Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சுய தொழில்கள்-08: ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு
Posted By:peer On 11/27/2014 11:43:36 PM

ciproxin torrino

ciproxin prezzo cogimator.net

செங்கல்லுக்கு மாற்றாக ஹாலோபிளாக் கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஹாலோபிளாக் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இத்தொழிலில் நல்ல வருமானம் பார்க்கலாம் என்கிறார் கோவை நல்லாம்பாளையத்தில் குட்டியப்பா ஹாலோபிளாக் நிறுவனம் நடத்தி வரும் நடராஜன். அவர் கூறியதாவது: 22 ஆண்டுகள் மில்லில் பணிபுரிந்து, 5 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். ரூ.5 லட்சம் கிடைத்தது. ஹாலோபிளாக் நிறுவனம் நடத்திவரும் உறவினரிடம் பயிற்சி பெற்றேன். கோவை சிறுதொழில் சேவை மையத்தினர் வழிகாட்டினர்.



வீட்டு முன்பு இருந்த சொந்த இடத்திலேயே தொழில் துவங்கினேன். வீட்டில் இருந்த போர்வெல் மூலம் தேவையான தண்ணீர் கிடைத்தது. அதிகளவில் விற்பனையாக கூடிய ஹாலோபிளாக், சாலிட் பிளாக் அச்சுகளை மட்டும் வாங்கி, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கினேன். தொழில் நல்லபடியாக விரிவடைந்த பின்னர் மற்ற அச்சுகளை வாங்கி னேன்.  8 சட்டி ஜல்லி, 4 சட்டி கிரஷர், 1 சட்டி சிமென்ட் கொண்டு தயாரித்தால் தரமான ஹாலோபிளாக், சாலிட்பிளாக் கற்கள் கிடைக்கும். லாரியில் ஏற்றும்போது தவறி விழுந்தாலும் உடையாது. இதனால் கட்டப்படும் கட்டிடம் உறுதியாக இருக்கும்.

ஹாலோபிளாக்குகளின் தரம், தொழிலில் நேர்மை காரணமாக எனது நிறுவனத்துக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைக்கிறது. தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுத்து குடும்பத்துடன் இங்கேயே தங்க வைத்துள்ளேன். இதனால், உற்பத்தி தங்கு தடையின்றி நடக்கிறது. தொழிலை கற்றுக்கொள்ள ஒருநாள் போதும். இலவசமாக தொழில் கற்று கொடுத்து சிலரை தொழில் முனைவோராக்கியுள்ளேன். யார் வேண்டுமானாலும் இத்தொழிலை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.

தயாரிக்கும் முறை!

தேவைப்படும் பொருள்கள்: ஜல்லி (கால் இஞ்ச் அளவுள்ளது), கிரஷர் மண்(பவுடர் போல் இல்லாமல், குருணை போல் இருக்க வேண்டும்.) சிமென்ட் (ஓபிசி ரகம்). இதை பயன்படுத்தினால் உற்பத்தி செய்த 4 மணி நேரத்தில் காய்ந்து விடும். சிமென்ட் 4 சட்டி (ஒரு மூட்டை), ஜல்லி 9 சட்டி, கிரஷர் மண் 6 சட்டி எடுக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரை தயாராக வைத்திருக்க வேண்டும். மிக்ஸர் மெஷினை இயக்கி, அதில் சிமென்ட் ஒரு சட்டி, ஜல்லி 2 சட்டி, கிரஷர் மண் 2 சட்டி, ஒரு வாளி தண்ணீர் ஆகியவற்றை வரிசையாக கொட்ட வேண்டும்.  மீண்டும் அதே அளவில் தொடர்ந்து கொட்ட வேண்டும்.  


அவை அனைத்தும் கொட்டிய 5 நிமிடத்துக்குள் கலவையாகும். அவற்றை டிராலியில் கொட்டி, டிராலியை ஹைட்ராலிக் மெஷினுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஹைட்ராலிக் மெஷின் நகரும் தன்மை உடையது. அதில் உள்ள ஹாலோபிளாக் அச்சு, தரையில் பதிந்திருக்கும். அச்சுக்குள் கலவையை கொட்டி, அச்சில் உள்ள கலவையை ஏழெட்டு முறை ஹைட்ராலிக் பிரஷர் மூலம் இடித்து நெருக்கினால், ஹாலோபிளாக் கட்டி உருவாகும்.

