ஆரம்பத்தில் மீனுக்கு மட்டுமே தனிச் சந்தை இருந்த நமது ஊரில் நாளங்காடி எனும் தினசரி சந்தை பேரூராட்சி நிர்வாகத்தால் 2007 - 2008-ம் ஆண்டு பழைய ரேடியோ நிலையம் இருந்த பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் உருவாக்கப்பட்டது.
சந்தை இல்லாத ஏர்வாடியின் குறையைத் தீர்த்த முதல் தினசரி சந்தை இது.
காய்கறி & மீன் சந்தை என வெளியில் எழுதப்பட்டிருந்தாலும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி வியாபாரமும் இங்கே நடக்கிறது.
அதை அதை ஒட்டி வெளியில்,
எதிர் புறத்தில் கோழி இறைச்சியும், காய்கறிகளும் கிடைப்பதால் ஒரே இடத்தில் அனைத்தும் வாங்கும் வசதி இதனால் கிடைத்து விடுகிறது.
ஊரில் ஆங்காங்கே இறைச்சிக் கடைகள் இருந்தாலும் கனிசமான மக்கள் இங்கே வந்து வாங்கிச் செல்கிறார்கள்.
இறைச்சி, மீன் போன்றவற்றின் வியாபாரங்களைப் பொறுத்தவரை ஏர்வாடியில் எப்போதுமே அதற்கு தனி மவுசு உண்டு.
பக்கத்து ஊர் மற்றும் கிராமப்புற மக்களும் ஏர்வாடியின் இறைச்சிக் கடைகளை விரும்பித் தேடி வந்து வாங்குவதையும் காணலாம்.
சந்தையின் உட்புறம் சுத்தமாகவும், சுகாதாரமான அமைப்பிலும் இருப்பது பாராட்டப்பட வேண்டியது.
எவ்வளவு கூட்டம் இருந்தாலும் கூச்சல் குழப்பங்களை ஏர்வாடியின் தினசரி சந்தையில் பார்ப்பது மிக அரிதானது.
இந்துக்களும், முஸ்லிம்களும், கிரிஸ்தவர்களும் ஒன்றாக அமர்ந்து வியாபாரம் செய்வது ஏர்வாடி சந்தையில் சமூக நல்லிணக்கத்திற்கும் பஞ்சமில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு.
இது போக அங்கு வந்து செல்லும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பாசத்தோடு உணவு கொடுத்து மகிழ்கிறார்கள் வியாபாரிகள்.
சந்தைக் கொக்கு பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
(அது பற்றி முன்னர் ஏற்கனவே ஏர்வாடியின் நண்பர்கள் சிலர் தங்கள் முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.)
சுமார் ஒரு வருடத்திற்கு முன் சந்தை அருகே பச்சை குஞ்சாகக் கிடந்த கொக்கை,
இரக்கத்தோடு எடுத்து வந்து,
தன் கடையில் வைத்துப் பாதுகாத்து, உணவளித்து, பராமரித்து வளர்த்து ஆளாக்கி பறக்கவிட்டார் ஒரு மீன் கடைக்காரர்.
வருடம் ஒன்று கடந்து விட்டாலும், காலை நேரங்களில் நாள் தவறாமல் சந்தைக்கு வந்து விடுகிறது அந்தக் கொக்கு.
ஒவ்வொரு மீன் கடைக்கு முன்னாலும் மாறி மாறி நின்று, அவர்கள் ஆசையாய் கொடுக்கும் மீன்களை உரிமையோடு சாப்பிடுகிறது.
அதற்காக வீசப்படும் மீன்களை கண்ணிமைக்கும் நேரத்தில், காக்கைகள் களவாடிவிடும் போது,
கழுத்தை உயர்த்தி கடைகடைக்காரரை கொக்கு பார்க்கும் பார்வை இருக்கிறதே.....
என் மீனை களவாடிச் சென்றுவிட்டான் காக்கை கள்ளன். மீண்டும் எனக்கொரு மீன் வேண்டும் என்று கேட்பது போல இருக்கும்.
வயிறு நிறைந்ததும் இடத்தை காலி செய்து சிறகடித்துக் கிளம்பிவிடும்.
சந்தைக்குச் சென்றால் மறக்காமல் அந்தக் கொக்கை பார்த்து வாருங்கள்.
ஏர்வாடி சந்தை உணவுப் பொருட்களோடு,
அமைதி, தூய்மை, அன்பு, மதனல்லிணக்கம் என இவற்றையும் சேர்த்தே வழங்குவது அதன் தனித்துவத்தின் அடையாளமாக இருக்கிறது.
இந்த அடையாளம் எப்பொதும் தொடர இறைவன் அருள் புரியட்டும்!
https://www.facebook.com/permalink.php?story_fbid=423222441167970&id=386252861531595