விலைவாசி (சிறுகதை)
சமயலறையில் பாத்திரங்களின் பயங்கர சத்தம்; முரளிக்கு புரிந்தது மோகனா கோபத்தில் இருக்கிறாள் ..பொதுவாக பெண்களின் கோபத்திற்கு பாத்திரங்களும் பச்சமழலைகளுமே பலியாடுகள் பாவம் எல்லோருக்கும் கோபம் மூக்குலனா மோகனாவுக்கு விரல் நுனில. கேஸ் அடுப்ப பத்தவச்சதும் பத்திக்குமே அந்தமாதிரி! மழையின் அறிகுறி மின்னல் இடி; வீட்டில் போருக்கு அறிகுறி இந்த பாத்திரசத்தமும் சாடை பேச்சும்!
அப்போது ஏதும் வாய் திறக்கவில்லை மோகன். திறந்திட்டா சண்டைய வெத்தல பாக்கு வைக்காம வரவேற்ற மாதிரிதான்..
மாலை நேரம்..
"என்னங்க நீங்க கொடுக்கிற 3000 த்தை வச்சு என்னால சமாளிக்க முடியாது. அடுத்த மாசத்திலேருந்து கூட ஒரு 1000 கொடுங்க"
"என்னடி இது.. ஆபிஸ்லேருந்து வந்ததும் வராததுமாய்.. மனுசன் ஒரு கப் டீ கூட குடிக்கல. அதுக்குள்ள பஞ்சாயத்தா?" முரளி எரிந்து விழுந்தான்.
"ஒன்னு செய்யுங்கங்க.. அடுத்த மாசத்துலேருந்து நீங்க வரவு செலவு பாருங்க! நீங்களாச்சு உங்க சமையல் ஆச்சு !உங்களுக்கு ஒரு கும்பிடு சமையலுக்கு ஒரு கும்பிடு !ஏதோ என் கடமைக்கு வேலக்காரி மாதிரி சமச்சு கொட்டுறேன்."
மோகனாவுக்கு சுத்தி வளச்சி பேசுறது புடிக்காது! சண்டைலேயும்
சார்ட்கட்தான் .சும்மா கடுகாட்டம் பொரிஞ்சிட்டா பொரிஞ்சி...
" என்னடி பேயடிச்சமாதிரி பேசிட்டு இருக்க! ஆபிஸ்லதான் உழைக்கமுடியும்
வீட்லேயுமா? எனக்கு அங்கே வேலைனா சமச்சி போடுறதுதானே உன்னோட வேல!"
தனக்கு வேலை இல்லை என தெரிந்ததும் சைத்தான் அடுத்த வீட்டுக்கு நகர்ந்தது.
"அந்த காலத்துல நான் காலணாவுக்கு ஒரு கடையையே வாங்கிட்டு வருவேன்." சலித்தவாறு முரளியின் தாயார் கண்ணம்மாள்.
"காலணாவுக்கு கடையை வாங்குன சரி.. அப்ப ஒரு ஆளுக்கு சம்பளம் எவ்வளவு இருந்துச்சு? ஒரு ருபாயா? ரெண்டு ருபாயா?" இப்ப கொடுக்குற மாதிரி பத்தாயிரம்
கொடுத்தாங்களா? ஆ.. ஊன்னா இப்படிதான் எல்லோரும் சொல்றீங்க." முரளி.
"எதுக்கு தேவையில்லாம வாக்குவாதம்.. நான் கேட்டத கொடுங்க.. அப்பத்தான் என்னால சமாளிக்க முடியும்.. இல்லன்னா நீங்களே அடுத்த மாசத்துலேருந்து வரவு செலவை பார்த்துக்குங்க" பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொன்னாள் மோகனா.
"இங்க பாரு.. செலவை குறைக்கணும்னா, முதல்ல தேவைகளை கொஞ்சம் சுருக்கிக்க முயற்சி பண்ணு.. யார் வரவு செலவை பார்த்தாலும் கதை ஒண்ணுதான்.. காலைல காப்பி கட் பண்ணு. வாரத்துக்கு ரெண்டு தடவ இறைச்சி எடுக்குறத ஒரு தடவையாக்கு.. துணி இனி நாமே துவச்சுக்கலாம்.. டி.வி அதிகம் பாக்குறது.. அடிக்கடி ஃபேன் போடுறது,
தேவையில்லாம லைட் போடுறது இதையெல்லாம் கொஞ்சம் குறைசுக்கலாம்.. இப்படி செஞ்சா நீயும் நிதி அமைச்சர்தான்" கணவனின் பதிலில் இருந்த நியாயம் புரிந்தவளாய், அதை செயல்படுத்திதான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் மேற்கொண்டு வாதாடாமல், மற்ற வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள் மோகனா.
அடுத்த மாதம்...
"என்னங்க நீங்க சொன்னமாதிரி நான் நடந்துகிட்டதால இந்த மாதம் 700 ருபாய் மிச்சமாச்சு. பக்கத்து வீட்டு மாலதி பார்ட் டைம் ஜாப் செய்யுறா.. நானும் அதுல ஜாய்ன் பண்ணிக்கலாம்னு
இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?"
"நீ என்ன செஞ்சாலும் எனக்கு பிரச்சினை இல்ல. என் கிட்ட மறுபடியும் வரக்கூடாது அவ்வளவுதான்.புரிஞ்சுதா?"
"சரி.. நான் ஒண்ணு கேட்பேன்.கோபப்படக்கூடாது"
"விசயத்த சட்டுன்னு சொல்லு.புதிர் போடாத!"
"அந்த மாலதிக்கு அவர் வீட்டுக்காரர் போத்தீஸ்ல ஒரு ட்ரெஸ் எடுத்து கொடுத்துருக்கார்
பாருங்க.. அப்படியே சினேகா உடுத்துனமாதிரி இருக்கு.. எனக்கும் அதுமாதிரி வாங்கணும்னு ரொம்ப ஆசை! இந்த மாசம் மிச்சமான பணத்தில அதை வாங்கிக்கவா?"
அடுத்தப் பிரச்சனை ஆரம்பம் ஆகப்போவதை உணர்ந்த முரளிக்கு தலை சுற்றியது.