ஹாலோபிளாக் கட்டியை பிடித்துள்ள அச்சு, பிடியை விட்டு வெளியேறும். மெஷின் தானாக அடுத்த அச்சு பதிக்க நகர்ந்து கொள்ளும். ஹைட்ராலிக் மெஷினில் ஒவ்வொரு முறையும் 5 கற்கள் தயாராகும். ஹாலோபிளாக் கற்கள் 4 மணி நேரத்தில் காய்ந்து விடும். எனினும் 24 மணி நேரம் அதே இடத்தில் வைத்திருந்து, பின்னர் அவற்றை வேறு இடத்தில் அடுக்கி 7 நாள் 3 வேளை தண்ணீர் ஊற்றி வர வேண்டும். பின்னர் 3 நாள் காயவைத்தால் விற்பனைக்கு தயாராகிவிடும்.

கட்டமைப்பு!

15 சென்ட் இடம் (அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம்), போர்வெல் தண்ணீர் வசதி (ரூ.1 லட்சம்), மிக்ஸர் மெஷின் (ரூ.58 ஆயிரம்), ஹைட்ராலிக் பிரசிங் மெஷின்(ரூ.1.45 லட்சம்), டிராலி 2 (ரூ.12 ஆயிரம்), இரும்பு சட்டி 15 (ரூ.1050), 3 அடி அகலம், 45 அடி நீளம் கொண்ட பிளாஸ்டிக் ஷீட் 5 (ரூ.800), 4, 6, 8 ஆகிய இஞ்ச் ஹாலோபிளாக், சாலிட் பிளாக் தயாரிக்க 6 அச்சுகள் (தலா ரூ.18 ஆயிரம் வீதம் ரூ.1.08 லட்சம்). மொத்த முதலீட்டு செலவு ரூ.4.75 லட்சம்.

எங்கு வாங்கலாம்?

ஜல்லி கற்கள், கிரஷர் மண், சிமென்ட் ஆகியவை எளிதில் கிடைக்கும். குறைந்த தூரத்துக்குள் உள்ள இடங்களில் இருந்து வாங்கினால் லாரி போக்குவரத்து செலவு குறையும்.

உற்பத்தி செலவு

இட வாடகை ரூ.5 ஆயிரம்,  சிறு தொழில் சான்றிதழ் இருந்தால் மின் கட்டணம் குறைவு; அதன்படி மாதத்திற்கு ரூ.500, (வணிக கட்டணப்படி என்றால் ரூ.1000). 4  ஊழியர்களுக்கு கூலி 25 நாளுக்கு ரூ.40 ஆயிரம். 4 பேர் மூலம் மாதம் 20 ஆயிரம் கற்கள் உற்பத்தி செய்யலாம். இதில் 4 இஞ்ச் கற்கள் (13 கிலோ எடை) 10 ஆயிரம் எண்ணிக்கை தயாரிக்க உற்பத்தி செலவு தலா ரூ.14 வீதம் ரூ.1.4 லட்சம், 6 இஞ்ச் கற்கள் (19 கிலோ எடை) 5 ஆயிரம் எண்ணிக்கை தயாரிக்க தலா ரூ.19 வீதம் ரூ.95 ஆயிரம், 8 இஞ்ச் கற்கள் (25 கிலோ எடை) தலா ரூ.23 வீதம் 5 ஆயிரம் எண்ணிக்கை தயாரிக்க ரூ.1.15 லட்சம் செலவாகும். மொத்த உற்பத்தி செலவு மாதத்துக்கு ரூ.3.91 லட்சம். சிமென்ட், ஜல்லி, கிரஷர் மண் விலை நிலவரத்துக்கு ஏற்ப உற்பத்தி செலவு கூடும் அல்லது குறையும். ஓட்டையில்லாமல் முழு கட்டியாக உள்ளவை சாலிட்பிளாக் கற்கள். ஹாலோபிளாக் கற்களை விட எடை அதிகமானவை. அதை தயாரிக்க கூடுதலாக கல் ஒன்றுக்கு ரூ.5 வரை செலவாகும்.

