Posted By:peer On 10/19/2014 10:39:44 AM |
|
பெயருக்கு ஏற்றார் போலவே குணம் கொண்டவர்.வேலூரம்மா என ஏர்வாடி தாய்மார்களால் அழைக்கப்படுபவர்.
ஏர்வாடியில் பாதிபேருக்கு இவர் பேர்காலம் பார்த்து இருக்கின்றார். கருவரையில் இருந்து வெளிவந்து தாயின் கரங்களில் தவழ்வதற்க்கு முன் இவர் கரங்களில் தவழ்ந்தவர்கள் ஏராளம்.
கண்மாமார் காதுகளில் கலிமாவை ஓதுவதற்கு முன் இவர் குரல் கேட்டு விழித்த குழந்தைகள் ஏராளம், நோயாளிகளிடம் அன்பு செலுத்துவதில் தாராளம்.
எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் இவரிடம்தான் காட்டுவேன் என காத்திருக்கும் தாய்மார்களும் ஏராளம் ஏராளம் அம்மா இவர் வருகின்றார் எனில் அந்த இடமே அமைதியாகும்.அச்சத்தினாலல்ல இவர் மீது அனைவரும் வைத்திருந்த அன்பினால்.
பேர்காலம் பார்ப்பதென்றால் இவருக்கு பேரானந்தம். புது மலரை தொடுகின்ற போது எவ்வளவு ஆனந்தம் உண்டோ அது போல புது உலகைக்காண புறப்பட்டு வரும் குழந்தையின் கால் தூக்கி தட்டி ,அது கதறி அழுதபின் ,அதை பெற்றெடுத்த தாயைப்போல பெருஉவகை இவரடைவார்.
என் தாயாருக்கு மிக நெருக்கமானவர் ,என்மீதும் இவருக்கு பாசம் உண்டு .எவ்வளவு கூட்டமென்றாலும் ,என் தலை இவர் கண்டு விட்டால் என் சீட்டு மேலே வரும் இவரது மேஜையில். ஹம்ஷா வாப்பா ,சுபைதாமா எப்படி இருக்காக ? விசாரிப்புகள் முடிந்த பின்னேதான் என்ன செய்கின்றது என கேட்பார்.
ஒரு முறை என் மகன் அஸ்பர்ஷாவிற்க்கு சுகமில்லை என இவரிடம் கொண்டு சென்றோம் .காருண்ய சாலையில் ஆண்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் எங்களுக்கு தனி சலுகை தந்து அங்கே தங்க வைத்தார்.
அன்று இரவு ஒரு பிரசவ கேஸ், அதற்க்காக விழித்திருந்தவர் ஒவ்வொரு மணி நேரமும் என் மகனை வந்து பார்த்து என்ன மருந்து கொடுக்க வேண்டும் என நர்ஸிடம் கூறிச் சென்றது என்றும் மறக்காது எனக்கு. இடையில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்கள் .ஆப்ரேஸன் நடந்த இரண்டு வாரங்களில் மீண்டும் தனது பணிக்கு வந்து விட்டார்கள். ஏனம்மா இன்னும் கொஞ்ச நாள் ஓய்வெடுக்கலாமே என்றதற்க்கு, இல்லப்பா இவர்களை பார்க்காமல் ரூம்மில் இருக்க பிடிக்கவில்லை, நோயாளிகளை கவனிப்பதில் தான் ஆத்ம திருப்தி இருக்கின்றது என்றார்கள்.
இன்றவரோ ,ஒரு குழந்தையைப் போல எல்லாம் மறந்தவராய். அம்மாவிற்க்கு சுகமில்லை என எல்லோரும் கூறியதால் பார்க்க வேண்டும் என எண்ண வந்தது .அனுமதி பெற்று உள்ளே சென்று பார்த்த பின் மனது ஏதோ செய்கின்றது, என்ன பாவம் செய்தாரிவர், ஏழைக்கு இறங்கியதா? அல்லது என்னேரமும் வருந்திய நோயாளிகளுக்காக நேரம் பாராமல் உழைத்ததா? தன் இருபத்தி எட்டாவது வயதில் டோனாவூர் வந்து இன்று எழுபத்தி இரண்டு வயதாகிவிட்டது. சுகமாக இருக்கும் வரை சுகமில்லாதவருக்காக மருத்துவம் பார்த்ததா? என் இறைவா! இவரது வேதனைகளை போக்கி பாவங்களை மன்னிப்பாயாக, பிரார்த்திப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும் என்னால்?
(முதல் படம் இப்போதைய நிலையில்)
(கரங்களில் ஒரு அனாதை குழந்தையுடன்)
- Hameed Hamsha MA
|