இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!
பகதுர்ஷாவுக்கு இழைத்த கொடுமை நினைத்தால் நெஞ்சம் ஆறாது, மறைத்துவிட்டார்கள்...!
பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காக ராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர். இந்தச் சூழலில் தான் 1837 -இல்-பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏறினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிட்டீஷார் செய்த முயற்சிகள் பல.
1847 - இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து - முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும்.-என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தை வடித்துள்ளான்.
இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, "ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டும் மாடுகளை வெட்டக்கூடாது" - என்று பிரகடனப் படுத்துகிறார். நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில், "என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்" - என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.
பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரிய திட்டம் உருவானது.
இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிட நம்மால் முடியும். அவனை முடித்து உயிரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்பட்டுள்ள அபாயங்களிலிருந்து காப்போம்.- என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.
தேசத்தின் சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு - போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.
ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும் என்றும், இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தனர்.**
(* காஸிம் ரிஸ்வி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகதுர்ஷா ஜஃபர் பக்கம், 7., ** வீரசாவர்க்கர்,எரிமலை. பக்கம்,58.)
இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா - ராஜஸ்தான் - மகாராஷ்டிரா மன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக - ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.
…ஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான் உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 99.
ஆனால் மே 10-ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது. இதனால் பகதுர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும் கூட்டாகவும் சிப்பாய் கலக காலகட்டத்தில் பிரிட்டீஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமையாக இறங்கினர்.
தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பகதுர்ஷா தலைமையில் சுதந்திர இந்தியாயை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல.
மாமன்னர் பகதுர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார்.
ஒரு நாள் காலை…
காலை உணவு பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு எடுத்து வரப்படுகிறது.
உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு.
ஹட்ஸன்: பகதுர்ஷா…! நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை!
என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான். அங்கே, தட்டில் உணவுக்கு பதில் பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள் இருந்தன..! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளை வெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு, இது பிரிட்டீஷ் கம்பென்யாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன்.
திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து.......,
பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்!
கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷா கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு,
ஹட்ஸன்: உமது கண்களில் என்ன? "நீர் வற்றி விட்டதா?
அரசர்கள் அழுவதில்லை! ஹட்ஸன்
என்று பெருமிதத்துடன் பகதூர் ஷா கூற, தலை குனிந்த வாறு வெளியேறுகிறான் ஹட்ஸன்.*
அன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த மகன்களின் முகங்கள், உடம்பிலிருந்து துண்டாய், தனியாய், காலை உணவாக! பெற்ற மனம் எப்படி பதறி இருக்கும்..? அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பேரரசர் பகதுர்ஷா ஜாஃபர் துளியும் கலங்கவில்லை..!
* Kasim Rizwi, The Great Bahadur Sha Jaffer, P.10.
சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது. மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது. "என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்?" - என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
கேப்டன் ஹட்ஸன், பகதுர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு முன் கழுகுகளுக்கு இரையாகும்படி எடுத்தெறியப்பட்டன. அவை வெகுநேரம் வரை கழுகுகளுக்கு ஆகாரமான பின்னர் தான் ஆற்றில் இழுத்தெரறியப்பட்டன.
- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 296-297.
தாய் மண்ணில் இனி சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம் செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார். 1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.