வருவாய்

4 இஞ்ச் ஹாலோபிளாக் கல் (13 கிலோ கொண்டது) குறைந்தபட்சம் ரூ.18க்கும், 6 இஞ்ச் கல் (19 கிலோ) ரூ.23க்கும், 8 இஞ்ச் கல் (25 கிலோ) ரூ.27க்கும் விற்கப்படுகிறது. வருவாய் ரூ.4.3 லட்சம். லாபம் ரூ.39 ஆயிரம். சிமென்ட், ஜல்லி, கிரஷர் மண் விலை ஏற்றத்துக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்கலாம். சிமென்ட் காலி சாக்குகள் மூலம் வருவாய் தலா ரூ.2 வீதம் 325க்கு ரூ.650. மாதம் சராசரியாக ரூ.40 ஆயிரம் லாபம் கிடைக்கும்.

கிராக்கி அதிகம்!

ஹாலோ பிளாக் மூலம் குறைந்த செலவில் வெளிப்புற டாய்லெட், காம்பவுண்ட் சுவர், குறைந்த செலவிலான வீடுகள், ஷெட் ஆகியவற்றை கட்டலாம். சாலிட் பிளாக் கற்கள் மூலம், தரமான, உறுதியான வீடுகள் கட்டலாம். விலை குறைவு, கட்டுமானப்பணி  எளிது என்பதால், ஹாலோபிளாக்குக்கு கிராக்கி உள்ளது. சுவர் தேவை இல்லை என்று இடித்தால் ஹாலோபிளாக்கை திரும்ப பயன்படுத்த முடிகிறது. இதனால் ஹாலோபிளாக்குக்கு நல்ல கிராக்கி உள்ளது.
Concrete Block
Concrete Block
Hollow Block Making Machine (Archer-400)
ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு பற்றி இவர் சொல்வதையும் படியுங்கள்...
ஹாலோ பிளாக்



வீட்டை கட்டிப்பார்; கல்யாணத்தை பண்ணிப்பார் என்பார்கள்... அப்போதுதான் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காக! ஆனால், இப்போதெல்லாம் ஒரு கல்யாணத்தைகூட எளிதாக நடத்தி விடலாம், ஆனால் வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயமில்லை! பக்காவாக திட்டமிட்டு வேலையைத் தொடங்கினால் அப்போதுதான் சிமென்ட் விலை ஏறிவிட்டது, கம்பி விலை ஏறிவிட்டது, மணல் விலை ஏறி விட்டது என்பார்கள். இந்த கட்டுமான பொருட்களின் விலையேற்றத் தைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. அதிலும் செங்கல் விலை சொல்லவே வேண்டாம். ஏரியாவுக்கு ஏரியா விலை வித்தியாசம் எகிறுகிறது. எந்த டைப் வீடு கட்டினாலும் செங்கல் இல்லாமல் காரியம் நடக்காது. அந்த அளவுக்கு அதன் தேவை இருக்கிறது. பழைய பாணியில் எல்லா பணிகளுக்கும் செங்கல்லை மட்டுமே ஏன் நம்பியிருக்க வேண்டும்? வேலையை இன்னும் சுலபமாக்க வேறு தொழில்நுட்பத்தைப் புகுத்தினா லென்ன என்ற முயற்சியில் வந்தது தான் இந்த ஹாலோ பிளாக்’. செங்கல்லைவிட லேசானதாலும், சிமென்ட் பயன்பாட்டை குறைப்பதாலும் கட்டுமானத் தொழில் உலகில் இப்போது நீங்காத இடம்பிடித்து விட்டது இந்த ஹாலோ பிளாக்.

