அஸ்ஸலாமு அலைக்கும். ஈமானிய மொட்டுக்கள் 2015 நிகழ்விற்காக ஈமான் அறக்கட்டளை நடத்திய சிறுகதை போட்டியில் 3 வது இடம் பெற்ற சிறுகதை. இதனை எழுதியவர் சகோதரி நஸீரா முஹைதீன். மொத்தம் 65 சிறுகதைகள் இந்த போட்டியில் இடம்பெற்றது.
மகனை” தர தர” என இழுத்து வந்தான் பஷீர்.வீட்டிற்குள் நுழைந்ததும் அந்த பிஞ்சு முதுகில் இரண்டு அடியும் விழுந்தது.எதற்கு வாப்பா அடிக்கிறாங்க?_என்ற காரணம் புரியாமல் அழுதான் பத்து வயது சிறுவன் முஹ்ஸின்.
என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடியாமல் வந்த ஜமீலா “என்னங்க ஆச்சு”_என்றாள்.
” உன் பிள்ளைக்கு விளையாட வேறு இடமே கிடைக்கலியா? அந்த வேண்டாதவன் வீட்ல போய் விளையாடிக்கிட்டிருக்கான். ”
நடந்ததை ஓரளவு புரிந்து கொண்ட ஜமீலா ஒன்றும் பேசாமல் மகனை உள்ளே அழைத்து சென்று சமாதானப்படுத்தினாள். அழுகை நின்றதும் ”ஏம்ப்பா முஹ்ஸின், பெரியாப்பா வீட்டுக்கு போனியா?” - என்றாள்.
“ஆமாம்மா. ஸ்கூல்ல இருந்து வரும் போதே ஸமீர் காக்காவும் ஹஸீனாவும் விளையாடவான்னு கூப்பிட்டாங்க. வீட்டுக்கு போய் யுனிஃபார்ம் மாத்திட்டு வரேன்னு சொன்னேன்மா. அதான் போனேன். விளையாடிட்டு வெளியே வரும் போது வாப்பாவை பார்த்தேன். என்னை பார்த்ததும் கோவத்தோட கையபிடிச்சு இழுத்துட்டு வந்துட்டாங்க.ஏம்மா? - என்றான் முஹ்ஸின்.
ஜமீலாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பஷீர் வேண்டாதவன் என்று சொன்னது வேறு யாரையும் அல்ல. அவன் உடன் பிறந்த அண்ணன் நஸீரை தான்.
ஒரு நான்கைந்து நாள் முன்பு வரை இருவரும் ஒற்றுமையாக தான் இருந்தார்கள். மாமாவும் மாமியும் மூத்த மகனுடன் இருந்தாலும் இவர்கள் வீட்டுக்கும் வந்து போய் இருந்தார்கள். தாய் தந்தைக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்து கொண்டார்கள் இரு மகன்களும். இருவரின் மனைவியரும் உடன் பிறந்த சகோதரிகளை போல நெருக்கமாக இருந்தார்கள். எல்லாம் நன்றாக தன் போய் கொண்டிருந்தது.
பஷீரின் தந்தை இரண்டு மகனையும் அழைத்து “எனக்கும் வயசாகுதுப்பா.அதனால நான் இருக்கும் போதே சொத்துக்களை உங்க ரெண்டு பேருக்கும் பிரிச்சு கொடுத்திடலாம்னு நினைக்கிறேன்” என்று சொன்ன போது ஆரம்பித்தது பிரச்னை.
அண்ணன் தம்பி இருவருக்கும் பண விஷயத்தில் அல்லாஹ் ஒரு குறைவும் வைக்கவில்லை. ஆனாலும் சொத்து பிரிவினை என்று வரும்போது உறவிலும் பிரிவினை வந்துவிடுகிறது. இருவரும் விட்டு கொடுக்க தயாராக இல்லை. இனி நீ அண்ணனும் இல்லை. நான் தம்பியும் இல்லை என்று கூறிவிட்டு வந்த பஷீர் ஐந்து நாட்களாக பெற்றவர்களையும் போய் எட்டி பார்க்கவில்லை.
இந்த விபரம் ஏதும் அறியாத முஹ்ஸின் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை ஸ்கூல் முடித்து வந்ததும் பெரியப்பா வீட்டுக்கு அண்ணனோடும் தங்கையோடும் விளையாட போயிருக்கிறான். இதுவே பஷீரின் கோபத்துக்கு காரணம். ஜமீலா எவ்வளவோ எடுத்து சொன்னாலும் கோபம் கண்ணை மறைத்த காரணத்தால் எதுவும் அவன் காதுகளில் ஏறவில்லை.
கையாலாகாத நிலையில் அல்லாஹ்விடம் ஒற்றுமைக்காக துஆ கேட்க மட்டுமே ஜமீலாவுக்கு முடிந்தது. தொலைபேசி மணி ஒலிக்க போய் எடுத்தாள். மறுமுனையில் பஷீரின் தாயார். ”அஸ்ஸலாமு அலைக்கும் மாமி. எப்படி இருக்கிறீங்க?” - ஜமீலா.
“வ அலைக்குமுஸ்ஸலாம். நல்லா இருக்கிறேன்மா. நீங்க எல்லோரும் நல்லா இருக்கிறீங்களா? பஷீர் எப்படி இருக்கிறான்?” - கேட்கும்போதே பெற்றவளின் குரல் தழுதழுத்தது.
“ நல்லா இருக்காங்க. இதோ அவங்க கிட்ட ஃபோனை கொடுக்கிறேன்” - என்றவள் ரிசீவரை மேஜையில் வைத்து விட்டு கணவனிடம் போய் “என்னங்க,மாமி லைன்ல இருக்காங்க” - என்றாள்.
