Posted By:peer On 10/19/2014 12:25:27 PM |
|
amlodipin krka amlodipin bivirkninger redirect
மதம் கடந்து மனித நேயத்தோடும் பாசத்தோடும் நம்மோடு பழகி கழித்த "அக்கரையில் வாழ்ந்த மாற்று மத சகோதரர்களை எண்ணி பார்கின்றேன் மனசெல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கு ...
1960 , 1970 களில் கட்டளை தெருவுக்கு தெற்க்கே கோவில் வாசல் பகுதியில் வாழ்ந்த இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல அன்பர்களை நினைத்து பார்ப்பதுண்டு
கோவில் வாசல்தான் அந்த காலத்தில் நமதூரில் வாழும் அனைத்து இன மக்களும் காலை மாலை நேரங்களில் பொழுது போக்கும் இடமாய் இருக்கும் வெளியூர்களுக்கு செல்ல பஸ் ஏற இறங்க அங்குதான் போகணும் கோவில் வாசலில் எதை மறந்தாலும் கே . லெக்ஷ்மன பிள்ளை கடையின் சூடான பஜ்ஜியும் உளுந்த வடையும் சுவையான சட்னியையும் அதை வாழை இலையில் லாவகமாக வைத்து தரும் தாணு பிள்ளையையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அவர்களின் அன்பான உபசரிப்பு என்னடே ...ரெண்டு நாள ஆளை காணோம் ? வெளியூர் போனியாடே ...என்று கரிசனையோடு விசாரிக்கும் தாணு பிள்ளை...என்ன மாப்பிள்ளை ...நல்ல சாப்பிடுடே ... என்று உபசரிப்போடு பரிமாறும் ஹோட்டல் பணியாளரிடம் ., தம்பி மாப்பிளை வந்திருக்கான் நல்ல கவனிப்பா ...என்று பாசத்தோடு சொல்லும் லக்ஷ்மன பிள்ளையின் அன்பை யாருக்குத்தான் மறக்க முடியும்? அதற்க்கு பக்கத்தில் காசு கடை மொன்னா முஹம்மது அவர்களும் tea கடை வைத்திருந்தார்கள் அந்த கடைக்கு வயதில் பெரியவர்கள்தான் போவார்கள்
தேரடி மூட்டில் தேவி சைக்கில்கடை வெங்கடாசல அண்ணாச்சி கடும்மையான கோடை காலத்தில் நன்னாரி சர்பத் போட்டு தருவார் அதன் சுவையை நினைத்து பார்த்தால் நாக்கில் இன்றைக்கும் இனிக்குது அந்தி நேரத்தில் போன்னாகுரிச்சி குளத்தில் கிரிக்கட் விளையாடி விட்டு வந்தால் பழைய போஸ்ட் ஆபீஸ் பக்கம் மாலை பதநீரில் நொங்கும் மாங்காயும் வெட்டிபோட்டு பனை ஓலை பட்டையில் நுரை போங்க பதநீர் ஊற்றி தரும் தருமகண்ணு நாடாரைநானோ என்னுடன் பதநீர் அருந்திய அலி சேக் மீரானோ டாக்டர் ஷரீப் மற்றும் பல நண்பர்கள் அந்த உன்னத தருணத்தை மறந்திருக்க முடியாது ...
பொங்கல் திருவிழா அன்று பெரிய தெரு ராசப்பன், அய்யா பிள்ளை வீட்டில் சூடான வடையும் முந்திரியும் காய்ந்த திராட்சையும் நெய்யில் செய்த பொங்கலும் நண்பர்களுடன் சாப்பிட்டதை நினைத்தால் இன்னும் கையில் நெய் வாசமடிக்கு.
இடையையர்கள் அதிகமாய் வாழும் இடக்குடி தெருவில் பொங்கலுக்கு நம்ம கணபதி கோனார் வீட்டில் இருந்து எனது வீட்டுக்கு வரும் பலகாரங்கள் இன்னும் பசுமையாய் நினைவில் ...
