அந்த அகால நேரத்தில், இலங்கை கடற்படை தளபதி வசந்த கரணகொடவிடம் இருந்து அவசர தொலைபேசி உத்தரவு ஒன்று, ஜெட்லைனர் கப்பல் கமாண்டிங் ஆபிசர் நோயல் கலுபோவிலவுக்கு போனது. இலங்கை ராணுவத்தின் கிழக்குப் பகுதி ராணுவ தளபதிக்கு கூட அறிவிக்கப்படாத ரகசிய உத்தரவை பிறப்பித்தார் வசந்த கரணகொட.
ஒரு ரகசிய நள்ளிரவு ஆபரேஷனுக்கான உத்தரவு அது.
அன்று காலை 10 மணி முதல் விடுதலைப் புலிகள் சம்பூரில் இருந்து திரிகோணமலை துறைமுகத்தின் வாய் பகுதியை நோக்கி ஆட்டிலரி ஷெல்களை ஏவிக்கொண்டு இருந்ததால், துறைமுகப் பகுதி மிகுந்த பதட்டத்தில் இருந்தது. விடுதலைப் புலிகளின் நோக்கம், துறைமுகத்தின் வாய் பகுதியை தாக்குதல் நடத்தி சீல் வைத்து, துறைமுகத்தை முற்றாக செயலிழக்க வைப்பது என்பதை, இலங்கை கடற்படை தளபதி வசந்த கரணகொட புரிந்து கொண்டார்.
கடல்புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பி, துறைமுகத்துக்குள் கொண்டு செல்லப்பட்ட ஜெட்லைனர் கப்பல், உள்ளேதான் நங்கூரமிட்டு நின்றிருந்தது. துறைமுகம் செயலிழக்க வைக்கப்பட்டால், இந்தக் கப்பலால் துறைமுகத்தை விட்டு வெளியேறுவது இயலாத காரியமாக போய்விடும்.
ஜெட்லைனர் கப்பல்தான், யாழ்ப்பாணத்தில் இருந்து ராணுவத்தினரை போக்குவரத்து செய்ய, இலங்கையின் கைவசம் இருந்த ஒரேயொரு கப்பல்.
அந்தக் கப்பல் துறைமுகத்தில் முடக்கப்பட்டால், யாழ்ப்பாணத்தைவிட்டு ராணுவத்தினரால் வெளியேற முடியாது, புதிய ராணுவத்தினரை அங்கு கொண்டு செல்ல முடியாது, யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவத்தினருக்கு சப்ளை பொருட்களும் அனுப்ப முடியாது.
சுருக்கமாக சொன்னால், யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் இருந்த ராணுவத்தினர், நாட்டின் மற்றைய பகுதியில் இருந்து போக்குவரத்து தொடர்புகள் துண்டிக்கப்படுவர். அதன்பின் யாழ்ப்பாணத்தை நோக்கி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினால், அங்கிருந்து ராணுவத்துக்கு சப்ளையும் கிடையாது, புதிய உதவிகளும் கிட்டாது, தப்பிச் செல்லவும் வழியில்லை.
இதனால், எப்படியாவது ஜெட்லைனர் கப்பலை திரிகோணமலை துறைமுகத்தை விட்டு அவசர கதியில் வெளியே கொண்டுவந்து பாதுகாப்பான இடம் ஒன்றில் நிறுத்த வேண்டும் என்பது, கடற்படையின் நிலை.
ஆகஸ்ட் 2-ம் தேதி காலை, துறைமுகப் பகுதியை நோக்கி தொடங்கிய புலிகளின் தாக்குதல்கள், மாலையில் ஓய்ந்திருந்தன. மீண்டும் மறுநாள் காலை தாக்குவார்கள் என ஊகித்திருந்தார் வசந்த கரணகொட.
இந்த நிலையிலேயே, இரவு 11.30க்கு கரணகொடவிடம் இருந்து, அவசர தொலைபேசி அழைப்பு, ஜெட்லைனர் கப்பல் கமாண்டிங் ஆபிசர் நோயல் கலுபோவிலவுக்கு போனது. “யாருக்கும், எதுவும் தெரிவிக்காமல், கப்பலை ஸ்டார்ட் செய்து துறைமுகத்துக்கு வெளியே கொண்டுவாருங்கள்” என்பதே அந்த உத்தரவு.
இந்த உத்தரவு வந்ததும், கலுபோவில வேகமாக செயல்பட்டார். உடனடியாக கப்பலில் இருந்த அனைவரது செல் போன்களையும் ஆஃப் செய்யும்படி உத்தரவிட்டார். கப்பலின் இந்தோனேசிய கேப்டன் உட்பட அனைவரது செல்போன்களும் சேகரிக்கப்பட்டு, பத்திரப்படுத்தப்பட்டன.
கப்பலின் நகர்வு திட்டமிடப்படுகிறது என்ற விபரம், கப்பலில் இருந்த யாருக்கும் சொல்லப்படவில்லை.
நள்ளிரவு 12 மணி.
கப்பலின் கேப்டனை அழைத்த கலுபோவில, கப்பலை ஸ்டார்ட் செய்யும்படி கேட்டுக் கொண்டார். கப்பல் ஸ்டார்ட் செய்யப்பட்டதும், உடனடியாக கப்பலை துறைதுக வாயிலை நோக்கி செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது. கப்பல் வழமையைவிட வேகமாக துறைமுக வாயிலை நோக்கி செலுத்தப்பட்டது. திரிகோணமலை துறைமுகத்துக்கு வெளியே கடலில், இலங்கை கடற்படையின் இரு அதிவேக டோரா படகுகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. அதில் இருந்தவர்களுக்கும், ஜெட்லைனர் கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேறப் போகின்றது என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.
