மறைந்து வரும் கடந்த கால சமாச்சாரங்களில் மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலையும் ஒன்றாகி வருகிறது.
நமது ஊரின் திருமண நிகழ்ச்சிகளில் தாம்பூழப் பைகளில் இருந்த வெற்றிலைப் பாக்கு காணாமல் போய், பிஸ்கட் பாக்கெட், சாக்லேட், ஜூஸ் என புதிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது.
வெற்றிலைப் பாக்கு, சுண்ணாம்பு கிடைக்கும் கடைகளை தேடித் திரியவேண்டிய நிலை இன்று உருவாகி விட்டது.
பெட்டிக் கடைகளின் ஓரத்தில் நட்டப்பட்டிருக்கும் வெற்றிலைப் பாக்கு இடிக்கும் கற்கள் அனாதைகளாகி நிற்கிறது.
பாக்கைப் பார்காமலேயே அவற்றை வெட்டிச் சீவிக் கொடுக்கும் கடைக்காரர்களின் செயல் பார்பதற்கு அற்புதமாக இருக்கும்.
வெற்றிலைப் பாக்கு, சுண்ணாம்பு இவற்றை தகர டப்பாவிலோ அல்லது செம்பு, பித்தளைப் பெட்டியிலோ வைத்திருக்கும் வீட்டிலுள்ள வயதானவர்கள், சின்னஞ் சிறுசுகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்க நடத்திய போராட்டங்கள் சுவாரஸ்யமானது.
வயல் மற்றும் கூலி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வரியவர்களான வயோதிகர்கள், ஐந்து பைசாவுக்கு விற்கப்பட்ட ஆரஞ்சு மிட்டாயின் காலியாகிப்போன கவர்களில் அவற்றை வைத்து, தங்கள் ஆடைகளில் பொதிந்து தேவைப்படும் போது அதை எடுத்து ஓர் ஓரமாய் அமர்ந்து மென்று சுவைத்த காட்சிகளை காலம் காணாமல் ஆக்கிவிட்டது.
வெற்றிலையின் காம்பைக் கடித்து, அதன் நுனியைத் கிள்ளியெடுத்து, சுண்ணாம்புத் தடவி, பாக்கை மென்று பின்னர் வாகாய் அதை மடித்து, வாயில் போட்டு மெல்லும் அழகே தனியழகாக இருந்தது.
நாக்கு சிவந்து விட்டதா என்பதை அறிய அவ்வப்போது நுணி நாக்கை வெளியே நீட்டி, கண்களை தாழ்த்தி பார்ப்பதும், சரியாக சிவக்காவிட்டால் விரல் நுணியில் கொஞ்சம் சுண்ணாம்பை எடுத்து வாயைப் பிளந்து கடவாய் பற்களுக்கு அருகில் அவற்றைத் தடவி சிவக்க வைப்பதும் பலரின் பழக்கம்.
திருமண வீடுகளில் வெற்றிலை போடும் சிறுவர்கள் யாருடைய நாக்கு நன்றாக சிவந்துள்ளது என்று போட்டி போடுவார்கள். நன்றாக சிவக்க வேண்டும் என்ற ஆசையில் அளவுக்கு அதிகமாக சுண்ணாம்பைத் தடவி வாய் புண்ணாகிப் போனவர்களும் உண்டு.
என்ன ஒன்று.....!!!! மென்று கொண்டிருக்கும் போது வெளியாகும் எச்சிலை உதட்டின் மீது இரு விரல்களையும் வைத்து அல்லது இரண்டு உதடுகளையும் சற்று குவித்தவாறு வைத்து பொது இடங்களில் சிலர் "புளிச் புளிச்" என்று துப்புவது தான் பலருக்கு எரிச்சலைத் தந்தது.
மற்றபடி அன்று வெற்றிலையை விரும்பாதோர் யாருமே இருக்கவில்லை. காலத்தின் ஓட்டத்தில் வெற்றிலையின் இடம் வெற்றிடமாகிப் போனது.
இழந்துவிட்டோம் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.
Source:
|