முதலில் எழுந்தவன் பின்னர் ஏதோ நினைத்தவனாக”அந்த வீட்டில் இருக்கும் யாரோடும் இனி இந்த வீட்டுக்கு ஒட்டோ உறவோ கிடையாது. யாரோடும் பேச முடியாது” - என்று கத்தினான்.
வாயடைத்து போன ஜமீலா மாமியிடம் என்ன சொல்வது என்று யோசித்து கொண்டே ரிசீவரை எடுத்து, ”மாமி ...-என்று தொடங்கும் போதே”அவன் சொன்னது எனக்கும் கேட்டதும்மா” - என்று அழுது கொண்டே கூறியவாறு ஃபோனை வைத்துவிட்டாள்.
ஞாயிற்று கிழமை, மகனை மதரசாவுக்கு அனுப்பி விட்டு குர் ஆனை எடுத்து ஓத ஆரம்பித்தாள் ஜமீலா. பஷீர் சஹீஹுல் புஹாரி வாசித்து கொண்டிருந்தான். ஊரில் நடக்கும் எந்த பயானையும் தவற விடமாட்டான். நிறைய ஹதீஸ்களும் விளக்கங்களும் அழகாக தெளிவாக சொல்வான். குர் ஆனுக்கும் தெளிவாக விளக்கம் சொல்வான்.
62:5 مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
என்ற ஆயத்தை ஜமீலா ஓதி கொண்டிருக்கும் போது ‘மதரஸாவில் இருந்து வந்த முஹ்ஸினின் முகம் சரியாக இல்லை.” வாப்பா, நான் இனிமே மதரஸாவுக்கு போக மாட்டேன்”-என்றான். ”ஏன்ப்பா?”-என்று மகனை அணைத்தவாறே கேட்டான் பஷீர்.
“வாப்பா, நேத்து உஸ்தாத் ஹதீஸ்பாடம் நடத்தும் போது ,..வாப்பா நம்ம மேல கோவப்படுற மாதிரி நாம நடந்தால் அல்லாஹ்வும் நம்ம மேல கோவப்படுவான்னு சொல்லி தந்தாங்க” - என்று கூறி நிறுத்தினான்.
”அவங்க சொன்னது சரிதானே!”-பஷீர்.
“ஆனால் இன்னைக்கு சொல்றாங்க, சொந்தங்களோடு சண்டை போடக்கூடாது. உறவுகளை சேர்த்து வாழணும்னு சொல்றாங்க”
”அது எப்படி வாப்பா முடியும்? ஒன்னு பெரியப்பா வீட்டுக்கு போக கூடாது. அல்லது உங்களை கோபப்படுத்தனும்.. ஏதாவது ஒன்னு தானே செய்ய முடியும். அதனால இதெல்லாம் வேண்டாம். நான் ஸ்கூலுக்கு மட்டும் போறேன், மதரஸா வேண்டாம்”-என்றான் முஹ்ஸின்.
“ நீங்க தானே வாப்பா சொன்னீங்க, .படிக்கிறது மார்க் வாங்க மட்டும் இல்ல, படிச்ச மாதிரி நடக்கனும். படிச்ச மாதிரி நடக்க முடியலன்னா படிக்கிறதுல எந்த யூஸும் இல்லன்னு”
மகனின் வார்த்தைகள் பஷீரின் தலையில் ஓங்கி சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. உறவுகளை பேணுவது, பெற்றோரை மதிப்பது குறித்த அல்லாஹ்வின் வசனங்களும், அண்ணல் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளும் எனக்கு தெரியாதவை அல்லவே! எல்லாம் தெரிந்தும் பாவம் செய்ய துணிந்து விட்டது எப்படி? கோபப்பட்டு ஷைத்தானுக்கு இடம் கொடுத்து விட்டேனே! அறிந்து கொண்டே என் பெற்றோரை வேதனைப் படுத்தி என் சகோதரனை பகைத்து கொண்டு இருக்கிறேனே, குர் ஆனையும் ஹதீஸையும் நடைமுறைப்படுத்தாமல் வெறுமனே படித்து வைப்பதால் என்ன பயன்? அல்லாஹ் கூறியது போல் புத்தகம் சுமக்கும் கழுதைக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?
” பத்து வயது சிறுவனுக்கு உள்ள சிந்திக்கும் திறன் தனக்கு இல்லையே!” - என்று தன்னையே நொந்து கொண்ட பஷீர்,” முஹ்ஸின், தவறான விஷயங்களை செய்ய சொல்லி பெற்றோர்களே கூறினாலும் அதை செய்ய கூடாதுப்பா” - என்று மகனின் சஞ்சலத்துக்கு முடிவு கட்டினான்.” ஆனால் அப்படிப்பட்ட மோசமான வாப்பாவாக நான் இருக்க மாட்டேன்”-என்று மகனை அணைத்து கொண்டான்.
“ஜமீலா! எனக்கு இவ்வுலக சொத்தையும் கவுரவத்தையும் விட மறுமை வெற்றியும் சொர்க்கமுமே முக்கியம். நான் காக்கா வீட்டுக்கு போய் காக்கா, ம்மா, வாப்பா எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டு வர்றேன்” - தெளிந்த மனதோடும் சிரித்த முகத்தோடும் கிளம்பினான்பஷீர்.
“ நாங்களும் வர்றோம். அவங்க எல்லாரையும் பார்த்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு” - என்று கூறிக்கொண்டே சந்தோஷத்தோடு கிளம்பினார்கள் ஜமீலாவும் முஹ்ஸினும்.
وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
மகனின் வார்த்தைகளின் மூலமாக அல்லாஹ் பஷீருக்கும் நேர்வழி காட்டி விட்டான்.