Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஆருயிர் மைந்தனுக்கு அன்னையின் அழகிய வழிகாட்டுதல்!
Posted By:peer On 11/24/2013 2:45:50 AM

காலங்கள் மாறிவிட்டன. எல்லாம் வெட்டவெளிச்சமாகக் காட்டப்படுகின்றன. ஒரு காலத்தில் அனைவரும் பேசக் கூச்சப்பட்ட விஷயங்கள் இன்று சர்வ சாதாரணமாக அலசப்படுகிறன.

ஆபாசம்... எங்கு பார்த்தாலும் ஆபாசம்...! வீட்டின் நடுப் பகுதி வரை தொலைக்காட்சி வழியாக ஆபாசம் அலை மோதுகிறது. சிறு வயதிலேயே அனைத்து ஆபாசங்களையும் கண்டே குழந்தைகள் வளர்கின்றன.

இதன் விளைவு – பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன!

பாழாய்ப் போன சினிமாக்களைப் பார்ப்பதனால் சிறு வயதிலேயே கை, கால் வைத்து காதல்கள் முளைக்கின்றன. கண்டதும் காதல், சாகும் வரை காதல், காதலுக்காக உயிர் நீத்தல் தியாகிப் பட்டம் என்று செயற்கைகளை சினிமாக்கள் அள்ளித் தெளிக்கின்றன.

இவற்றைப் பார்க்கின்ற பிஞ்சு உள்ளங்களில் ஆழப் பதிகின்றது நஞ்சு. கண்டவனோடும் ஓடிப் போகும் அவலம்! நம் சமுதாயக் கண்களாம் பெண்களிடம் இப்பொழுது இது அதிகரித்து வருகின்றது.

பிள்ளைகளைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள். பள்ளிக் கூடங்களுக்கு அனுப்ப பயம். கல்லூரிக்கு அனுப்ப பயம். யாரையும் தன் மகன் காதலித்து விடுவானோ, எவனோடும் தன் மகள் ஓடிப்  போய் விடுவாளோ என்று அன்றாடம் அலறும் எத்தனையோ பெற்றோர்கள். பதைபதைக்கும் மனதுடனேயே அவர்கள் காலத்தைத் தள்ளுகின்றார்கள்.

இந்நிலையில்தான் அந்தச் சம்பவத்தை நான் கேள்வியுற்றேன். கல்லூரிக்குச் செல்லும் ஒரு விடலைப் பருவ மாணவனின் தாய் தன் மகளுடன் நடந்து கொண்ட விதம். அந்தத் தாயின் அழகிய அணுகுமுறை என் காதுக்கு எட்டியது. என் மனதை ஈர்த்தது. அதனை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டால் நலம் என்று என் மனம் நாடியது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.

வெளியூரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவன் பெருநாள் விடுப்பில் ஊர் வந்திருந்தான். அஸ்ர் தொழுகைக்காக அவன் மஸ்ஜிதுக்குச் சென்றிருந்த வேளையில் அவனது அலைபேசி சிணுங்கியது. அவன் அலைபேசியை வீட்டில் விட்டுச் சென்றிருந்தான்.

அவன் தாய் உடனே அலைபேசியை எடுத்துப் பெயரைப் பார்த்தார். அது ஒரு ஹிந்து ஆணின் பெயர். தன் மகனின் நண்பனாக இருக்கும் என்று அந்த அழைப்புக்கு பதல் பகிர்ந்தார் தாய்.

ஆனால் அங்கே அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. மறுமுனையில்  கேட்டது பெண் குரல்! ஓர் இளம் பெண் பேசினார்.

“அமீர் இருக்கானா?”

“இல்லை. அவன் வெளில போயிருக்கான். நீ யாரும்மா பேசற?”

“அவன் கிளாஸ்மேட் ஆண்டி. சும்மா பெருநாள் வாழ்த்து சொல்லத்தான் போட்டேன்.”

மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டது. இங்கே தாய்க்கு ரத்த நாளங்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டது போலிருந்தது. அதிர்ச்சியில் ஆடிப் போய்விட்டார்.

தன் மகன் அப்படிப்பட்ட பையனில்லையே... உடனே அந்த அழைப்பின் பதிவை அலைபேசியில் இருந்து அழித்து விட்டார்.

இது பற்றி அவர் தன் மகனிடம் எதுவும் சொல்லவில்லை. அன்றிரவு அனைவரும் தூங்கியவுடன் அவர் தூங்காமல் கண் விழித்து மகனின் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தார்.

இதற்கு முன் அந்தப் பெண்ணிடமிருந்து அழைப்புகள், குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) வந்துள்ளனவா என்று சோதனையிட்டார். அங்கே அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அநேகமான குறுஞ்செய்திகள் அந்தப் பெண்ணிடமிருந்து வந்திருந்தன.

டேய்... வாடா.. போடா என்று அளவுக்கு வாசகங்கள், பொதுவான விசாரிப்புகள், சில கொஞ்சல்கள் எனப் பல வகையான குறுஞ்செய்திகள்.

ஆடிப் போய்விட்டார் அன்னை. இந்தக் குறுஞ்செய்திகளுக்கு மகன் என்ன பதில்கள் அனுப்பினான் என்று தெரியவில்லை. அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன.

இதனை எப்படி அணுகுவது, இந்தப் பிரச்னையை எப்படி தீர்ப்பது, நடுநிசியில் நடுங்கிய உள்ளத்துடன் ஆலோசித்து ஆலோசித்து அன்றிரவின் தூக்கத்தைத் தொலைத்தார் அந்த அன்னை.

இரண்டு தினங்கள் கழிந்தன. மகன் அன்று மீண்டும் கலூரிக்குப் புறப்படும் நாள். அன்று காலையில் அந்தத் தாய் தன் மகனிடம் மெல்ல பேச்சு கொடுத்தார்.

“அமீர்... இந்தப் பாரும்மா... இப்போதைய காலம் மோசமானது. பல முனைகளிலிருந்தும் உனக்கு தூண்டுதல் வரும். பொண்ணுங்க உன்னை வட்டமிடுவாங்க. நீ எதப் பத்தியும் அலட்டிக்காம படிப்பிலேயே முழு கவனமா இருக்கணும். நம் குடும்பத்துல உனக்கு மூத்தவங்களும் காலேஜுக்குப் போய் படிச்சிருக்காங்க. அவங்க எல்லாம் ரொம்ப தூய்மையா நடந்துக்கிட்டாங்க. நம்ம குடும்பமும் அந்த மாதிரி குடும்பம் இல்ல. நாம சார்ந்திருக்கின்ற மார்க்கமும் தூய்மையான மார்க்கம். அதனால நீ எந்த ஆசைக்கும் அடி பணியாமல் படிப்பிலேயே கவனம் செலுத்து.”

"என்னம்மா சொல்றீங்க... நான் என்னமோ கெட்டுப் போன மாதிரி பேசறீங்க?”

“இல்ல அமீர்.. உன் மொபைல எதேச்சையா பாத்தேன். அதுல தீபான்னு ஒரு பொண்ணு உனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பியிருப்பதையும் பாத்தேன்."

“அது சும்மாதான் அனுப்புது. நானா அதுகிட்ட போய் பேசமாட்டேன். அதுதான் கிளாசில ஏதாவது டவுட் இருந்தா என்கிட்டே கேட்கும். நான் சொல்லிக் கொடுப்பேன். அவ்வளவுதான்.”

