இலங்கை, கிழக்கு மாகாணம் சம்பூரில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு, ஆகஸ்ட் 2-ம் தேதி (2006) நள்ளிரவு ஜெட்லைனர் கப்பலை கை நழுவ விட்ட விஷயம், மறுநாள் காலை தெரிய வந்தது. அதையடுத்து, திரிகோணமலை துறைமுகத்தை தாக்கும் திட்டத்தை மாற்றிய விடுதலைப் புலிகள், புதிய தாக்குதல் திட்டம் ஒன்றை செயல்படுத்த தொடங்கினர்.
இலங்கை கடற்படையின்மீது கடும் கோபத்தில் இருந்த புலிகள், மூதூர் கடற்படை தளத்தை நோக்கி தமது ஆட்டிலரிகளை திருப்பினார்கள். அந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்க, அதே நேரத்தில் சில ராணுவ முகாம்களை நோக்கியும் ஷெல் அடிக்குமாறு உத்தரவு வந்தது.
அதையடுத்து கட்டைபறிச்சான், செல்வநகர், தோப்பூர் ஆகிய இடங்களில் இருந்த இலங்கை ராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகளின் ஆட்டிலரி ஷெல் தாக்குதல்கள் தொடங்கின.
ஆகஸ்ட் 3-ம் தேதி அதிகாலை 0130 மணிக்கு, விடுதலைப் புலிகளின் ஆட்டிலரி தாக்குதல்கள் தொடங்கின. அதுவரை அமைதியாக இருந்த தோப்பூரில், புலிகளால் ஏவப்பட்ட முதலாவது ஆட்டிலரி ஷெல் இறங்குதுறை அருகே வந்து விழுந்து வெடித்தது. இதில் அங்கு காவல் பணியில் இருந்த இரு போலீஸ்காரர்கள் மயிரிழையில் உயிர்தப்பி, காயமடைந்தனர்.
தொடர்ந்தும், சம்பூரில் இருந்த புலிகளின் தளத்தில் இருந்து ஆட்டிலரி ஷெல்கள் வந்து விழத் தொடங்கின. கட்டைபறிச்சான், செல்வநகர் ஆகிய இடங்களை நோக்கியும், சம்பூரில் இருந்து புலிகள் ஆட்டிலரிகளை ஏவத் தொடங்கினர். இவை அனைத்துமே, ஆகஸ்ட் 3-ம் தேதி அதிகாலையில் தொடங்கின.
ஒருவிதத்தில் பார்த்தால், விடுதலைப் புலிகளின் தோல்விக்கு காரணமான இறுதி யுத்தம் வேகம் எடுத்தது, இந்த அதிகாலையில்தான்.
அதுவரை யுத்த நிறுத்தம் என்று சொல்லிக்கொண்டு, இரு தரப்பும் (புலிகளும், ராணுவமும்) இங்கும் அங்குமாக சிறுசிறு தாக்குதல்களை செய்து கொண்டிருந்தார்கள். அந்த தாக்குதல்கள் சில நிமிடங்களில் முடிந்து போகும்.
குறிப்பிட்ட ஒரு சிறு பகுதியில் நடந்த அந்த தாக்குதல்கள் முடிந்தபின், யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு (வெளிநாட்டவர்கள்) வந்து பார்த்து, அறிக்கை விடுவார்கள். அத்துடன் அது அமுங்கிப்போகும். மீண்டும் சில நாட்களின்பின் வேறு ஒரு இடத்தில் சிறிய தாக்குதல் ஒன்று நடக்கும்.
இப்படியே தொடர்ந்து கொண்டிருந்த நாட்களில்தான், மாவிலாறு அணைக்கட்டை புலிகள் மூடினார்கள். ராணுவம் மாவிலாறை நோக்கி நகர்ந்தது. ஜெட்லைனர் கப்பலை தாக்கினார்கள். அது தப்பிச் சென்றது. 3-ம் தேதி அதிகாலையில் சம்பூரில் இருந்து இருளோடு இருளாக நடந்த இந்தத் தாக்குதல்களை புலிகள் ஏன் நடத்தினார்கள்? இந்த ஆரம்பம், தங்களுக்கு முடிவுரை எழுதப்போகிறது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லையா? இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இரவோடு இரவாக நடந்த இந்த தாக்குதல்களுக்கான உத்தரவை கொடுத்தது யார்?
இந்தக் கேள்விக்கு ஆச்சரியமான பதில் ஒன்று உள்ளது.
வன்னியில் இருந்த பிரபாகரனிடம் இருந்து வந்த உத்தரவல்ல இது. விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தலைமையின் சில மட்டங்களில் எடுக்கப்பட்ட திடீர் முடிவுதான், இந்தத் தாக்குதல்கள். அதை வேறு விதமாக சொன்னால், விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிய காரணமாக இருந்த இறுதி யுத்தத்தின் தொடக்கத்துக்கு, பிரபாகரன் உத்தரவிடவில்லை.
