வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8)
சொந்த சைக்கிளும் வாடகை சைக்கிளாக மாறும்..!
நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் சொந்த சைக்கிள் வைத்திருந்த நண்பர்கள் சிலரே. மற்றவர்கள் எல்லோரும் நடந்தேதான் பள்ளிக்கூடத்திற்கு வருவோம். தினமும் கட்டளை, சிறுமுளஞ்சி, வடுகீச்சிமதில், கோதைசேரி என பல பகுதிகளில் இருந்தும், நம்ம ஊர் அரசினர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருசில பேரைத்தவிர, மற்றவர்கள் எல்லோரும் 3 முதல் 5 கிலோ மீட்டர்கள் வரை நடந்து வந்துதான் நம்ம ஊர் பள்ளிக்கூடத்தில் படித்ததார்கள். அதுபோல நம்ம ஊரில் நம் சமூகத்தில் உள்ள ஒரு சில பணக்கார மாணவர்களிடம் மாத்திரம் சொந்த சைக்கிள் இருக்கும். அவர்கள் எனது நினைவில் உள்ள எனது வகுப்புத்தோழர்கள் 3வது தெருவைச்சார்ந்த பீர்முஹம்மது நவாஸ். 8வது தெருவைச்சார்ந்த முகம்மது கனி என ஒருசிலபேரே உண்டு. எங்கள் தெருவில் எனது வகுப்புத்தோழன் கம்பெனி வீட்டு மீரான் (தற்போது லண்டனில் இருக்கிறான்) அவர்களின் வாப்பா அலி காக்காவிடம் ஒரு பழைய சைக்கிள் உண்டு. அதன் கேரியரில் ஒரு குடும்பமே பயணிக்கலாம். அத்தனை அகலமும், வலிமையும் கொண்டது. சில வேளைகளில் மீரான் அந்த சைக்கிளை பள்ளிக்கூடத்திற்கு எடுத்து வருவான். அப்போது என்னுடைய பள்ளிக்கூட பயணம் அந்த அகலக் கேரியரில் இருக்கும்.
ஒருமுறை நெல்லைமாவட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டி களக்காட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நம்ம ஊர் பள்ளியில் இருந்து பல மாணவர்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்திருந்தார்கள். குறிப்பாக நவாப் முஸ்தபா. அவர் ஒரு நல்ல ஸ்போர்ட்மேன். எல்லோரிடமும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ்கள் ஒன்று அல்லது இரண்டு இருக்கலாம். அவரிடம் எடைபோட்டு கணக்கிடக் கூடிய அளவுக்கு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ்கள் உண்டு. அவரும் நெல்லை மாவட்ட உயர்நிலைப்பள்ளிகளுக்காக நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டிருந்தார். மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி என்பதால், களக்காடு சென்று விளையாட்டு போட்டியை காணவிரும்புவர்களுக்கு வசதியாக, எங்களது பள்ளிக்கு மதியம் விடுமுறை விட்டுவிட்டார்கள்.
வகுப்புத்தோழர்கள் எல்லோரும் கூடி விளையாட்டுப் போட்டியைக் காணச் செல்வது என்பது முடிவாயிற்று. பஸ்ஸில் சென்று வர பொருளாதாரம் இடமளிக்காது. எனவே சைக்கிளில் செல்வது என்பது முடிவாயிற்று. சொந்த சைக்கிள் உள்ளவர்கள் அவர்களது சைக்கிளில் டபுள்ஸ் போவது. மற்றவர்கள் வாடகைக்கு கேரியர் வைத்த வண்டி எடுப்பது. ஒவ்வொரு சைக்கிளிலும் இரண்டிரண்டு பேராக செல்வது எனவும் முடிவாயிற்று. எனது வகுப்புத்தோழன் மீரானின் எண்ணம் வேறு விதமாக இருந்தது. அவனது சைக்கிளில் என்னை ஏற்றிச் செல்வது. அவனுக்கும் சேர்த்து மற்ற செலவுகளை ( டீ குடிப்பது - வடை சாப்பிடுவது போன்ற பிற செலவுகளை) நான் செலவு செய்வது என்ற ஒப்பந்தத்தில் எங்களது களக்காடு பயணம் அகலக் கேரியர் வண்டியில் ஆரம்பமானது.
அகலக் கேரியர் வண்டி பழையது என்பதால், மீரான் மிதிக்கவே சிரமப்பட்டான். அப்பொது களக்காட்டு செல்லும் ரோடும் டோனாவூர் தாண்டும் வரை மண் பாதைதான். ஒருமாதிரி டோனாவூர் தாண்டி, மாவடி வழியாக களக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியை அடையும் போது விளையாட்டுப்போட்டிகளில் பல முடிவடைந்திருந்தன. கடைசியாக போல்வால்ட் எனப்படும் உயரமான குச்சியின் உதவியுடன் உயரம் தாண்டும் போட்டி. அதில் நம்ம ஊர் சகோதரர் நவாப் முஸ்தபா மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
திரும்பும்போதுதான் சோதனையே. ஸக்கராத்துஹாலில் இருந்த பழைய சைக்கிள் டயரில் காற்று இறங்கி, நின்றிருந்தது. வடை தின்று டீ குடிக்க வைத்திருந்த காசை வைத்து பஞ்சர் பார்த்து, பஞ்சர் ஒட்டி அகலக் கேரியர் வண்டி நம்ம ஊர் எல்லையைத் தொடும்போது பைத்துஸ்ஸலாம் பள்ளியில் இஷாத் தொழுகைக்கான பாங்கு ஒலித்துவிட்டது. ( இன்ஷா அல்லாஹ் தொடரும்)
https://www.facebook.com/photo.php?fbid=583090095046499&set=o.413878372014219&type=1&relevant_count=1&ref=nf |