பனங்கொட்டையை பந்தாக்கி தென்னமட்டையை 'பேட்'டாக்கி எல்லைக்கல்லை 'ஸ்டம்ப்'பாக்கி விளையாடத் துவங்கிய காலமது..
பின்னாளில் பனங்கொட்டையை விழுங்கியது ரப்பர் பந்து.. தென்னமட்டைக்கு ஓய்வு கொடுத்தது அந்த ஆசாரி மவனோட மரசட்டம்.. கருவ குச்சிகள் எல்லைகற்களை பெயர்த்துவிட்டு ஸ்டம்ப்புகளாக காலூன்றிக்கொண்டன..
எரிக்கிற வெயில் பூரா இந்த பயலுக தலையிலதான்.. இதுல அப்புடி என்னாதான் இருக்கோ தெரியல.. அம்மாக்களின் வசவுகள் காற்றில் பறந்தன ஸ்டம்பர் பந்தாக...
மாங்கா அடிக்கிறான்டா அவன்.. அவனுக்கு பவுலிங் குடுக்காதிங்கடா.. அன்றைக்கு கோச்சிகிட்டு போனவன்தான் 'அவன்'..
டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..? யான்..? காசுலதான் டாஸ் போடுவியா..? இந்தா சில்லு... எச்சா மலையா போடு..
எல்லாரும் காசு போட்டு வாங்கிய முதல் 'பேட்'தான் அன்றைக்கு எங்களுக்கு செல்லப்பிள்ளை.. சைக்கிள் 'டியூபுகள்' மறுபிறப்பெடுத்தன பேட் கிரிப்களாக...
பக்கத்து ஊர் பசங்களுடன் விளையாடிய 'பெட்' மேட்சுகள் சண்டையில்தான் முடிந்தன..
இனிமே அவனுககூட விளையாடகூடாதுடா.. வாச்சாங்குளி அடிக்கிறானுக..
'பேட்'ல படவே இல்லடா.. எங்கம்மா மேல சத்தியமாடா.. நம்ப மறுத்த அவன்கள்மீது வந்த கோபம் 'பேட்'டை தூக்கியெறிந்ததிலும் அடங்கவில்லை..
எங்கஊரு 'டோர்னமன்ட்டில்' வாச்சாங்குளியடித்து முதல் பரிசு 222ரூவா வாங்கிய மகிழ்ச்சியில் நாலுநாள் தூங்காமல் கனவில் சிக்ஸர் அடித்தது மறக்கவில்லை...
நான் வேகமாக பந்துவீசியதால் என் பெயர் டொனால்டு.. அவன் குள்ளமாக இருந்ததாலேயே சச்சின் ஆகிவிட்டான்.. எல்லா கேட்சுகளும் பிடிச்சவன் பெயர் ஜான்டி ரோட்ஸ்..
மிட்டாய் வாங்க வைத்திருந்த காசுகளெல்லாம் பந்துகளாக மாறிப்போயின சனி ஞாயிறுகளில்...
'டாஸில்' ஜெயிச்சாலே முதலில் 'பேட்'டை தூக்கிக்கொள்ளும் 'அவன்'மீது இப்போதும் எரிச்சல்தான்..
கருவகாட்டில் போய்விழுந்த பந்து கடைசிவரைக் கிடைக்கவேயில்லை..
இப்படித்தான் காணமல்போன பந்துகளாய் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன கடந்தகால நினைவுகளும்..
Thanks - ஃபீனிக்ஸ் பாலா..
இன்று நான் படித்ததில் பிடித்தது..!
===================================================
|