ஒரேஒரு ஹாலோ பிளாக் நான்கு செங்கல்லுக்கு ஈடாக தேவையைப் பூர்த்திசெய்து விடுகிறது. வேலையும் சுலபம். இதனால் விறுவிறுவென கட்டட வேலைகள் முடிந்து விடுவதால் கட்டுமானத் துறையில் இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது. காம்பவுன்ட் சுவர், ஆர்ச்சுகள் போன்றவற்றைக் கட்டுவதற்கு அதிகளவில் இதைப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் செலவும் கைகளுக்குள் அடங்கி விடுகிறது.

ஆர்.சி.சி, ஜி.ஐ. ஷீட்ஸ், ஏ.சி.சி. ஷீட்ஸ் போன்ற ரூஃபிங்கிற்கு சப்போர்ட்டாகவும் செங்கல், கற்கள் போன்றவைகளுக்கு மாற்றாகவும் ஹாலோ பிளாக் இடம் பிடித்து விட்டதால் நாளுக்குநாள் இதன் தேவை அதிகரிக்கவே செய்யும். உத்தரவாதமான நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் என்பதால் துணிந்து இறங்கலாம். கட்டுமானத் தொழில் வளர வளர, இந்தத் தொழிலுக்கும் ஏறுமுகம்தான்.

தயாரிக்கும் முறை கருங்கல் குவாரியிலிருந்து வெளியேறும் மணல்துகள்கள், அவல் ஜல்லி, சிமென்ட் போன்றவைகள் தான் முக்கிய மூலப் பொருட்கள். எல்லாவற்றையும் தகுந்த விகிதத்தில் கலவையாக்கி லேசான ஈரப்பதத்தோடு இதற்கென்றே உள்ள ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் நிமிடத்தில் ஹாலோ பிளாக் ரெடி! அதிக பலமிக்க ஹாலோ பிளாக் வேண்டுமெனில் சிமென்ட், மணல், அவல் ஜல்லி போன்றவைகளை 1:3:6 என்கிற விகிதத்தில் கலக்க வேண்டும். இதுவே சாதாரணமான கட்டடங்களுக்கு எனில் 1:5:8 என்கிற விகிதத்தில் இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர், சிமென்ட் கலவை 0.4:1 என்கிற விகிதத்தில் இருக்க வேண்டும்.

ஃபைனான்ஸ்

சொந்த இடம் இருந்தால் நல்லது. இல்லையென்றால் வாடகைக்கு எடுத் தும் செய்யலாம். இடமிருந்து, சொந்தமாக கட்டடம் கட்டும்பட்சத்தில் அந்த வகைக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல் பாட்டு மூலதனத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் என மொத்தம் பத்து லட்சம் ரூபாய் வரை ஆகும்.

மூலதனம்

இந்த தொழி லைத் துவங்க நினைக்கும் ஒருவர் தனது கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை மூலதனமாக போட வேண்டியது வரும். மீதமுள்ள ஒன்பதரை லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மானியம்

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த தொழில் வருவதால் மூன்றரை லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். மூன்று வருடத்திற்குப் பிறகு நான்காவது ஆண்டின் தொடக் கத்திலிருந்து கடன் தொகை ஆறு லட்சம் பிடித்தம் செய்யப்படும்.

ஆட்கள்

முழு உற்பத்தி திறனில் வேலை பார்க்க பத்து நபர்கள் தேவைப்படு வார்கள். நல்ல ஈடுபாட்டுடன் வேலைபார்க்கும் ஒன்பது பேரும், விற்பனை மற்றும் கலெக்ஷன் நிர்வாகம் செய்வதற்கு ஒருவரும் போதுமானது.

இயந்திரம்

இந்த ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரம் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. கோவை, உடுமலைப்பேட்டை பகுதிகளில் வாங்கலாம்.

வார்ப்பு அளவுகள்

கற்கள் மூன்று அளவுகளில் உள்ளன.

4 இஞ்ச், 6 இஞ்ச், 8 இஞ்ச் என்ற அளவுகளில் இருக்கின்றன.

