பெருநாளைக்கு முந்தைய இரண்டு - மூன்று நாட்களில் நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் ஒரே கேள்வி இதுவாகத்தான் இருக்கும். 'லேய்..! நீ சைக்கிள் புக் பண்ணிட்டியோ? எந்த கடையில?..
முதலிலேயே புக் பண்ணியவனின் பதில் சட்டை காலரை தூக்கிவிடாத குறையாக பெருமைக்குறியதாக இருக்கும். அதுவரை புக் பண்ணாதவனின் முகம் கலை இழந்து சோகமாக இருக்கும்.
என் வயதொத்த எங்கள் தெருத் தோழர்கள் அனைவரும் வடக்கு மெயின் ரோட்டில் மற்றும் தெற்கு மெயின் நோட்டில் உள்ள கடைகளில்தான் வாடகைக்கு சைக்கிள் புக் பண்ணுவார்கள். ஆனால் நான் மட்டும் கோவில் வாசல் தேரடி மூட்டில் உள்ள வெங்கடாச்சலம் அண்ணாச்சி கடையில்தான் புக் பண்ணுவேன். ஏனென்றால் அந்த பகுதியில் பெரும்பாலும் முஸ்லிம் அல்லாதவர்கள் இருப்பதால், பெருநாள் அன்று எளிதாக சைக்கிள் வாடகைக்குக் கிடைக்கும். வடக்கு ரோடு மற்றும் தெற்கு ரோடு பகுதியில் உள்ள வாடகை சைக்கிள் கடைகளில் அநேகமான சைக்கிள்கள் முன்பே புக் ஆகிவிடும்.
கோவில் வாசல் வெங்கடாச்சலம் அண்ணாச்சி கண்டிப்பும் கறாரும் மிக்கவர். பெருநாளைக்கு முந்தைய நாள் வந்து சைக்கிளை எடுத்துப் போகச் சொல்லுவார். மற்றவர்கள் எல்லாம் இரவு 8 மணி 9 மணி என்று வாடகை; சைக்கிள் எடுக்கும்போது, வெங்கடாச்சலம் அண்ணாச்சியின் தேவி சைக்கிள் மார்ட்டில் மட்டும் சாயங்காலம் 5 மணிக்கே சைக்கிளை எடுத்துப் போகச் சொல்லி விடுவார். பல விதிமுறைகள் இருக்கும் எந்தக் காரணம் கொண்டும் இரவு இருட்டிய பிறகு மெயின் ரோட்டுக்கு சைக்கிளில் செல்லக்கூடாது. ஏனெனில் சைக்கிளில் விளக்கு கிடையாது என்பதால். டயரில் காற்று குறைந்தால் உடனடியாக கடைக்கு வந்து காற்றடித்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக டபுள்ஸ் போகக்கூடாது. பின்னால் கேரியர் இல்லாத வண்டிதான் தருவார். இருப்பினும் நம்ம மக்கள் முன்பாரில் டபுள்ஸ் போவது உண்டு. மாத்திரம் இல்லை. பின்பக்கம் டயருக்கு உள்ள சென்டர் கம்பியில் ஏறி நின்று டபுள்ஸ் போவோரும் உண்டு. இதையெல்லாம் உத்தேசித்துத்தான் கண்டிப்பாக டபுள்ஸ் போகக்கூடாது என்கிற கண்டிஷன். கண்டிப்பாக உள்ளூரில் மட்டும்தான் வண்டி ஓட்ட வேண்டும். அப்படி வள்ளியூர் களக்காடு போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் தகவல் தெரிவித்து விட்டு போக வேண்டும் என்கிற நிபந்தனைகள் பல உண்டு.
இப்படி பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பெருநாளைக்கு முந்தைய மாலை 5 மணிக்கே கையில் சைக்கிள் கிடைத்ததும் வருகின்ற உற்சாகமும் சந்தோஷமும் என்னவோ இன்றைய லம்போர்கினி கார் ஒன்று சொந்தமாக கிடைத்துவிட்டதைவிட அதிகமான சந்தோஷமாகும். நான் சைக்கிள் எடுத்துவிட்டேன் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் முதல் முயற்சி வரம்போதே பின் டயரில் பலூன் ஒன்றை ஊதி கட்டி, அந்த பலூன் சைக்கிள் டயர் கம்பிகளில் உரசி உரசி உண்டாகும் கரகர கரகர என்கிற அந்த சப்தம்தான். பெருநாள் எப்போது என்று மறந்துபோய் இருக்கும் மக்களுக்கு, பெருநாளை நினைவூட்டுவது அந்த பலூனின் சப்தம்தான்..( இன்ஷா அல்லாஹ் தொடரும்)
https://www.facebook.com/photo.php?fbid=582249171797258&set=o.413878372014219&type=1&relevant_count=1&ref=nf