என் ஊர் - பாசத்துல செழிப்பான பூமி ! - ஏர்வாடி ராதாகிருஷ்ணன்
என்.சுவாமிநாதன், படங்கள்: ரா.ராம்குமார்
''திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பக்கத்தில் உள்ள ஏர்வாடிதான் என்னோட சொந்த ஊரு. பாசத்துல செழிப்பான பூமி. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஏர்வாடின்னு ஒரு ஊர் இருக்கு. இதுல என்ன விசேஷம்னா இரண்டு ஏர்வாடியுமே இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதிகள்!'' கண்களில் நினைவுகள் மின்ன தன் ஊர் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார் ஏர்வாடியார் என்று செல்லமாக அழைக்கப்படுகிற எழுத்தாளர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்.
''ஊர் முழுக்க இஸ்லாமியச் சகோதரர்களின் வீடுகள் இருந்தாலும் எங்க ஊரில் ரொம்ப வருஷங்களாக அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஒருத்தர்தான் பஞ்சாயத்துப் பிரசிடென்ட்டா இருந்தாரு. அந்த அளவுக்கு இந்து, முஸ்லிம் ஒற்றுமையில் இணக்கமான ஊரு இது. எங்க ஊருக்கு மத்தியில் 'பெரிய நாயகி திருவழுதீஸ்வரர் கோயில்’னு ஒரு அம்மன் கோயில் இருக்கு. இந்தக் கோயிலில் நடக்கும் தேர்த் திருவிழா ரொம்ப விசேஷம். இந்தக் கோயில் தேரோட்டத்தில் இஸ்லாமியத் தோழர்களும் வடம் பிடிச்சு இழுப்பாங்க. எங்க ஊரைச் சுத்தி செழிப்பான பகுதிதான். மேற்குத் தொடர்ச்சி மலை, மலை நம்பிக் கோயில், களக்காடு புலிகள் சரணாலயம்னு ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்களும், ஆலயங்களும் உண்டு. ஏர்வாடியில் கீழூர், மேலூர்னு ரெண்டு பகுதிங்க இருக்கு. கீழூர் பகுதிவாசிகளோட முக்கியத் தொழில் விவசாயம். ஆரம்ப காலத்தில் ஏர்வாடியில் உயர்நிலைப் பள்ளி கிடையாது. டேனாவூர், வள்ளியூர், களக்காடுனு பக்கத்து ஏரியாக்களில் படிக்கப் போவாங்க.
மேலூர் ஜங்ஷன்தான் இன்னிக்கு ஏர்வாடி பஸ் ஸ்டாப். ஸ்கூல் படிக் கிறப்ப அங்க இருந்த வெங்கடாசலம் வெற்றிலை பாக்குக் கடைதான் எங்களுடைய அரட்டை ஸ்பாட். உள்ளூர் விஷயம் முதல் உலக விஷயங்கள் வரை அங்கதான் பேசுவோம்.
என்னுடைய அப்பா ராணுவ அதிகாரியா இருந்தாரு. இரக்க குணம் அதிகமா உள்ளவர். எங்க குடும்பம் வறுமையான குடும்பம்தான். நான் எட்டாம் வகுப்பு படிச்சப்ப, எனக்கு அறிவியல் பாடம் எடுத்த நடராஜ பிள்ளை என்னை வீட்டுக்கு வந்து கூட்டிட்டுப் போய் டிபன் வாங்கிக் கொடுப்பார். சாயங்காலம் ஃப்ரீயா டியூஷனும் சொல்லிக் கொடுப்பார். இதே மாதிரி சீதாராமன், சூரிய நாராயணன், அந்தோணி முத்துன்னு நிறைய ஆசிரியர்கள் என்னை வளர்த்தெடுத்தாங்க. பள்ளிக்கூடத்தில் புத்தகம் வாங்க வசதி இல்லாம, பாடம் நடத்துறப்பவே வகுப்பறையில் கூர்ந்து கவனிப்பேன். அப்படிக் கவனிச்சதையே என் சொந்த நடையில் எழுதுவேன். காலப்போக்கில் என் எழுத்து வளமாக அதுவே காரணமாகிடுச்சு.
|
|
எங்க ஊரைச் சேர்ந்த என்.பி.அப்துல் காதர் சிறந்த தி.மு.க. மேடைப் பேச்சாளர். வளமான குடும்பத்துல பிறந்து, கட்சிக் கூட்டம் நடத்தியே வறுமையானவர். வீடு நிறையப் புத்தகங்கள் வெச்சிருப்பார். அன்றைய காலத்தில் அவருடைய வீடுதான் எனக்கு உலகத்தை அறிமுகப்படுத்திய நூலகம். இப்போது தி.மு.க. பொதுக் குழு உறுப்பினரா இருக்கிற அலிசேக் மன்சூர், அமரர் அ.மீரான், தோல் வணிகம் நடத்திவரும் அப்பாஸ், போட்டித் தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய நண்பர் கம்மர் அப்துல் காதர்னு திரும்பிய திசையெல்லாம் ஏர்வாடியில் நான் நன்றி சொல்ல வேண்டிய மனிதர்கள் அதிகம்.
என் ஊரில் என்னை ரொம்ப கவர்ந்தவர் என்னோட தாத்தா பொன்னையாதான். ஊரில் அவருக்குன்னு தனி செல்வாக்கு இருந்துச்சு. ஏர்வாடியில் வடக்கு ரத வீதியில் பொற் கொல்லர்கள் நிறைய இருப்பாங்க. அங்கேதான் என் வீடு இருந்துச்சு. என் தாத்தா பொன்னையாதான் இஸ்லாமியர்களுக்கு நகை செஞ்சு தருவாரு. திடீர்னு ஒருநாள் எங்க தாத்தா இறந்துட்டாரு. உடனே எங்க பாட்டி நகை செய்யத் தங்கம் கொடுத்தவங்ககிட்டே தங்கத்தை திருப்பிக் கொடுத்தாங்க. 'பொன்னான பொன்னையாவையே இழந்துட்டோம். இனி எங்களுக்குப் பொன் எதுக்கு? நீங்களே உங்கப் பாதுகாப்புக்கு வெச்சுக்கங்க?’னு சொல்லி பாட்டிகிட்டேயே இஸ்லாமிய சகோதரர்கள் நகைகளை கொடுத்துட்டுப் போயிட்டாங்க. நான் சொன்னேன்ல... பாசத்துல செழிப்பான பூமின்னு.. அதுக்கு இதுவே சாட்சி!''
Thanks: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=21330
|