|
Posted by S Peer Mohamed
(peer) on 4/4/2026 6:24:24 AM
|
|||
இந்தப் போர் நீடித்தால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஆபத்து உலக சக்திவள நெருக்கடி (world energy crisis ) அது உலகப்பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பது மட்டுமல்ல உலக நாடுகளில் உணவுப்பற்றாக்குறை பட்டினி பஞ்சம் என்பவற்றுக்கும் காரணமாக அமையும். தென்மேற்கு ஆசியா என்பது அறபுகளின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல தெற்காசிய நாடுகளின் பொருளாதாரத்திலும் செறிந்த செல்வாக்குள்ள ஒரு பிராந்தியம். இந்தியாவின் வெளிநாட்டுச்செலாவணியில் 38 விழுக்காடு வருமானம் வளைகுடா நாடுகளில் பணியாற்றிவரும் இந்திய தொழிலாளர்களின் வழியாகவே இந்தியாவுக்கு கிடைக்கின்றது. இலங்கையின் மொத்த வெளிநாட்டு வருமானத்தில் முதலிடம் வகிப்பது மத்திய கிழக்கில் பணியாற்யிவரும் 1.5 மில்லியன் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கும் ஊதியத்தால் கிடைக்கப்பெறுவது. வங்காளதேசம் பாகிஸ்தான் மாலைதீவு போன்ற நாடுகளினது அன்னியச்செலாவணியிலும் தென்மேற்கு ஆசியா புறக்கணிக்க முடியாத ஒரு பங்கினை ஆற்றி வருகிறது. அறபு நாடுகள் தமது எண்ணெய் வளத்தை சர்வதேச சந்தையில் வினியோகம் செய்ய முடியாதபடி போர் நீடித்தால் இந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தமது வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்பதோடு தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் பாரியளவு சரிய ஆரம்பிக்கும். சுமுகமான எண்ணெய் வினியோகம் இத்தகைய நாடுகளில் அசாத்தியமாகும்போது உள்நாட்டு உற்பத்தித் துறை பாரிய பின்னடைவைச்சந்திக்கும். இவற்றின் திரட்சி பாரிய உள்நாட்டு பொருளாதார நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ளும் என்பதில் ஐயமில்லை. போர் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு நீடித்தால் இந்த விளைவுகள் நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருக்காது என்பதே உண்மை. போரை நாம்தான் முடித்து வைப்போம் என்ற ஈரானிய நிலைப்பாட்டுக்கு அப்பால் நெடன்யாஹுவுக்கும் ட்ரம்மபுக்கும் ஏற்பட்டுள்ள மானசீக அவமானமும் கௌரவப் பிரச்சினையும் ஈரான் மீதான இன்னும் பலமானதும் வலுவானதுமான ஒரு விடாப்பிடியான போருக்கான தயார்படுத்துலுக்கே அவர்களைத்தூண்டி வருகின்றது.கள நிலரங்கள் அதனையே காண்பிக்கின்றன. உண்மையாகவே போருக்கான விலையைக்கணித்தால் ட்ரம்பும் நெடன்யாஹூவும் உடனடியாக போரில் இருந்து வெளியேறும் புள்ளியை (Exit Point) நாட வேண்டும். அதுவே கள உண்மை. ஏனெனில் இது இவ்விரு நாடுகளையும் பொறுத்த மட்டில் ஒரு சமச்சீரற்ற போர் (Assymetric war).போரின் பொருளாதாரமும் பாதிப்பும் சமச்சீரற்றவை .