Posted By:peer On 5/24/2013 |
|
அப்போது நம்ம ஊரில் சினிமா தியேட்டர் கிடையாது. நம்ம ஊரை அடுத்துள்ள வள்ளியூரில் அருணா தியேட்டரும், களக்காட்டில் பாக்கியலெட்சுமி தியேட்டரும், நான்குநேரியில் ஒரு தியேட்டரும் உண்டு. எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமா பார்ப்பதில் நாட்டம் கிடையாது. இருப்பினும் எப்பவாவது ஒருமுறை வள்ளியூருக்கு திரைப்படம் பார்க்கச் செல்வதுண்டு. பஸ் ஏறி போகவெல்லாம் பொருளாதாரம் கிடையாத...ு. சினிமா டிக்கெட் 40 காசு. பஸ்ஸூக்கு போகவர என்பதெல்லாம் 2 ரூபாய் செலவாகிவிடும். அபபோதைய 2 ரூபாய் என்பது இன்றைய 200 ரூபாய்க்குச் சமமானது. எனவே மிகப்பெரிய பட்ஜெட் போடப்பட்டு எனது சினிமா பார்க்கும் நாட்டம் நிறைவேற்றப்படும் அதற்கு பெரிதும் துணைபுரிவது இந்த வாடகை சைக்கிள்தான்.
2 பேர் இணைந்து கொள்வது. வாடகை சைக்கிளுக்கு ஒருவர் காசு கொடுப்பது. சினிமா டிக்கெட்டிற்கு இன்னொருவர் காசு கொடுப்பது என்கிற ஒப்பந்தம் போடப்படும். வள்ளியூருக்கு சினிமாவிற்குச் செல்வதென்றால் என்னோடு இணைந்து கொள்வது எனது சாச்சி மகன் (கட்டளைத்தெரு) முகைதீன்தான். 1 மணிக்கு சாப்பிட்டுவிட்டு கோவில் வாசல் செல்வது. தேரடி மூட்டில் வெங்கடாசலம் அண்ணாச்சியின் தேவி சைக்கிள் மார்ட்டில் கேரியர் வைத்த சைக்கிள் அரைநாள் வாடகைக்கு எடுப்பது. சைக்கிள் வாடகைக்கு எடுக்கும்போதே வெங்கடாசலம் அண்ணாச்சியின் கேள்விகள் சி.பி.ஐ. லெவலுக்கு இருக்கும். 'ரெண்டு பேரா போறிய? படத்துக்குத்தானே? கரெக்டா படம் முடிஞ்ச உடனே திரும்பிரனும். என்னப்போ?' என்கிற கேள்விக்கணைகளும், ஆலோசனைகளும், புத்திமதிகளும் அதிகமாக இருக்கும். அதுவும் சினிமாவுக்கு என்றால் உடனடியாக சைக்கிள் கிடைக்கும். ஏனெனில் சினிமா பார்க்கும் அந்த 3 மணி நேரமும் சைக்கிள் ஓடாமல் - தேய்மானத்திற்கு உள்ளாகாமல் இருக்கும் என்கிற ஆசைதான்.
சரியாக 75 காசுகள் வாடகை. முன்பணமாக கொடுக்கப்பட்டுவிடும். ஆளுக்கு 1 ரூபாய்தான் வைத்திருப்போம். 75 சாசு அரைநாள் சைக்கிள் வாடகை போக பாக்கி 25 காசுகள் ஒருவரிடம் மீதம் இருக்கும். மற்றவர் சினிமாவுக்கு தரை டிக்கெட் எடுக்க வேண்டும். 1 டிக்கெட் 40 காசு வீதம் 80 காசுகள் செலவிடுவார். அவரிடம் 20 காசுகள் மிச்சமிருக்கும். 10 காசுகள் சைக்கிள் பார்க்கிங் காசு கொடுக்க வேண்டும். பாக்கியுள்ள பணத்தில் (பணத்தில் என்ன பணத்தில் பைசாவில்) 15 காசுகள் வீதம் 2 டீ. 30 சாசுகள், ஆக 5 காசுகள் மிச்சத்தோடு, வீடு வந்து சேருவோம்.
வெங்கடாசலம் அண்ணாச்சியின் தேவி சைக்கிள் கடை சைக்கிள்கள் நன்றாக பராமரிக்கப்பட்டு இருக்கும். பின்பக்க கேரியரில் ஒருவர் சைக்கிள் ஓட்டுவது போலவே அமர்ந்துகொள்ள முன்பக்க சீட்டில் சைக்கிள் ஒட்டுபவரும். இரண்டு பேரும் பெடலில் கால்வைத்து ஓட்டி, சரியாக 10 நிமிடங்களில் ஏர்வாடியில் இருந்து வள்ளியூர் வந்து அடைந்து விடுவோம். வள்ளியூரில் அருணா தியேட்டரில் மதிய காட்சிகள்தான் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் வெளியான சினிமா எனில் கூட்டம் அலைமோதும். இருப்பினும் டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிடுவொம். அடுத்து சினிமா பார்க்க பொருளாதாரம் சேர்க்கும் முயற்சி. அது எப்படி? (இன்ஷா அல்லாஹ் தொடரும்)
|