ஏர்வாடி.
மனிதநேயம் வாழும் ஊர்!
ஊசிப் பொத்தை, சப்பட்டை பொத்தை, நம்பியாறு என்று நமது ஊருக்கு பல அடையாளங்கள் இருந்தாலும்,
மதச் சாயம் கலைந்து,
மனித நேயம் பேணும் நம் மக்களின் மகத்துவமிக்க பண்புதான் நமது ஊரின் அடையாளங்களில் முதன்மையானது.
முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிகளில் இந்துக்களும், கிரிஸ்தவர்களும்,
இந்துக்களின் திருமண நிகச்சிகளில் முஸ்லிம்களும் ஒன்றாகக் கூடி, வாழ்த்துக்களைப் பரிமாறி விருந்துண்ணும் காட்சிகளை நமதூரில் பஞ்சமின்றி பார்க்கலாம்.
முஸ்லிம்களும், கிரிஸ்தவர்களும் தங்கள் வீட்டுத் திருமணங்களின் போது,
அசைவம் சாப்பிடாத தங்கள் இந்து சகோதரர்களுக்காக பரபரப்பு நிறைந்த அந்த சூழ்நிலையிலும் தனியாக சைவ உணவை தயாரித்து அவர்களை உபசரிக்கும் உயர்ந்த தன்மைகளை நமது ஊரின் திருமண நிகழ்வுகளில் சாதாரணமாகக் காண முடியும்.
தீபாவளி போன்ற இந்துக்களின் பண்டிகை தினங்களில்,
தங்கள் இஸ்லாமிய, கிரிஸ்தவ நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் இந்து இளைஞர்களின் இனிமையான குணமும்,
தங்கள் வீட்டுப் பலகாரங்களை பக்கத்தில் வாழும், இஸ்லாமியர், கிரிஸ்தவரின் வீடுகளுக்கும் கொடுத்து பலகாரத்தோடு பாசத்தையும் பரிமாறிக் கொள்ளும் இந்துப் பெண்கள் மற்றும் பெரியவர்களின் பெருந்தன்மையும்,
அதே போன்று ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின் போது தங்கள் வீட்டு பிரியாணியை பிரியத்தோடு இந்துக்கள், கிரிஸ்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் முஸ்லிம்களின் ஈகைக் குணமும்,
இவ்வாறே கிரிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது,
புத்தாடையோடும், புன்னகை பூத்த முகத்தோடும் முஸ்லிம் மற்றும் இந்துக்களின் இல்லங்களுக்கு கையில் கேக் -வுடன் வந்து வாழ்த்து கூறும் கிரிஸ்தவ மக்களின் உயர் பண்புகளும் நமது ஏர்வாடியின் சாந்திக்கும், சமாதானத்திற்கும் என்றென்றும் சான்று பகரும்.
மதங்களில் மாற்றங்கள் இருந்தாலும்,
நல்ல மனங்களில் அனைவருமே இணைந்திருப்பது ஏர்வாடியின் தனிச் சிறப்பு.
மத வேறுபாடின்றி, சமூக வேற்றுமைகளின்றி,
இரத்தம் கொடுப்பது, மீட்புப் பணிகளில் ஈடுபடுவது, மருத்துவ உதவிகள் புரிவது, நலத்திட்டங்கள் வழங்குவது போன்ற பொதுச் சேவைகளில் தங்களை ஈடுபடுத்தும் அனைத்து தரப்பு மக்களின் விசாலமான மனமும், சிந்தனையும்தான் நமது ஏர்வாடியின் முன்னேற்றத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் அசைக்க முடியாத அஸ்திவாரமாக இருக்கிறது.
ஸ்கூலில் உன் ஃபிரண்ட்ஸ் யார்? யார்?
என்று எதார்த்தமாக என் ஐந்து வயது மகனிடம் கேட்டபோது,
எதுக்கு வாப்பா கேக்குறீங்க? என்று திருப்பிக் கேட்டுக் கொண்டே......
பிரசன்னா, உஜைனி, ஜோனா, சந்தோஷ், முஹம்மது சஹீன், இம்மானுவேல் என்று அவன் அடுக்கிக் கொண்டே சொன்ன பெயர்கள் இவை.
குழந்தைப் பருவத்தில் தொடங்கி,
இளமையில் தொடர்ந்து,
முதுமை வரை நீடித்து உறவாடும் நட்பு நிறைந்த நம் நல்லிணக்கம் உலகம் உள்ளவரை தொடர்ந்திட இறைவன் அருள் புரியட்டும்.
(ரபீயுல் அவ்வல் என்ற இந்த இஸ்லாமிய மாதம் முழுதும் நடைபெறும்,
சமூக நல்லிணக்கம் பேணி,
மனித நேயம் காத்த மாண்பாளர்,
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த "மீலாது நபி" கொண்டாட்டத்தின் நினைவாக இப்பதிவு)