“நீ அப்படிப்பட்ட பையனில்லைன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் நீ எச்சரிக்கையா இருக்கணும்னுதான் இதச் சொல்றேன். இப்படித்தான் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும். அப்புறம் போனில் பேச ஆரம்பிப்பாங்க. எஸ்.எம்.எஸ். ஆ அனுப்புவாங்க. எந்தச் சூழ்நிலையிலும் யார் வலையிலும் விழுந்துடாதே. நமக்கு நம் மார்க்கம் மிக முக்கியம். நாளை மறுமையில் அல்லாஹ்விடம் நாம பதில் சொல்லியாகணும். முஃமினான ஆனுக்கு முஃமினான பெண்தான் மனைவியாகணும்னு அல்லாஹ் சொல்றான். அதனால கவனமா நடந்துக்கோ...”.

“சரிம்மா... நீங்க பயப்படுற மாதிரி ஓண்ணும் நடக்காம நான் பார்த்துகிறேம்மா...”

அமீர் அன்றிரவு கல்லூரிக்குப் புறப்படுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனது அலைபேசி சிணுங்கியது. அதே பெண்ணிடமிருந்து அழைப்பு.

உடனே அவன் தன் தாயிடம் அலைபெசியைக் கொடுத்து, “அவதான் பேசறா... நீங்களே பேசுங்கம்மா.. என்கிட்டே இனி போன்ல பேச வேணாம்னு நீங்க சொல்ற மாதிரியே சொல்லிடுங்கம்மா...” என்றான். அவன் குரலில் பதட்டம்.

அன்னை அலைபேசியை எடுத்தார். ஆனால் மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அமீருக்கு பேருந்துக்கு நேரம் ஆகிவிட்டபடியால் அவசரமாகம் கிளம்பிவிட்டான்.

“அவ நம்பரை எனக்கு மெசேஜ் அனுப்பு. நான் அவகிட்ட பேசறேன்” என்று தாய் சொன்னார். அமீரும் சரி என்றான்.

சொன்ன மாதிரியே பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும்பொழுது அமீர் அவளது அலைபேசி எண்ணை அன்னைக்கு அனுப்பினான்.

உடனே தாய் அந்த எண்ணை தொடர்பு கொண்டார். மறுமுனையில் அந்தப் பெண்ணின் குரல்.

“நான் அமீரோட அம்மா  பேசுறேன். நல்லா இருக்கியாம்மா?”

“நல்லா இருக்கேன் ஆண்டி...”

“எதுக்குமா அடிக்கடி அமீருக்கு போன் பண்றே?”

“............................”

“இந்தப் பாரும்மா... இப்படி போன் பேசுறது சரியில்ல. வகுப்புல பல பேர் முன்னாடி பெசிக்குங்க. ஆனா இப்படி தனியா பேசுறது, போன் போடுறது, எஸ்.எம்.எஸ். அனுப்புறது.... இதையெல்லாம் தவிர்த்துக்கம்மா. எங்க இஸ்லாத்துல அந்நிய ஆணும் பெண்ணும் தனியா பேசக் கூடாது, அப்படி பேசினா மூணாவதா ஒரு ஆள் இருக்கணும்னு இருக்குது. என்ன டவுட் இருந்தாலும் வகுப்புல எல்லாரும் இருக்குற சமயத்துல கேட்டுக்கம்மா. இது தான் உனக்கும் நல்லது, அவனுக்கும் நல்லது. தயவுசெஞ்சு தப்பா எடுத்துக்காதே... படிக்கிற காலத்துல படிப்பில முழு கவனம் செலுத்துங்க. மனச அல பாய விடாதிங்க.. அது உங்கப் படிப்பையும் எதிர்கால வாழ்க்கையையும் பாதிச்சிடும். என்ன நான் சொல்றது புரியுதாம்மா.. என் பொண்ணா உண்ண நெனச்சுதான் இதச் சொல்றேன்.”

“ இல்ல ஆண்டி, நான் சும்மாதான் போன் போடுவேன். நீங்க சொல்றதும் புரிஞ்சுடுச்சி. இனி அனாவசியமா யாரோடயும் பேச மாட்டேன் ஆண்டி...”

“ஒகேம்மா... நல்லபடியா படி.. நல்லாயிரு..”

