Wednesday, March 17, 2010
IAS, IPS உள்ளிட்ட Civil Services போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை http://www.saidaiduraisamysmanidhaneyam.com/ என்ற மனிதநேய அறக்கட்டளையின் இணையதளம் மூலம் இலவசமாகப் பெறலாம்" என்று அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமி கூறினார்.
மனிதநேய அறக்கட்டளை, சென்னை லியோ கிளப் ஆகியவற்றின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் கடந்த 10.03.2010 புதன்கிழமை நடைபெற்றது. இதில் மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமி கலந்து கொண்டு பேசும் போது, "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளை எழுத ஆர்வம் இருந்து, அதேவேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இளைஞர்களை, போட்டித் தேர்வுகளை எழுத ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
மனிதநேய அறக்கட்டளை ஆண்டுதோறும் 10ஆம் வகுப்புத் தேர்வில் 450 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவர்கள் 50 பேரை தத்தெடுத்து, அவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2, வகுப்புகளில் இலவசமாகப் படிப்பளித்து, அவர்களை ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் போன்ற தேர்வுகளுக்குத் தயார்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் 100 பேர் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கின்றனர். இணையதளத்தில் முதல்நிலைத் தேர்வுகளுக்குத் தேவையான புவியியல், அரசியல், அறிவியல், சமூகவியல், பொதுநிர்வாகம் ஆகிய பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஜெனரல் ஸ்டடிஸுக்குத் தேவையான புத்தகங்கள், தற்கால நிகழ்வுகள், பயிற்சி மையங்களின் வகுப்பறைகளில் ஆசிரியர் எடுக்கும் பாடங்கள், ஏற்கெனவே தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களின் பாடக்குறிப்புகள், வினா வங்கிகள் போன்றவையும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக் கொள்ளலாம்" என்று கூறினார். இணையத்தின் மூலம் கிடைக்கவிருக்கும் இப்பயிற்சி வகுப்புகளின் பாடங்கள், இலவசப் பயிற்சி வகுப்புகளில் நேரடியாகக் கலந்து கொண்டு பயன்பெற இயலாத கிராமீய மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.
பத்தாம் வகுப்பில் 450 மார்க் எடுத்தும் பொருளாதாரப் பற்றாக் குறையால் மேற்கொண்டு படிக்க முடியாமல் கல்வி மறுக்கப் படுவது அநீதியாகும். ப்ளஸ்-1 ப்ளஸ்-2 முதல் பள்ளிக் கல்வியையும் ஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் பட்டங்களுக்கான பயிற்சிகளையும் இலவசமாக வழங்கும் மனிதநேய அறக்கட்டளையினரும் அதன் தலைவர் சைதை துரைசாமி அவர்களும் வாழ்த்துகளுக்கு உரியவர்கள்.
இந்நேரம்.காம் http://www.inneram.com/201003117082/ips-ias-trainning-courses-learning-fecility-through-internet |