மனிதன் இவ்வுலகில் செய்கின்ற செயல்கள் குறித்து மனிதனிடம் கேள்வி, கணக்குக் கேட்க வேண்டுமானால் அவன் மனிதனுக்கு முதலில் எதைச்செய்ய வேண்டும், எதைச்செய்யக் கூடாது என்பது குறித்து விளக்கம் வழங்க வேண்டும்; இவ்வாறு விளக்கம் வழங்காது அவனிடம் கேள்வி கேட்பதும், தண்டிப்பதும் நியாயமாகாது. எனினும், இறைவனோ நீதியானவன்; அவன் நீதியையே விரும்புபவன். எனவே, நீதியின் இருப்பிடமாய் இலங்கும் இறைவன் முதலில் தனது இறைத்தூதர்கள் மூலம் மனிதனுக்கு எதைச்செய்ய வேண்டும், எதைச்செய்யக் கூடாது என்பதைத் தெளிவாகச் சொல்லி விடுகிறான். அதன் பின்பு அவன் வழிகெட்டுவிட்டால், வழிகெட்டமைக்காகத் தண்டிக்கின்றான்; இப்படித் தனக்கென வகுத்துக் கொண்டுள்ள இறைநியதியை இறைவன் இறைத்தூதின் மூலமே நிலை நாட்டுகின்றான்.
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (குர்ஆன் 10:47 )
மனிதனுக்கு நேர்வழி காட்டுவதுடன் நின்றுவிடாது, அவ்வழி நடப்போருக்கு இம்மை, மறுமையில் நல்வாழ்வு உண்டென்று நன்மாராயமும் கூறுகின்றான். மனிதன் நேரான பாதையிலிருந்து தடம்புரண்டு, குழப்பங்களை விளைவித்து, வழிகேட்டில் வீழ்ந்தால் இம்மை, மறுமையில் அவன் எதிர்நோக்கும் தீய விளைவுகளையும், அபாயங்களையும் பற்றி எச்சரிக்கையும் செய்கின்றான். இவ்வாறு மனித இனத்துக்கான தனது செய்தியை தூதுத்துவம் மூலம்தான் அவன் உலகிற்கு வழங்கியுள்ளான். இதனையே இறைவன் தன்திருமறையிலே பின்வருமாறு கூறுகின்றான்.
இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?” என்று கேட்டார். (குர்ஆன் 7:65 )
இதன் பின்னரும் திருந்தாத சமுதாயங்களை அல்லாஹ் தண்டித்தான். இத்தகைய சமுதாயங்களை திருக்குர்ஆன் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகிறது.
இன்னும் “ஆது” “ஸமூது” (கூட்டத்தாரையும்), ரஸ் (கிணறு) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்). (குர்ஆன் 25:38 )
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். (69:6)
இந்த வரலாறுகளின் மூலம் அல்லாஹ் நமக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றான்.
ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், “ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) போன்ற வேதனையைப் போல் (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!. (குர்ஆன் 41:13) )
அழிக்கப்பட்ட சமுதாயத்தினர் தங்களது வலிமையில் மிக்க நம்பிக்கையுடையுடனும் அகம்பாவத்துடனும் இருந்தனர். (இவர்களது தொழில் நுட்பங்கள் இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. நாம் முன்னேறியவர்களா இல்லது இவர்கள் முன்னேறியவர்களா என்ற கேள்விக்கு திடமான ஒரு பதில் இல்லை எனலாம்.)
அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் எனபதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள். (குர்ஆன் 41:15)
குர்ஆன் கூறும் அழிக்கப்பட்ட சமுதாயங்கள் (English) / PERISHED NATIONS VIDEO PART - 1
குர்ஆன் கூறும் அழிக்கப்பட்ட சமுதாயங்கள் (English) / PERISHED NATIONS VIDEO PART - 2