Posted by S Peer Mohamed
(peer) on 1/11/2025 4:04:51 PM
|
|||
அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி: "இந்த தீ விபத்து அல்லாஹ்வின் தண்டனையா? இது குறித்த முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?'' என்று கேட்கிறார்கள். நமது பதில்: மக்களுக்கு ஏற்படும் சோதனைகள் மூலம் அல்லாஹ் என்ன நாடுகிறான்? என்று நமக்குத் தெரியாது. அவை தண்டனையாகவோ, சோதனையாகவோ, பாடமாகவோ கூட இருக்கலாம். அல்லது கவனக்குறைவில் இருந்து மக்களை தட்டி எழுப்புவதற்காகவும் இருக்கலாம். உயிரினங்களின் சமநிலையை நிர்வகிப்பதில் அனைத்தையும் அறிந்த - நமது அறிவுக்கு எட்டாத - அல்லாஹ்வின் ஞானமாகவோ அல்லது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகவோ கூட இருக்கலாம். இது அல்லாஹ்வின் தண்டனைதான் என்று உறுதியாகக் கூறுவது அனுமதிக்கப்பட்டதல்ல. ஏனெனில், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வஹி (வேத வெளிப்பாடு) இறங்குவது நின்றுவிட்டது. எனவே அல்லாஹ் என்ன விரும்புகிறான் என்று நமக்கு எப்படித் தெரியும்? அவ்வாறு நாமே தீர்ப்பு கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: "நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுவதையும் அல்லாஹ் தடை செய்துள்ளான்'' (7:33) எனவே இந்தத் தீ விபத்து அல்லாஹ்வின் தண்டனைதான் என்று கூறுவது அல்லாஹ்வுக்கு எதிராகப் பேசுவதாகும். நமது கொள்கை, நபிகளாரின் நெறிமுறை ஆகியவற்றுக்கு முரணாகும். முஸ்லிம் நாடுகளில்கூட பேரழிவுகள் நடந்துள்ளன, இப்போதும் நடக்கத்தான் செய்கின்றன. டெர்னா பெருவெள்ளம், சிரியா நிலநடுக்கம், துருக்கியின் வலிமிகுந்த பூகம்பம் போன்றவை இதற்கான உதாரணம். இவை எல்லாம் பாவிகளுக்கு அல்லாஹ்வின் தண்டனைதான் என்று கூறுவது எவ்வாறு கூடாதோ; அவ்வாறே அமெரிக்க தீ விபத்து குறித்தும் கூறுவது கூடாது. அல்லாஹ்வின் தண்டனைதான் என்ற தவறான சந்தேகம் ஒருவருக்கு ஏற்பட்டால் குறைந்த பட்சம் அதை மறைத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும், அவர்கள் விஷயத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது உண்மையான இஸ்லாத்தின் வழிகாட்டுதல் அல்ல. மனிதர்கள் பாதிக்கப்படுவதைக் கண்டு கருணை நபி (ஸல்) வேதனையடைந்துள்ளார்கள். ஏன்.. பறவைகள், கால்நடைகள், விலங்குகள் பாதித்ததைக் கண்டு கண கலங்கியுள்ளார்கள். (மக்காவில் பஞ்சம் ஏற்பட்டபோது மதீனாவிலிருந்து உதவிகளை அனுப்பியுள்ளார்கள்) லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தைப் பொறுத்தவரை... பூமியில் அமைதியைக் குலைத்து, குற்றவாளிகளை ஆதரித்து, அப்பாவிகளையும் பலவீனர்களையும் கொல்லும் ராணுவ, அரசியல் விவகாரங்களையும்.. அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள், இஸ்லாமிய மையங்களைக் கட்டி, மில்லியன் கணக்கான முஸ்லிம் ஆண், பெண், குழந்தைகளைப் பராமரிக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி யூத, கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளையும்.. ஒரு முஸ்லிம் கட்டாயம் வேறுபடுத்திப் பார்க்கத்தான் வேண்டும். கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்கவும் அவற்றின் சேதத்தைக் கட்டுப்படுத்தவும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதுதான் முஸ்லிமின் மீது கடமையாகும். அவ்வாறு செய்ய முடியவில்லையா...? பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கருணை காட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இம்மை மறுமை நெருப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றுமாறு உளமுருகி துஆ கேட்க வேண்டும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்! அறிஞர் அஸ்ஸல்லாபி அவர்களின் பதிவு: |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |