நம்ம ஊர் பஸ் ஸ்டான்ட்க்கு எதித்தார்போல் ரோட்டுக்கு மேல் பக்கம் ஒரு நாட்டு மருந்து கடை உண்டு. அந்த கடையில் நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சும் பல மூலிகைகள் கொண்ட பலமணக்கட்டு கிடைக்கும். அந்த கடைக்கு தெற்குப் பக்கம் லெப்பைவளவுத்தெருவைச் சார்ந்த எனது வகுப்புத்தோழன் கனியுடைய (தற்போது ஜூபைலில் உள்ள சவூதி கேட்டரிங் அன்ட் காண்ட்ராக்டிங் கம்பெனியில் பணி புரிகிறான்) ...வாப்பா அவர்களால் நடத்தப்பட்ட எஸ்.எம்.கே. சைக்கிள் மார்ட். பின்னர் அந்த கடை செய்யது ஸ்டோருக்கு வடக்குப் பக்கம் உள்ள கடைக்கு மாற்றப்பட்டது. இப்போது அந்த இடத்தில் நம்ம ஊரின் திமுக பிரமுகர், தலித் சகோதரர் இ.வேலு வுக்குச் சொந்தமான அலுவலகம் உள்ளது. எஸ்.எம்.கே சைக்கிள் மார்ட் உரிமையாளர் மற்ற வாடகைக் கடை உரிமையாளர்களை விட சற்று வித்தியாசமானவர். தனது கடை சைக்கிள்களை தனது சொந்த குழந்தைகளைவிட அதிகம் கவனமாக பராமரிக்கக்கூடியவர். சிறியவர்களுக்கு கண்டிப்பாக சைக்கிள் கிடையாது. யார் வாடகைக்குச் சைக்கிள் எடுக்கச் சென்றாலும் பல சரத்துக்கள் இருக்கும். 'கல், முள் கண்டா இறங்கு. தண்ணியை கண்டா தூக்கு'. அதிகம் தூரமான பகுதிகளுக்கு குறிப்பாக கட்டளை, ஆவரந்தளை, புலியூர்க்குறிச்சி, வடுகீச்சிமதில், சிறுமுளஞ்சி, பெருமுளஞ்சி போன்ற முட்கள் நிறைந்த பகுதிகளுக்கு சைக்கிள்கள் கொடுக்கப்படுவதில்லை.
பஸ்ஸ்டான்ட்டு கட்டிடத்திற்கு அடுத்த கட்டிடத்தில் லெப்பைவளவைச் சார்ந்த எனது கல்லூரித்தோழன் பீர்சாகிப் உடைய வாப்பா, சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் கடை வைத்திருந்தார். புதிய சைக்கிள் உட்பட சைக்கிளுக்குத் தேவையான அனைத்து ஸ்பேர் பார்ட்ஸ்களும் அந்த கடையில் கிடைக்கும். அத்தோடு சில எலெக்ட்ரிக் பொருட்களும். இப்போதும் அந்த கடையில் சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் சாமான்கள் விற்கப்படுகிறது. அதனை நடத்துவது எனது பள்ளித் தோழன் சார்லஸ் அவனது குடும்பத்தினர்.
ஜசிஎஸ் காப்பித்தூள் கடைக்கு வடக்கு பக்கத்து கடையில் 7வது தெரு மணியாரப்பிள்ளை ஷாகுல்ஹமீது காக்கா அவர்கள் சைக்கிள் மெக்கானிக்கல் ஷாப் வைத்திருந்தார்கள். அவர்கள், மற்றும் அவர்களது தம்பி சாகிப் காக்கா ரெண்டு பெருமே நல்ல சைக்கிள் மெக்கானிக்குகள். பின்னர் அந்த மெக்கானிக்கல் ஷாப் நபீலா கம்யூனிகேஷன் கடைக்கு அடுத்த வடக்கு பக்கத்து கடையில் இயங்கியது.
நம்ம பைத்துஸ்ஸலாம் முகநூல் குழும உறுப்பினர் அன்சர்தீன் அவர்களின் வாப்பா செட்டிலெப்பை தாவூத் அவர்களின் கடை தற்போதைய நூர் காம்ப்ளக்ஸிற்கு வடக்குப் பக்கம் உள்ள ஒரு சிறிய இடத்தில் நடந்தது.
அதற்குட் வடக்கே தற்போதைய நவாப் ஸ்வீட் ஸ்டால் இருக்கும் இடத்தில் ஜீனத் சைக்கிள் மார்ட் என்ற வாடகை சைக்கிள் கடை இருந்தது. இந்த கடையில் அதிகம் சின்ன சைக்கிள் (கட்ட சைக்கிள்கள்) வாடகைக்குக் கிடைக்கும். எங்கள் காலத்து சிறுவர்களின் சைக்கிள் கற்றுக் கொள்ளும் ஆசையை பூர்த்தி செய்ததில் அதிகம் பங்கு இந்த கடைக்கு உண்டு. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)
|