இந்தியக் கல்வி அமைப்பு சாணக்கியத் தந்திரத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
“ஆளும் கருத்துகள், ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே” - கார்ல் மார்க்ஸ்.
புதிர் : ஒரு கோடு கிழிக்கவும். அதில் எந்த மாற்றமும் செய்யாமலே, அதைச் சிறியதாக்க வேண்டும்.
விடை: கோட்டுக்குப் பக்கத்தில் அதைவிட நீளமான கோட்டைக் கிழித்தால், முதல் கோடு சிறியதாகிவிடும்.
ஊர்ப் பொதுக் கிணற்றில் சில சாதியினர் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று விலக்கி வைத்துப் பாகுபாடு காட்டிய காலம் உண்டு. இன்று அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம். ஆனால், ஊரில் வசதி படைத்த சிலர், பக்கத்திலேயே ஒரு பெரிய கிணற்றை வெட்டி, ஏகப்பட்ட தண்ணீரை அதில் சேகரித்து, பழைய கிணற்றின் தண்ணீரையும் இதற்குத் திருப்பிவிட்டு, கிணற்றில் யார் வேண்டுமானாலும் தண்ணீர் எடுக்கலாம்; ஆனால், ஒரு குடம் ரூ.20 என்று நிர்ணயித்துவிட்டால் அது சட்ட விரோதமில்லை. ஆனால், அந்த விலை கொடுத்து யாரால் வாங்க இயலும்?
“எங்களோட ஒரு நாள் கூலி முழுசும் தண்ணிக்கே போயிடுமே! எங்களால எப்படி முடியும்?”
“அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்? நீங்க தண்ணி எடுக்கக் கூடாதுன்னு நாங்க ஒண்ணும் பாகுபாடு காட்டலையே!”
கதியற்றவர்களின் குரல்
சென்ற நூற்றாண்டின் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கூட மிகப் பெரும்பாலான பள்ளிகள், அனைத்து வர்க்க சாதிக் குழந்தைகள் ஒன்றாகக் கற்கும் பொதுப் பள்ளிகளாகத்தான் இருந்தன. அவற்றில் கற்று வெளிவந்த மாணவர் முன் ஒரு சம தளம் இருந்தது. அடித்தட்டு மாணவர்களும் வசதி படைத்தவருடன் சமமாகப் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. 70-களின் இறுதியில் தனியார் பள்ளிகள் வளரத் தொடங்கி, பல்கிப் பெருகி, இன்று கல்வியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை வெவ்வேறு மட்டப் பள்ளிகள். ஆயிரம் உண்டிங்கு சாதி என்பதுபோல், ஆயிரம் மட்டம் கொண்ட அமைப்பு. சாதியப் பிரமிடில் ஒவ்வொரு சாதிக்கும் உரிய இடம் துல்லியமாகக் குறிக்கப்பட்டிருப்பதைப் போல், ஒவ்வொரு மட்டப் பள்ளிக்கும், அது வசூலிக்கும் கட்டணத்தைப் பொறுத்து, கல்விப் பிரமிடில் இடம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலே போகப் போக, கட்டணம் அதிகரிக்க அதிகரிக்க, அது தரம் உயர்ந்த பள்ளி என்று விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தக் கோணத்தில் அடித்தட்டில் ஏழைகளுக்கு மட்டுமேயான, இலவசக் கல்வி அளிப்பவை அரசுப் பள்ளிகள். ஏழைகளுக்கு மட்டுமே உரிய அனைத்தும் தரமற்றவை என்பதும் விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிட்டதால், அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்பது அரசாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டதைப் போல் ஒரு தோற்றம் உருவாகிறது. அதனால்தான் அரசுப் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரை அரசே
`கருணை' கொண்டு தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறது. ஏழைகளுக்கு மட்டுமே ஆனவை கொடுமையான புறக்கணிப்புக்கும் எளிதாக இலக்காகிவிடுகின்றன. அப்பள்ளிகளில் போதுமான ஆசிரியரோ, வகுப்புக்கு ஒரு ஆசிரியரோ, மேல் வகுப்புகளில் பாடத்துக்கேற்ற ஆசிரியரோ, தேவையான கண்காணிப்போ, கட்டுமான வசதிகளோ எவையும் நிறுவ வேண்டிய கட்டாயமில்லை. குரலற்றவர்களின், கதியற்றவர்களின் தேவைகளுக்கு அரசு என்று செவிசாய்த்தது?
