நம்ம ஊரு மெயின்ரோட்டின் வடக்கு பகுதியில் உள்ள சைக்கிள் கடைகள் பற்றி பார்ப்போம். சேவுக்கனி கடைக்கு பக்கத்துல உள்ள ஒரு முக்கியமான சைக்கிள்கடை - சைக்கிள்கடை என்று சொல்வதை விட - சைக்கிள் மெக்கானிக் ஷாப...் - என்று சொல்லலாம். சரக்கி மீரான் முஹைதீன் காக்காவின் சைக்கிள் மெக்கானிக்கல் ஷாப். ஊரில் உள்ள அனைத்து வி.ஐ.பி.களின் சைக்கிள்களும், பள்ளி ஆசிரியர்களின் சைக்கிள்களும இங்குதான் பழுது பார்க்கப்படும். ஓவர் ஆயிலிங், பஞ்சர் பார்ப்பது - டயர் டியூப் மாற்றுவது, பிரேக் ரிப்பேரிங் என அனைத்து வகையான சைக்கிள் ரிப்பேரிங்கும் இங்குதான் நடக்கும். அந்த கடையில் சைக்கிள் பழுதுபார்த்தல் மட்டுமின்றி, வாடகைக்கு பெட்ரோமாக்ஸ் லைட், குறிப்பாக அந்த காலத்து கல்யாண ஊர்வலங்களில் பயன்படுத்தப்படும் அதிக வெளிச்சமுள்ள பெட்ரோமாக்ஸ் லைட் போன்றவை வாடகைக்குக் கிடைக்கும். அந்த கடைதான் நம்ம ஊரு 'வணக்கம் ஐயா' சந்தனத்தின் வாசஸ்ஸதலமும் கூட. தவிர அந்த கடையில் நம்ம ஊரின் சில வி.ஜ.பி.கள் அமர்ந்து அரட்டை அடிப்பதை பார்க்கலாம். குறிப்பாக சிங்கப்பூர் ரிடர்ன் பெர்னான்டஸ் சாச்சா, 8வது தெரு கோ.அ.மு. மீரான், காக்கா, நம்ம ஊர் இப்போதைய பஞ்சாயத்து தலைவர் நண்பர் ஆசாத் அவர்களின் தந்தை முஹம்மது முகைதீன், எங்களது கணக்கு ஆசிரியர் முத்துப்பாண்டி சார், தமிழ் ஆசிரியர் ஐ. திரவியம் சார், வரலாற்று ஆசிரியர் கணேஷன் சார் என பல பிரபலங்கள் சங்கமிக்கும் இடம் அதுதான்.
அதனை தாண்டி வடக்கு நோக்கி வந்தால், ஷாஜஹான் தெரு முனையின் வடக்குப் பக்கம் திரவியம் சைக்கிள் கடை. நம்ம ஊரில் முதலில் சிறிய சைக்கிள் (கட்ட வண்டி) வந்தது அந்த கடையில்தான். முதன்முதலாக சைக்கிள் ஓட்ட கற்று; கொள்பவர்கள் வாடகை;ககு எடுப்பது கட்ட வண்டிதான். ஏறி உட்காருவதற்கும், கீழே விழுந்தாலும் அதிகம் அடிபடாமல் இருப்பதற்கும் ஏதுவாக இருப்பதால் அந்த கடையில் உள்ள அந்த சின்ன சைக்கிளுக்கு கிராக்கி அதிகம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களின் அட்வான்ஸ் புக்கிங் எல்லாம் செய்வது உண்டு. சில வேளைகளில் மொத்தமாக புக்கிங் செய்யப்படுவதும் உண்டு. அந்த கடையின் உரிமையாளர் ஐயா திரவியம் அவர்கள் நல்ல சைக்கிள் மெக்கானிக் என்பதைவிட, திறமையான எலும்பு முறிவு சரிபடுத்தும் நிபுணர். அநேகமான நாட்களில் அவரது கடை அடைத்தே கிடக்கும், எவராவது கால் முறிந்தவர், கை முறிந்தவர்கள் இருப்பின், அவர்களுக்கு வைத்தியம் பார்க்க வெளியூர் சென்று விடுவார். அந்நாட்களில் அநேகமாக சைக்கிள் கடைக்கு விடுமுறைதான். அவரது கடையில் உள்ள அந்த கட்ட சைக்கிளில்தான் நான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டேன். அதுவும் எட்டாம் வகுப்பு முடிந்த அந்த கோடைகால விடுமுறையில்.
அதற்கும வடக்கு பக்கம் நூர்தீன் காய்கறி கடை தாண்டிவந்தால் அந்தோணியார் சைக்கிள் கடை. நம்ம ஊரின் காங்கிரஸ் பிரமுகர் ஜெர்மான்ஸ் சாச்சா அவரால் நடத்தப்படும் அந்த கடை இன்னும் இருக்கிறது. இப்போது சைக்கிள் வாடகைக்கு உண்டா என்பது தெரியவில்லை. நம்ம ஊரில் அதிகமான வாடகை சைக்கிள்கள் இருக்கும் கடைகளில் அதுவும் ஒன்று. வாடகைக்கு சைக்கிள் தவிர, அந்த கடையில் போட்டோக்களுக்கு ஃப்ரேம் போட்டுக் கொடுப்பதும் உண்டு. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)
|