அந்த அன்னைக்கு பெரிய பாரம் ஒன்றை இறக்கி வைத்த மாதிரி மனம் இலேசானது.

சிறிது நேர ஆசுவாசுத்திற்குப் பின் தன் மகனை அலைபேசியில் அழைத்தாள்.

“அமீர்.. நான் அவகிட்ட பேசிட்டேன்.”

“நீங்களா பேசுற மாதிரிதானே பேசுனீங்க?”

“ஆமா... தன்மையா எல்லாத்தையும் எடுத்துச் சொன்னேன்.”

“என்ன சொன்னா?”

“சரின்னு ஒத்துக்கிட்டா... இனி அனாவசியாம யார் கிட்டயும் பேச மாட்டேன்னு சொன்னா.”

“சரிம்மா... நல்லது...”

“அமீர்... இந்தப் பொண்ணுன்னு இல்ல. உன் வாழ்க்கைல இதமாதிரி இன்னும் பல குறுக்கீடுகள் வரும். இனியும் வேறு வேறு பொண்ணுங்க உங்கிட்ட நெருங்கி வரலாம். பேசலாம். அப்படி யார் உங்கிட்ட நெருங்கி வந்தாலும் எனக்கு உடனடியா தகவல் தெரிவி. என்னை உன் தோழியா நெனச்சுக்க. எங்கிட்ட பேசுறதுக்கு கூச்சப்படாதே. ஓப்பனா பேசு. அப்போதான் நான் எனக்குத் தெரிந்த யோசனைகள சொல்லி உன்னை கைடு பண்ண முடியும். நீ எங்கிட்ட சொல்லாம மறச்சாத்தான் ஷைத்தான் விளையாட ஆரம்பிப்பிப்பான். நமக்குள்ள ஒளிவு மறைவு இல்லாம இருந்தா ரொம்ப நல்லது. நான் என்னைக்கும் உன் நல்லதுக்குத்தான் துணை நிற்பேன். நான் உன்ன நம்புறேன். நீயும் என்ன நம்பு. யார் வந்து உன் வாழ்க்கைல குறுக்கிட்டு உன் மனசுல சஞ்சலம் உண்டு பண்ணினாலும் உடனே உம்மா எனக்கு போன் பண்ணு... சரியா?”

“சரிம்மா... நீங்க சொல்றதெல்லாம் நல்லா புரிஞ்சுடுச்சி. இனி எந்தப் பொண்ணு நெருங்கி வந்தாலும் பேசினாலும் இன்ஷா அல்லாஹ் உடனே உங்களுக்கு தெரிவிக்கிறேன்.”

“அதே மாதிரி இன்னொரு விஷயத்துக்கும் நீ எனக்கு வாக்கு கொடுக்கணும். நீயும் எந்தப் பொண்ணுகிட்டயும் நெருங்கிப் போகக் கூடாது.”

“நானா எந்தப் பொண்ணுகிட்டயும் நெருங்கிப் போகமாட்டேன்னு வாக்குறுதி தர்றேன். இன்ஷா அல்லாஹ் எல்லாம் நல்லபடியா நடக்கும்மா... "

“மாஷா அல்லாஹ்... அல்லாஹ் உன்ன காப்பாத்துவான். எப்பவும் கைவிட மாட்டான்.”

இப்படி தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளிடம் அணுகிப் பார்க்கலாமே...!

பிள்ளைகள் இதனால் தவறான வழியில் போகாமல் தடுக்கப்படலாம் அல்லவா...!


இக்கட்டுரை தற்பொழுது வெளிவந்துள்ள விடியல் வெள்ளி  அக்டோபர் 2013 மாத இதழில் மங்கையர் பக்கம் பகுதியில் பக்கம் 10ல் இடம் பெற்றுள்ளது.

Source: http://msahameed.blogspot.ae/2013/10/blog-post_6817.html?showComment=1381211476140#c1149727549700158754




Career Counselling
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..