கடற்படையின் தொலைத் தொடர்புகளை விடுதலைப்புலிகள் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதால், முழுமையாக ‘ரேடியோ சைலன்ஸ்’ அமல் படுத்தப்பட்டது.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரு டோரா படகுகளில் இருந்தவர்கள், திடீரென பெரிய வெளிச்சத்துடன் கூடிய பொருள் ஒன்று துறைமுகத்தை விட்டு வெளியே வருவதை கவனித்தார்கள். அது ஒரு பெரிய கப்பல் என்பது அவர்களுக்கு புரிந்தது. ஆனால், யாருடைய கப்பல் என்பது தெரிந்திருக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் கப்பல் ஏதும் துறைமுகத்தில் இருந்து வெளியே வர வாய்ப்பில்லை என்பதால், இந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தாமல் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஜெட் லைனர் கப்பல் துறைமுக வாயிலை கடந்து வெளியே வந்தது.
இந்த நள்ளிரவு நேரத்தில், சம்பூர் பகுதியில் இருந்த விடுதலைப் புலிகளும், கப்பல் ஒன்று வெளியேறுவதை அதன் வெளிச்சத்தில் இருந்து தெரிந்து கொண்டார்கள். அந்தக் கப்பல் எது என்பதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனடியாக வன்னியில் இருந்த மேலிடத்துக்கு தகவல் அனுப்பினார்கள்.
அங்கிருந்து பதில் வந்து சேர்வதற்குள், ஜெட்லைனர் கப்பல் இவர்களது தாக்குதல் ரேஞ்சுக்கு வெளியே போய்விட்டது.
இதிலுள்ள மற்றொரு விஷயம் என்னவென்றால், சம்பூரில் இருந்து மறுநாள் விடுதலைப் புலிகள் தாக்குவார்கள் என வசந்த கரணகொட ஊகித்தது சரியாகத்தான் இருந்தது.
மறுநாள் (ஆகஸ்ட் 3-ம் தேதி) காலை, சம்பூரில் இருந்து திரிகோணமலை துறைமுக வாயிலை நோக்கி ஆட்டிலரி ஷெல் தாக்குதலை நடத்தி, துறைமுகத்தை மூடும்படி வன்னியில் இருந்து சம்பூரில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு உத்தரவு வந்திருந்தது. ஜெட்லைனர் கப்பலை துறைமுகத்துக்குள் முடக்குவதே, இதன் நோக்கம்.
ஆனால், அதற்குமுன் நள்ளிரவில் ஜெட்லைனர் கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேறிவிட்டது.
திரிகோணமலை துறைமுகத்தை விட்டு வெளியேறிய ஜெட்லைனர், இரவோடு இரவாக தெற்கு நோக்கி பயணித்து, காலி என்ற இடத்தில் உள்ள துறைமுகத்தை சென்றடைந்தது.
அங்கே கப்பல் நங்கூரம் இடப்பட்டவுடன், அதுவரை கப்பலுக்குள் நடுநடுங்கியபடி இருந்த இந்தோனேசிய கேப்டனும், அவரது மாலுமிகளும், “உங்களுடைய யுத்தத்துக்காக எங்களுடைய உயிர்களை பணயம் வைக்க முடியாது” என்று கூறிவிட்டு, கப்பலை விட்டு இறங்கி சென்றுவிட்டார்கள்.
கமாண்டர் களுபோவிலவும், அவருடன் இருந்த இலங்கை கடற்படையினரும், ஜெட்லைனர் கப்பலை பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அவர்கள் யாருமே, அந்த கப்பலை செலுத்துவதற்கு அதற்குமுன் பயிற்சி பெற்றிருக்கவில்லை. பின்பு, வேறு டியூட்டிகளில் இருந்த கடற்படையினரை, காலிக்கு கொண்டுவந்து ஜெட்லைனரை செலுத்த வேண்டியதாகி விட்டது.
சம்பூரில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு, ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவு ஜெட்லைனர் கப்பலை கை நழுவ விட்ட விஷயம், மறுநாள் காலை தெரிய வந்தது. அதையடுத்து, திரிகோணமலை துறைமுகத்தை தாக்கும் திட்டத்தை மாற்றிய விடுதலைப் புலிகளின் தலைமை, புதிய தாக்குதல் திட்டம் ஒன்றை செயல்படுத்த உத்தரவு அனுப்பியது.
இலங்கை கடற்படையின்மீது கடும் கோபத்தில் இருந்த புலிகள், மூதூர் கடற்படை தளத்தை நோக்கி தமது ஆட்டிலரிகளை திருப்பினார்கள். அந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்க, அதே நேரத்தில் சில ராணுவ முகாம்களை நோக்கியும் ஷெல் அடிக்குமாறு உத்தரவு வந்தது.
அதையடுத்து கட்டைபறிச்சான், செல்வநகர், தோப்பூர் ஆகிய இடங்களில் இருந்த இலங்கை ராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகளின் ஆட்டிலரி ஷெல் தாக்குதல்கள் தொடங்கின.(தொடரும்)