4 இஞ்ச் கற்கள் பாத்ரூம் கட்டுவதற்குப் பயன்படுகிறது. (இதன் நீளம் 15 இஞ்ச், அகலம் 4 இஞ்ச், உயரம் 8 இஞ்ச்)

6 இஞ்ச் கற்கள் ஓட்டு வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 6 இஞ்ச்)

8 இஞ்ச் கற்கள் மாடி வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 8 இஞ்ச்)

சாதகமான விஷயம்

சாதாரணமாக மழைக் காலங்களில் செங்கல் தயாரிக்க முடியாது. காய வைப்பதற்கேற்ப வெயில் இருக்காது என்பதால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செங்கல் தொழில் அடியோடு பாதிக்கப்படும். ஆனால், ஹாலோ பிளாக் தொழிலில் அப்படியான கவலை இல்லை. மழைக் காலங்களில்கூட தயார் செய்ய முடியும். இயந்திரத்திலிருந்து எடுத்த அரை மணி நேரத்திற்குள் இந்த கற்கள் காய்ந்து விடுவதால் மழைக்காலம் என்றாலும் பாதிப்புகள் ஏற்படாது.

ரிஸ்க்

தொடர்ச்சி யான மின்சாரம் தான் இதன் முக்கிய தேவை. மின்தட்டுப்பாடுதான் இந்த தொழிலை வளரவிடாமல் தடுக்கும் முக்கியமான விஷயமாகும். மின்சாரம் தொடர்ச்சியாகக் கிடைத்தால் நல்ல லாபம்தான். குடும்பத் தொழிலாகவே செய்து வருகிறோம் காரைக்குடி அமராவதிபுதூரில் உள்ள உமையாம்பிகை ஹாலோ பிளாக் தயாரிப்பு யூனிட்’ உரிமையாளரான பார்வதி தன்னுடைய தொழில் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

கட்டட கான்ட்ராக்டர்களே இடம் தேடிவந்து ஆர்டர் கொடுத்து விடுவார்கள். அதற்கேற்ப சப்ளை செய்வோம். சில நேரங்களில் அவர்களே வாங்கிச் செல்வதும் உண்டு. மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்துவிடுவதும் இதன் கூடுதல் சிறப்பு. அச்சு வார்ப்புகளுக்கு ஏற்பதான் கற்கள் வரும். கவனமாக எடுத்துச் சென்று வெயிலில் காய வைக்க வேண்டியதுதான் நமது முக்கியமான வேலையே. விற்பனையைத் தனியாக கவனித்துக் கொள்கிறோம்.

சாதாரணமாக 4,000 கற்கள் தயாரிக்க தேவைப்படும் தொகை:

அவல் ஜல்லி ஒரு லோடு (3 யூனிட்) - 6,500 ரூபாய்

50 மூட்டை சிமென்ட் - (மூட்டைக்கு 280 வீதம்) - 14,000 ரூபாய்.

கிரஷர் மண் ஒரு லோடு- (3 யூனிட்) - 3,500 ரூபாய்.

மொத்தம் 24,000 ரூபாய்வரை செலவாகிறது.

ஒரு ஹாலோ பிளாக் 9.50 முதல் 20 ரூபாய் வரை விலைபோவதால் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. இயந்திரம் மூலம் மட்டுமின்றி சாதாரணமாக கைகளாலும் தயாரிக்க முடியும். இருந்தாலும் இயந்திரத்தை உபயோகித்தால் உற்பத்தியின் அளவு அதிகரிக்கும், நேரம் குறையும், நமக்கும் நல்ல லாபம்தான். 80,000 ரூபாய் விலையில் இந்த இயந்திரம் கிடைக்கிறது.

இந்த தொழிலுக்கே உள்ள சிரமம் என்னவென்றால் கற்கள் மேடைக்கு வந்தவுடன் அதனை இழுப்பதுதான். கொஞ்சம் கடினமாக இருக்கும் அதை இழுப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு பேராவது தேவைப்படுவார்கள். எங்களைப் பொறுத்தவரை இதை குடும்பத் தொழிலாகவே செய்து வருகிறோம், அதனால் அதிக லாபம் பார்க்கிறோம். சம்பளத்திற்கு ஆள் வைத்து பார்த்தால் இவ்வளவு லாபம் பார்க்க முடியாது என்றார் பார்வதி.

இணைய தளங்களிலிருந்து
Engr.Sulthan














சுய தொழில்கள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..