புறம்தள்ளும் உத்திகள்
இந்தியக் கல்வி அமைப்பு சாணக்கியத் தந்திரத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிரமிடின் உச்சியில் இருக்கும் 5 முதல் 10 சதவிகிதத்தினர் மட்டுமே வென்றெழுந்து அனைத்து வாய்ப்புகளையும் அள்ளிக்கொண்டு போவதற்கு ஏற்றவண்ணம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மற்றவரின் திறமைகளெல்லாம் அழித்தொழிக்கப்பட்டு, போட்டியிடும் சக்தியை இழக்கின்றனர். கல்வியின் மூலம் சக்தி வாய்ந்த சமுதாய உருவாக்கம் நடக்கின்றது. அதற்குத் தகுந்த பல உத்திகள். பெரும்பான்மையினரை வாய்ப்பு வட்டத்தினின்று புறம்தள்ளும் உத்திகள். ஜனநாயகத்தின் மொழியைப் பயன்படுத்தியே தன் பாகுபடுத்தலை நிறைவேற்றிக்கொள்ளும் உத்திகள். ஏகலைவர்களுக்குக் கற்பிக்க முடியாது என்று இன்றைய துரோணாச்சாரியர்கள் சொல்ல முடியாது. ஆனால், கற்கும்
'தகுதி', 'மெரிட்'
யாருக்கு உண்டு என்பதற்கு விதிகளை, இலக்கணத்தை, வடிகட்டிகளை நிர்ணயிக்கலாம். இன்றைய நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் (ஐ.ஐ.டி. - ஐ.ஐ,எம். நுழைவுத் தேர்வுகள்) இவ்வகையில்தான் வடிவமைக்கப்படுகின்றன. எனக்கு மிகப் பிடித்த கார்ட்டூன் : டென்னிஸ் தெ மெனெஸ் என்ற 5 வயது படுசூட்டிகைச் சிறுவன், தன்னிலும் பொடியவனான ஜோயிக்கு விளையாட்டு ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டு சொல்கிறான்: “இதை நினைவில் வைத்துக்கொள் ஜோயி. விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால், எந்த விளையாட்டிலும் நீ ஜெயித்துவிடலாம்.” இந்தியக் கல்வி அமைப்பும், கொள்கையும், விதிகளும் மேல் வர்க்க சாதியினரால் அவர்களது நலனுக்காகவும் அவர்களது ஆதிக்கம் தொடர்வதற்காகவும் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான குழந்தைகளின் இழப்புக்காக, அவர்களை ஒதுக்குவதற்காக வடிவமைக்கப்பட்டவை.
ஆங்கிலம்; வெற்றிக்கான மந்திரக்கோல் அல்ல!
ஒரு முக்கிய உத்தி, ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்வியே தரமானது, தமிழ் வழிக் கல்வி தரமும், தகுதியும் அற்றது என்ற எண்ணம் சமுதாயம் முழுவதும் கேள்விக்கு அப்பாற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு, மாணவர்களெல்லாம் தமிழ் வழியிலிருந்து ஆங்கில வழிக்கு மாறுகின்றனர். ஆங்கில வழிக் கல்வியைச் சிறப்பாகக் கற்று, அதில் முதன்மை பெற்று, அதன் வழியே போட்டி உலகில் வெற்றிகளைத் தட்டிக்கொண்டு போவது யாருக்கு இயலும்? வசதி படைத்தவர்களுக்கு, ஆங்கிலம் சரளமாக வீட்டில் புழங்கும் சூழல் உடையோருக்கு, கல்விப் பாரம்பரியம் கொண்ட சாதிகளுக்குத்தான் இயலும். இன்று தெருவுக்குத் தெரு, சிற்றூர்களில் கூட முளைத்திருக்கும் ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்தப் பள்ளிகளில் கஷ்டப்பட்டுத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் தலித், பழங்குடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களால் அப்படி ஒன்றும் வாய்ப்புகளைத் தட்டிக்கொண்டு போக முடியவில்லை. இவர்களில் பலர் 8 அல்லது 10 வகுப்புக்குள் பள்ளியிலிருந்து விலகிவிடுகின்றனர். ஆங்கில வழிக் கல்வி வெற்றிக் கதவைத் திறக்கும் மந்திரக் கோல் என்பது இவர்களைப் பொறுத்தவரை உண்மையல்ல.