ஒரு பக்க வீக்கம் கொண்டது. ஈரானின் ஏவுகணை உற்பத்தி செலவு வெறும் 15000முதல் 20000 டொலர்கள். அத்தகைய ஏவுகணை ஒன்றை இடைமறிப்பதற்கு இஸ்ரேலிய வான் பாதுகாப்பு முறையினூடு அனுப்பப்படும் இடைமறிப்பு ஏவுகணை (Interceptive missile) ஒன்றின் உற்பத்திச்செலவு இரண்டு முதல் மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள். இத்தகைய பிரமாண்டமான செலவுமிக்க எதிர்ப்பு ஏவுகணை ஐந்து வீதமே வெற்றிகரமாக செயல்படுகின்றது என்பது இஸ்ரேலைப்பொறுத்தவரை பெரிய துரதிஷ்டம். ஆக போர் நீடித்தால் இஸ்ரேலின் பொருளாதாரத்தால் தாக்குப்பிடிக்க முடியாமல் போகும். அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கிவரும் அதிநவீன ஆயுதங்கள் கூட இந்தப்போரில் எதிர்பார்த்த வெற்றியைத்தரவில்லை என்பது மற்றொரு துரதிஷ்டம் . அமெரிக்காவில் இப்போது ட்ரம்பின் அரசியல் முடிவுகளுக்கு மக்கள் எதிர்ப்புக்கிளம்பியுள்ளது. வருடாந்தம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வருகின்ற 14 பில்லியன் (Billion) இராணுவ மானியம் தொடர்ந்தும் இஸ்ரேலுக்கு கிடைக்குமா என்ற கேள்வியை இப்போது அமெரிக்கா எங்கும் வெகுண்டெழுந்த மக்கள் பேரணி எழுப்பி வருகின்றது. காரணம் இதற்கு முன்னர் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வந்த ஆயுத மற்றும் நிதியாதரவு குறித்து அங்கு யாரும் கேள்வி கேட்கவில்லை.இப்போது பெருந்திரளான மக்கள் வீதிகளில் இறங்கி இந்தக்கேள்வியைக்கேட்க ஆரம்பித்துள்ளனர். நெடன்யாஹூவைப்பொறுத்தவரை இன்னொரு கசப்பான உண்மையையும் அவர் சமாளிக்க வேண்டியுள்ளது. இஸ்ரேலின் ஒவ்வொரு பிரஜையும் ஆகக்குறைந்தது இரண்டு ஆண்டுகள் கட்டாய இராணுவ சேவையில் இணைய வேண்டும் என்பது அவர்களது பிரஜா உரிமை சட்டத்தில் தெளிவாக குறிக்கப்பட்டுள்ள விடயம். இப்போது இஸ்ரேலியர்கள் அதனை எதிர்க்கின்றனர். இராணுவ சிப்பாய்களின் தொகை குறைந்து வருவதோடு இராணுவத்தில் இணையும் விருப்பார்வம் இஸ்ரேலிய இளைஞர்களிடையே வேகமாக குறைந்து வருகின்றது. இராணுவ சிப்பாய்களிடையே தற்கொலை வீதம் அதிகரித்து வருகிறது. இத்தகைய நிலையில் போரை எப்படி நீடிப்பது.? மிக ஆச்சரியமான உண்மை என்னவெனில் இத்தகைய சவால்களை தொடர்ந்தும் எதிர்கொள்ள முடியாத நிலையிலும் ட்ரம்பும் நெடன்யாஹூவும் தொடர்ந்தும் போர் செய்யும் முடிவிலேயே விடாப்பிடியாக உள்ளனர்.அதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். ட்ரம்ப் எப்ஸ்டீன் கோப்பின் வீடியோவிலிருந்தும் விசாரணையில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். மறுபுறம் நெடன்யாஹூ ஊழல்குற்றச்சாட்களிலிருந்தும் சிறைத்தண்டனையிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் விலகும் புள்ளியை (exit point) விட்டு போரைத் தீவிரமாக்குவது (escalating point ) பற்றியே மேலும் மேலும் சிந்திக்கிறார்கள். அதன் எதிரொலியே ஈரானை தரைவழியாகத் தாக்கி அழிப்பதற்கான படை நகர்வு .ஆனால் அது அவர்களையே திருப்பித்தாக்கும் (Backfire) ஆபத்தைக்கொண்டுள்ளது. ரிச்சட் நிக்ஸன் ஒரு பொய் மூலம் வியட்னாமை தரை வழியாக ஆக்கிரமிப்புச்செய்ய முயன்று ஒரு பேரழிவைச்சந்தித்த நேரம், அமெரிக்க படையினர் அங்கிருந்து உயிர்தப்பி ஓட்டம் எடுக்க வேண்டி ஏற்பட்டதை வரலாறு மறந்து விடவில்லை. இப்போது இறுதியாக எஞ்சியுள்ள உள்ள ஒரே கேள்வி; போர் இன்னும் நீடித்தால் இந்த உலகில் என்னவாகும் என்பதே. இதை சுருக்கமாக இங்கே எதிர்வுகூறலாம். 01. பூகோள சக்திவள நெருக்கடி உலகத்தை பெரும் ஆபத்தினுள் தள்ளலாம். 