்தகத்தால் கிடைத்த லாபத்தை வளைகுடா நாடுகள் மீண்டும் அமெரிக்கப் பத்திரங்களிலும் (Treasury bonds), சந்தைகளிலும் முதலீடு செய்கின்றன. இந்த சுழற்சிதான் 40 டிரில்லியன் டாலர் கடன் சுமையிலும் அமெரிக்காவை இன்றுவரை இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா போரை நிறுத்திவிட்டு மத்திய கிழக்கிலிருந்து வெளியேறினால் என்ன என்ன நடக்கும்? அரபு நாடுகளுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு கிடைக்காது. அவர்கள் ஈரானின் ஆதிக்கத்திற்கு பயந்து, ஈரானுடன் சமரசம் செய்வார்கள். அதன் விளைவாக, எண்ணெய் வியாபாரத்தை டாலருக்குப் பதில் வேறு கரன்சியில் (உதாரணமாக சீனாவின் யுவான்) செய்யத் தொடங்குவார்கள். இதனால் உலகில் டாலருக்கான தேவை இல்லாமல் போகும். அமெரிக்காவில் வைத்திருக்கும் டாலர்கள் வெறும் காகிதமாக மாறும் அபாயம் ஏற்படும். இது மந்தநிலை (Recession) அல்ல, இது அமெரிக்க சாம்ராச்சியத்தின் வீழ்ச்சி (Collapse)யாக அமையும். அமெரிக்கா இன்று உலகின் மிகப்பெரிய கடன் வாங்கிய நாடாக உள்ளது. ஆனாலும் அது இன்னும் வல்லரசாக இருப்பதற்குக் காரணம், உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் மீது நம்பிக்கை வைத்து தங்கள் பணத்தை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதுதான். அமெரிக்கா ஒரு போரில் தோற்று அல்லது பயந்து பின்வாங்கினால்"அமெரிக்காவால் இனி யாரையும் காப்பாற்ற முடியாது" என்ற பிம்பம் உருவாகும். முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை அமெரிக்காவிலிருந்து வெளியே எடுப்பார்கள். 40 டிரில்லியன் டாலர் கடனைத் திருப்பிக் கட்ட வழியில்லாமல் அமெரிக்கப் பொருளாதாரம் ஒரே நாளில் “இரட்டைக் கோபுரம்” சரிந்தது போலச் சரிந்துவிடும். ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இந்த மாற்றங்களை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஈரானையே சமாளிக்க முடியாத அமெரிக்காவால், சீனாவிடமிருந்தும் வடகொரியாவிடமிருந்தும் தங்களைக் காப்பாற்ற முடியுமா? என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்துவிட்டது. அவர்கள் அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதை நிறுத்திவிட்டு, தங்கள் ராணுவத்தை தாங்களே பலப்படுத்தத் தொடங்கப் போகின்றனர். மறுபுறம், ஐரோப்பாவும் அதே முடிவுக்கு வரும். உக்ரைன் போருக்காக அமெரிக்காவிற்கு ஏன் ஆதரவு தர வேண்டும் என்று விலகிச் செல்லும். ஈரானின் எண்ணெய் வருமானத்தைத் தடுக்க அதன் 'Kharg Island-ஐ அமெரிக்கா கைப்பற்றலாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் ஒரு தீவை வெல்வது எளிது, அதைத் தக்கவைப்பது கடினம். ஈரானின் கடற்கரையோரம் உள்ள அந்தத் தீவை ஆக்கிரமிக்கப் போனால், ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கும் போது நரகம் என்றால் என்ன என்பதை அமெரிக்கப் படைகள் அன்று காண்பார்கள். அதைத் தடுக்க அமெரிக்கப்படைகள் ஈரானின் நிலப்பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது வியட்நாம் போரை விட மோசமான ஒரு நீண்டகாலப் போராக (Forever War) மாறும். அமெரிக்கா இன்று ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது. இது ஒரு ராணுவ நெருக்கடி அல்ல, போராக உருமாற்றப்பட்ட ஒரு நிதி நெருக்கடி (Financial Crisis). போரைத் தொடர்ந்தால் ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் டாலர் வரை செலவாகும், அமெரிக்க பொருளாதாரம் மெதுவாகப் பலவீனம் அடையும். போரை நிறுத்தினால் டாலரின் ஆதிக்கம் வீழும், பொருளாதாரம் அழியும், உலக வல்லரசு என்ற தகுதி உடனடியாகப் பறிபோகும். அதனால்தான், அமெரிக்கா அழிவை நோக்கியே சென்றாலும், அந்தப் பயணத்தை நிறுத்த முடியாத ஒரு கட்டாயத்தில் உள்ளது. இதைத்தான் "Cost of leaving is extinction" (வெளியேறுவதன் விலை அழிவு) என்று அழைக்கப்படும். வரலாற்றில் எந்தப் பேரரசும் ஆயுதங்களால் மட்டும் அழியவில்லை அதன் பணத்தின் மதிப்பு வீழும்போதே வீழ்ந்திருக்கிறது. 40 டிரில்லியன் டாலர் கடன் சுமையுடன், ஒரு 'செல்லாத கரன்சியை' வைத்துக்கொண்டு எந்த வல்லரசாலும் நீடிக்க முடியாது. நாம் இன்று பார்ப்பது ஒரு தேசத்தின் போர் அல்ல உலகப் பொருளாதாரத்தின் அத்திவாரம் அழித்தொழிக்கப்படும் நிகழ்வு. துப்பாக்கிகள் மௌனமானாலும், டாலரின் வீழ்ச்சி அமெரிக்காவின் சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அந்தப் பொறியில் இருந்து தப்பிக்கவே அமெரிக்கா இன்று போராடிக்கொண்டிருக்கிறது. இந்த மரணப்பொறியில் இருந்து அமெரிக்கா தப்பிக்க போகின்றதா அல்லது வீழப் போகின்றதா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
Additional Inputs: |
|||
|
|
|||
| News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |
||