இருளில் ஒரு தலைமுறை
இதற்குக் காரணம், பெரும் 'எலிட்' பள்ளிகள் தவிர்த்த மற்ற பெரும்பாலான ஆங்கில வழிப் பள்ளிகளின் தரம். ஆங்கில வழிப் பள்ளிகளில்தான் தரமான கல்வி கற்றுத்தரப்படுகிறது என்பது பொய். புற்றீசலாகப் புறப்பட்டிருக்கும் இந்தப் பள்ளிகளில் கற்றுத் தரும் ஆசிரியர்கள் யார்? குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு கசக்கிப் பிழியப்படும் பெண்கள் பட்டாளம். இவர்கள் அனைவருமே தமிழ் வழியில் கற்றவர்கள். சொல் புரியாத, பொருள் புரியாத, உச்சரிப்புத் தெரியாத ஓர் ஆங்கிலக் கல்விதான் இவர்கள் கற்றுத் தருவது. மனப்பாடமே கல்வியென்ற சீரழிவுதான் இந்தப் பள்ளிகளில் காண்பது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் நாடாளுமன்றத்தில் பேசினார்: “இந்தியக் கல்வியின் சாபக்கேடு புரியாமை என்னும் கொடுமை.” சபிக்கப்பட்ட வகுப்பறையின் இருளில் ஒரு தலைமுறை உருவாகிறது. எந்த நாட்டிலும் தாய் மொழி அன்றி, வேறு மொழி வழியே கற்பிக்கும் தகுதி வாய்ந்த லட்சக் கணக்கான ஆசிரியர்களை உற்பத்தி செய்யவே முடியாது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்றுத் தருவதற்குத் தேவையான ஆசிரியரைத்தான் உருவாக்க முடியும்.
ஆதிக்க சக்திகளின் முடிவு
தமிழ் வழிக் கல்வியென்றால், அதில் திறன் பெறுவது அனைவருக்கும் இயலும். ஆங்கில வழி என்றால், மேல் சொன்னவர்களால் மட்டுமே இயலும். தங்களுக்குப் பெரும் அனுகூலம் அளிக்கும் வழியே சிறந்தது என்று அனைவரையும் நம்பவைத்து, அவ்வழியில் கற்க இயலாத பெரும்பான்மைக் குழந்தைகளை அதற்கு இழுத்து வந்து, அதில் அவர்களை மருகிக் கருக வைத்து, தாங்களே சிறந்தவர் என்று வெற்றிவாகை சூடிக்கொள்ளும் வழி.
பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிராக இருப்பவை பல்மட்டப் பள்ளிகளும், ஆங்கில வழிக் கல்வியும் மட்டுமல்ல. கல்வி அமைப்பின் ஒவ்வொரு இழையிலும் பாகுபடுத்தல் பின்னிப் பிணைந்திருக்கிறது. பாடத்திட்ட சுமை, வயதுக்கு அதிகமான, குடும்பத்திலும், டியூஷனிலும் உதவி பெறாமல் கற்க முடியாத சுமை, கற்றல்-கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு முறைகள், வகுப்பறைச் சூழலும், மொழியும் என அனைத்தும் அடித்தட்டுக் குழந்தைகளை அச்சுறுத்தி விரட்டுபவை. வசதி பெற்ற குழந்தைகளுக்குப் போட்டி உலகில் வெற்றியை உறுதி செய்பவை.
இப்படிச் சொல்லும்போது, ஏதோ ஆதிக்க வர்க்க சாதியினர் ரகசியமாகக் கூடி, ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி, படிப்படியாக நிறைவேற்றுகின்றனர் என்பது அல்ல பொருள். ஒரு சமுதாயத்தில் ஆதிக்க சக்திகள் கருத்துகளையும், மதிப்பீடுகளையும், சமுதாயத்தின் முடிவுகளையும், பல வகைகளில், ஒளிந்தும், மறைந்தும், வெளிப்படையாகவும் அவ்வாறுதான் ஆட்கொள்கின்றன. இக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள மார்க்ஸின் வார்த்தைகளுக்கு அதுதான் பொருள்.
ஓர் அரசியல்வாதி இவ்வுண்மையை மறைவின்றிச் சொல்கிறார், “இந்தியாவில் யார் அரசு அமைப்பது என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்த அரசு என்ன செய்யும் என்பதை ஆதிக்க சக்திகள் முடிவுசெய்கின்றன.” இதற்கு மாற்றினைத் தோற்றுவிக்கும் பூகம்ப சக்தி இந்திய ஜனநாயகத்துக்கு இருக்கிறதா? இன்று நிச்சயம் இல்லை. நாளை தோன்றுமா?
- வே. வசந்தி தேவி, கல்வியாளர்,
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்,
|