கட்டளை தெரு காரங்களுக்கு தேவையான அதிகமான வீடுகளுக்கு பால், தயிர் மோர் நெய் விநோயகம் செய்யும் இடக்குடி தெரு 'வேல்லம்மா ' மறக்க முடியாத மனுசி. பத்து யானையை கட்டிப்போட்டு மேய்ப்பதற்கு உள்ள இடமான பெரிய தெருவின் ' அரசமரத்தடி நிழலில் அடியில் ' கல்லு கட்டிலில் ' கிடந்துறங்கி ஓய்வு எடுக்கும் அப்பகுதி வாழ் மக்கள் ...
பெரிய தெருவில் வசித்த பல பெயர் பெற்ற ஆசிரியர்கள் சூரியன் சார் சீத்தாராமன் சார்போன்றோர்கள் அதே தெருவில் வசித்த நம் மாவட்டத்தில் புகழ் பெற்ற ' நாதஸ்வர வித்வான் சங்கரன் குழுவினர்கள் ...
தங்க நகைகள் செய்து தரும் ஆசாரிமார்களாகிய ' அப்பு ' கள் அந்தகாலத்தில் கட்டிட கலையில் தேர்ச்சி பெற்றிருந்த ' 'கொத்தனார்கள் ' சிவம் பிள்ளை, அய்யம்பெருமாள் பிள்ளை, பொன்னையா பிள்ளை, சுப்பையா பிள்ளை போன்ற பல கொத்தனார்கள் இந்த தெருக்களில்தான் வாழ்ந்தார்கள். மேற்கு ரத வீதியில் ' கிராம்சு' என்று அந்த காலத்தில் அழைக்க பெற்ற v o என்பவர் ஒரு ஐயர் பெயர் நினைவில்லை நல்ல மனிதர். நெடு நெடுன்னு வளர்ந்திருப்பார். எந்த ஒரு காரியத்தையும் சொன்னதும் சரி என்று பட்டால் உடனடியாக செய்து தரும் பண்பு மிக்கவர். கடமையில் தவறாத கண்ணியவான் குழந்தைகள் பிறந்தால் அவர்தான் பதிவு செய்வார். அதே தெருவில் ' மணி ' என்று அழைக்கப்பட்ட சுப்ரமணியம் என்ற ஐயர் இன சகோதரர் எனது ஹாஜா மாமாவின் பள்ளிகூட நண்பர் எங்களின் கட்டளை தெரு கண்ணா வீட்டுக்கு எனது மாமாவுடன் வருவார் வந்தால் எனது தாயாரை ., தாத்தா டீ தங்கோ தாத்தா என்று எனது தாயாரிடம் தேநீர் வாங்கி சாப்பிட்டு செல்வார்.
நெற்றியில் போட்டும் உடம்பில் பூ நூலுமாய் பார்க்க ரெம்பவும் ஆச்சாரமாய் இருப்பார் இந்த சுப்பிரமணி பிற்காலத்தில் மும்பையில் ரிசர்வ் வங்கியில் உயர் அதிகாரியாய் பணியாற்றினார் . இந்த பகுதியில் இருந்து என்னுடன் படித்த டாக்டர் தங்கையாவின் மகன்களான சுவி மணி பிரம்மன் போன்றோர்களை மறக்க முடியாது. அதே பெரிய தெருவில் வாழ்ந்த மூக்குத்தியும் என்றும் நினைவில். அழகப்பன் மறக்க முடியாத நண்பர் அழகப்பன் மறைந்து விட்டாலும் அவரது புதல்வர்கள் நமதூரில் 'வேல் முருகன் ' ஸ்டோர் என்ற நிறுவனத்தை திறம்பட நடத்தி வருகிறார்கள் ...
தேர் திருவிழா வந்தால் தேர் நான்கு ரத வீதியிலும் வருவதை பார்த்து ரசித்த நாட்கள் ... தேர் திருவிழாவில் கோவிலில் நம்பி தலைவன் பட்டி பாண்டியமாருக்கு 'முதல் மரியாதை 'செய்வதையும் பார்த்து ரசித்து இருக்கிறேன். இப்படி இன மதம் கடந்து ஒரு சகோதர வாஞ்சையோடு அந்தகாலத்தில் வாழ்ந்த அந்த 'உன்னத தருணத்தை ' நினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ...
|