Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
கைகள் சொன்ன கதை
Posted By:Hajas On 7/2/2014 5:12:45 AM

கைகள் சொன்ன கதை


சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.

அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கைகளால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.

அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.

இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.

அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.

ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.

சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டி இருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை. அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக் கொள்ளவே இல்லை.

கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி-உயர்வு பெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.

முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.

அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.

'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.

அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.

ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.

இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கிறேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

முடிவு நம்மிடமே இருக்கிறது!


viswanathan :: indic.azhagi.com :: service to mankind

https://www.facebook.com/photo.php?fbid=663131707108510&set=gm.503995753033701&type=1






Moral Story
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..