வீட்டுக்குள்ளேயே கட்டப்பட்டு விட்ட கழிவறைகள் மற்றும் குழியலறைகளின் வருகைக்கு முன்,
தங்கள் சுய தேவையை நிறைவேற்றுவதற்கும், குளிப்பதற்கும் ஏர்வாடிகாரர்கள் சென்றுவந்த ஊரின் மிக முக்கியமான, மிகப் பிரபலமான இடங்களில் இந்த வவ்வா பாலமும் ஒன்று.
பாலத்திற்கு மேற்கு புறம் இருக்கும் இரண்டு படித்துறைகளில் முதல் படித்துறை ஆண்களுக்கு என்றும், இரண்டாவது படித்துறை பெண்களுக்கு என்றும் யார் எப்போது பங்கு போட்டார்களோ யாருக்கும் தெரியாது.
பெண்களும் ஆண்களும் தங்கள் இடங்களில் அமைதியாகக் குளித்துச் செல்வார்கள்.
கூட்டம் அதிகமாகவுள்ள சில நேரங்களில் மட்டும் துணிகளைத் துவைப்பதற்கு படிக்கட்டுகளை பிடிக்க சின்னச் சின்ன வாய்ச் சண்டைகள் ஏற்படுவதுண்டு.
பாலத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு பக்கம் படிக்கட்டும், அதற்கு நேரெதிரே சிமெண்ட்டில் போடப்பட்ட சருக்கு போன்ற வழியும் இருக்கும்.
அந்த சருக்கு வழியாக தங்கள் சைக்கிள்களையும், பைக்குகளையும் உள்ளே இறக்கி, அதை பாலத்திற்கு கீழே நிறுத்தி, தேங்காய்த் துரும்பு சிதறச் சிதறத் தேய்த்து கழுவுவோரையும்,
தங்கள் வீட்டுக் கால்நடைகளையும் இவ்வாறே நீருக்குள் இறக்கி குழிப்போர் புலம்புவதைக் காதிலேயே வாங்காமல் அவற்றை அழகாய் குளிப்பாட்டுவோரையும் தினம் தினம் காணமுடியும்.
பாலத்திற்கு கிழக்கே நடு வாய்க்காலுக்கு தண்ணீர் பிரியும் இடத்தில் இருந்த கலங்கி கசத்தையும், அதன் ஆழத்தையும் சிறுவயதில் அதில் கள்ளக் குளியலும், நல்லக் குளியலும் குளித்த நம்மூர்காரர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
வவ்வா பாலத்தோடும், அதன் பிளைட் வாய்காலோடும் தொடர்புடைய எத்தனை எத்தனையோ சம்பவங்களும், நிகழ்வுகளும் நம்மில் நினைவுகளாகப் புதையுண்டுக் கிடக்கலாம்.
அந்த நினைவுகளைக் கிளறிப் பார்பதற்கும், இயற்கையோடு நாம் உறவாடிய அந்த பசுமையான நாட்களை உணர்ந்து பார்பதற்குமே இப்பதிவு.
செயற்கையான நம்முடைய வாழ்க்கை முறை மாற்றத்தால்,
இயற்கையை விட்டு நாம் தூரமாகிவிட்டோம்.
தன் மடி தவழ்ந்தவர்கள் தன்னை விட்டு பிரிந்து போய்விட்டார்கள் என்ற ஏக்கமோ என்னவோ தற்போது வவ்வா பாலம் மற்றும் பிளைட் வாய்காலின் நிலை பரிதாமக ஆகிவிட்டது.
சிலர் இன்றும் இங்கு வந்து போய் கொண்டிருந்தாலும், அதன் பழைய அழகு, கலை, கலகலப்பு இவற்றில் பாதியைக் கூட இப்போது பார்க்க முடியவில்லை.
இனியும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை.
இயற்கையின் சிதைவு
நமக்கான அழிவே!