02. உலகப்பொருளாதார சரிவு ஒவ்வொரு உலக நாட்டையும் பாதிக்கலாம். 03 அத்தியாவசிய பொருட்களுக்கான உலகத்தட்டுப்பாட்டை குறிப்பாக ஆபிரிக்க ஆசிய லத்தீன் அமெரிக்க நாடுகள் வலுவாக எதிர்நோக்கலாம் . 04.மத்திய கிழக்கிலுள்ள அனைத்து அறபு நாடுகளினதும் பெருளாதாரம் வேகமாக சரியலாம். 04 ஆசிய நாடுகளின் பெருமளவு வெளிநாட்டுப் பணியாளர்கள் தமது வேலைவாய்ப்புக்களை இழக்க நேரிடலாம். 05 பெற்றோ-டொலர் வீழ்ச்சியடைந்து பெற்றோ -டொலர் பொருளாதாரம் வேகமாக சரியலாம். 05. அமெரிக்கா என்ற ஒற்றை அதிகார மையம் (Unipolar power system) சிதைந்து சிதிலமாகி உலகின் பல்வேறு பிராந்தியத்தியங்களிலும் பல்துருவ அதிகார மையங்கள் (Multi Polar power system) தலைதூக்கலாம். 06. சீனாவின் கைகள் மென்மேலும் ஓங்கி உலக அதிகாரச்சமநிலையின் நடுநாயகமாக சீனா மாறலாம். 07.நீண்ட யுத்தத்தின் பின்னர் தன்னைத்தகவமைத்துக்கொள்ளும் ஈரான் பிராந்தியத்தின் வல்லரசாக தன்னை வளர்த்துக்கொள்ளலாம். 08. பஹ்ரைன் ஈராக் ஈரான் லெபனான் அஸர்பைஜான் ஆகிய ஷீயாக்களைப்பெரும்பான்மையாகக்கொண்ட ஒரு பலமான கூட்டணி உருவாகலாம். இந்த நாடுகளில் முதலில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்ததன் பின்னர் இது சாத்தியமாகலாம். 09.அறபு நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ பொருளாதார இராஜதந்திர உறவுகளில் பாரிய மாற்றங்களும் புதிய திசை வழிகளும் நிகழலாம். 10. இப்போதுள்ள குறைவிருத்தி நாடுகள் பாரிய உணவு நெருக்கடிகளையும் பஞ்சம் பட்டினியையும் எதிர்கெள்ளலாம். 11.முழு மத்திய கிழக்கும் போருக்கும் இழுக்கப்படலாம் .பாகிஸ்தான் துருக்கி என்பனவும் இதற்குள் வரலாம் .மத்திய கிழக்கின் அனைத்து வளங்களும் அழிக்கப்படலாம். இதற்கான சூழ்ச்சி வலைகளை இஸ்ரேல் கனகச்சிதமாகப் பின்னத் துவங்கியுள்ளதை களநிலவரம் காட்டுகின்றது. போரை யாரும் தமது தனிப்பட்ட ஊகங்கள் எதிர்பார்ப்புகள் இலக்குகள் அடிப்படையில் தொடங்கி வைக்கலாம். ஆனால் அது எங்கே எப்படி எப்போது முடியும் என்பதை எந்தத் தரப்பாலும் முன்னறிவிக்க முடியாது. இது உலகின் போர் வரலாற்றில் இருந்து நாம் கற்கும் முக்கிய பாடம் .பிரபல அறபு ஊடகவியலாளர் வதா கன்பர் சொல்வதுபோல் போரைச்சூழ நிறையவே மூடு பனிகள் (fog of war) உள்ளன. இந்த மூடு பனியும் பொய்களின் மெய்காவலர்களும் (Bodyguards of lies) உண்மைகளை அறிய ஆர்வமுள்ளவர்களுக்கு எப்போதும் தடையாகவே உள்ளனர். இன்று பெரும்பான்மையானவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஊகங்களைத்தான் உண்மைகளாக முன்வைக்கின்றனர்.ஆனால் போரை ஆரம்பித்துவைத்த ட்ரம்பும் நெடன்யாஹுவும் ஒன்றைத்தெளிவாகப்புரிந்து கொள்வது நல்லது. அதாவது;அரசியல் தவறுகளும் இராணுவத்தவறுகளும் ஒன்றல்ல.வரலாறு எப்போதும் ஒரே நேர் கோட்டில் இயங்கிய வரலாறில்லை. அது தனக்கேயுரிய வளைவு சுழிவுகளுடன்தான் நகர்கிறது. வரலாற்றுத் தீர்ப்பை நேர்மையாக சிந்திக்கும் உலக மாந்தர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கலாநிதி றவூப் ஸெய்ன் |
|||
|
|
|||
| News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |
||