வாராதோ அந்த நாட்கள்!!!
... ஆற்று மணல்வெளியில் அழகாய் வீடுகட்டி ஆடித் திரிந்த நாட்கள். மாற்றான் தோட்டத்திலே மாங்காய் பறித்துவிட்டு மாட்டித் தவித்த நாட்கள்.
மரத்தில் கயிறு கட்டி அமர்ந்து ஊஞ்சலாடி மகிழ்ந்து இருந்த நாட்கள். அறுந்து கீழ்விழுந்து அடிகள் தாங்கிக் கொண்டும் ஆடி மகிழ்ந்த நாட்கள்
திண்ணை மீதமர்ந்து சின்னஞ்சிறு கதைகள் சொல்லி மகிழ்ந்த நாட்கள் கண்ணை கருந்துணியால் கட்டி மற்றவரை கண்டு பிடித்த நாட்கள்.
பைக்குள் பம்பரத்தை பதுக்கி வைத்துக் கொண்டு பள்ளி சென்ற நாட்கள். சைக்கிள் டயர் கிடைத்தால் "பைக்"கே கிடைத்ததென உருட்டி மகிழ்ந்த நாட்கள்.
சிகரெட் அட்டைகளை கரன்சி நோட்டுகளாய் சேர்த்து மகிழ்ந்த நாட்கள் தகர டின் முழுக்க பளிங்கு கோலிக்குண்டு போட்டு வைத்த நாட்கள்
மன்னன் மந்திரியாய் பள்ளி மேடையிலே மாறி நடித்த நாட்கள் வண்ணப் பட்டம் செய்து வாலும் காலும் வைத்து வானைத் தொட்ட நாட்கள்.
அடுத்த தெருப்பசங்க அணியை கபடியினில் அடித்துத் துவைத்த நாட்கள். கிடைத்த வெற்றியினில் கிறுக்குப் பிடித்துத் தலை கனத்துத் திரிந்த நாட்கள்.
கொட்டும் மழை நடுவே குளிரில் நடுங்கிக் கொண்டு குதித்து மகிழ்ந்த நாட்கள். திட்டும் செம அடியும் சேர்த்து வாங்கிக் கொண்டு துடைத்துப் போட்ட நாட்கள்.
வீட்டுக் கவலையின்றி வேலை ஏதுமின்றி -விளை யாடித் திரிந்த நாட்கள் ஆட்டம் போட்டுவிட்டு அன்னை மடிதனிலே அயர்ந்து படுத்த நாட்கள்.
சின்னஞ் சிறு வயதில் எந்தத் துயருமின்றி சிரித்துப் பறந்த நாட்கள். என்ன இனிமை அவை என்ன இனிமை அவை எங்கே அந்த நாட்கள்.
-சிவகுமாரன்
|