மற்றொரு ஆச்சரியமான விஷயம், என்ன தெரியுமா?
மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகள் மூடியதில்தான் இவை அனைத்துமே தொடங்கி, இறுதி யுத்தம்வரை சென்றன என்று சொன்னோம் அல்லவா? மாவிலாறு அணைக்கட்டு விடுதலைப் புலிகளால் மூடப்பட்டு சுமார் 5 மணி நேரத்தின் பின்னரே, வன்னியில் இருந்த புலிகளின் தலைமைக்கு, அணைக்கட்டு மூடப்பட்ட விஷயம் கூறப்பட்டது. அதுவரை பிரபாகரனுக்கே இந்த விஷயம் தெரியாது.
அப்படியானால், கிழக்கு மாகாணத்தில் தொடங்கிய இந்தத் தாக்குதல்கள் யாருடைய உத்தரவில் நடைபெற்றன?
விடுதலைப் புலிகளின் கிழக்கு தளபதி சொர்ணத்தின் ஆட்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் இவை என்று மட்டும் சொல்ல முடியும். யாரோ வாய்மொழியாக கொடுத்த உத்தரவின்படி இந்த தாக்குதலை தொடங்கியவர்கள், கிழக்கில் உள்ள புலிகளின் கடலோர தளங்களுக்கு பொறுப்பாக இருந்த இருவர். அவர்களது இயக்கப் பெயர்கள், முத்துச்செல்வி, புரட்சி.
அந்த இருவரும், தற்போது உயிருடன் இல்லை.
இந்த தாக்குதல்களை நடத்தும்படி அவர்களுக்கு கூறியது யார்? தளபதி சொர்ணத்தால் கொடுக்கப்பட்ட உத்தரவா… அல்லது, லோக்கலில் எடுக்கப்பட்ட முடிவா… என வன்னியில் இருந்த புலிகளின் தலைமைக்காவது தெரியுமா?
இல்லை.
அதை தெரிந்து கொள்ள முடியாதபடி, அந்த இருவரும் மறுநாள் 4-ம் தேதி மூதூர் டவுனை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்டபோது மூதூரில் சண்டை உச்சத்தில் இருந்தது. எந்த தகவலையும் யாருக்கும் தெரிவிக்கும் நிலை அங்கே இருக்கவில்லை.
இங்கு, இறுதி யுத்தத்தின்போது, கிழக்கு மாகாணத்தில் நடக்காத மற்றொரு சம்பவத்தையும் குறிப்பிடுவது, தொடரை புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும்.
இறுதி யுத்தம் கடைசிக் கட்டத்தை அடைந்த நிலையில், 2009-ம் ஆண்டு மே மாத தொடக்கத்தில், வன்னி, முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.
விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு காரணம் என்ன, பலமாக இருந்த இயக்கம் படிப்படியாக அனைத்தையும் இழந்து, முள்ளிவாய்க்கால் என்ற சிறிய பகுதிக்குள் முடங்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என ‘சற்றே கோபமான’ விவாதம் ஒன்று நடந்தது…. கிட்டத்தட்ட சுயவிமர்சனம் போல.
அதில் கலந்துகொண்ட பலர் இப்போது உயிருடன் இல்லை. குறைந்தபட்சம் இருவர், தற்போதும் இலங்கையில் உள்ளார்கள்.
அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களின்படி:
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விடுதலைப் புலிகளின் பல தளபதிகள், “மாவிலாறிலும், சம்பூரிலும், மூதூரிலும் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே, புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது” என வெளிப்படையாக விமர்சித்தார்கள்.
“அதற்கு காரணமானவர்கள் யார்? யாருடைய உத்தரவில் கிழக்கில் அந்த தாக்குதல்கள் நடந்தன?” என்று சிலர் கோபமாக கேள்வி எழுப்பினார்கள்.
புலிகள் அனைத்தையும் இழந்த நிலையில்…, அடுத்த சில நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியும் ராணுவத்திடம் விழுந்துவிடும், புலிகள் இயக்கமே அழிந்து போகும் என்று இருந்த நிலையில்…, தளபதிகள் மத்தியில் செய்யப்பட்ட சுய விமார்சனங்கள் இவை.
அந்தக் கடைசிக் கட்டத்திலும், மாவிலாறிலும், சம்பூரிலும், மூதூரிலும் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உண்மையில் யார் உத்தரவு கொடுத்தார்கள் என்ற பதில், தளபதிகளுக்கு கிடைக்கவில்லை.
கிழக்கில் தாக்குதல்கள் தொடங்கியபோது, வன்னியில் நடைபெற்ற சில சம்பவங்கள், தொலைத்தொடர்புகள் ஆகியவற்றையும், கிழக்கில் நடந்த யுத்தம் பற்றிய விபரங்களையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் படிக்கலாம். (தொடரும்)
|