அரபு : ஜாஸிம் அல் முதவ்வஃ தமிழ் : முஹம்மத் இம்தியாஸ் ஒரு சகோதரர் என்னிடம் : எனதுகுழந்தையைத் தொழுகையில் கூடுதலான கவனம் செலுத்தும் வகையில் எப்படி மாற்றுவது என்று கேட்டார். அதற்கு நான் இந்த கேள்வியை விட முக்கியமான கேள்வி
இருக்கிறதே என்றேன். இதனைக் கேட்டவுடன் அவருக்கு ஆச்சரியம் மேலிட்டது. இதனை விட முக்கியமான கேள்வியா? என்று பேச்சைத் தொடர்ந்தார்.
அதற்கு நானும் : ஆமாம் இதற்கு விடையளிப்பதை விட முக்கியமான ஒன்றுக்கு நாம் விடையைத் தேடவேண்டும். குழந்தை எந்தச் சூழலில் வளர்கின்றது என்பதை அறிந்தாக வேண்டும். இதனை வைத்துத் தான் அந்தக் கேள்விக்கு விடையளிக்க முடியும் என்று கூறினேன்.
சரி சூழல் எது என்தை மூலம் நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள் என்று கேட்டார்.
நான் அவரிடம் : நாம் முதலாவது குழந்தையின் பெற்றோர் தொழுகை விசயத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டும். இதுவிசயத்தில் நமது வீடுகளில் ஐந்து வேறுபட்ட நிலைமைகளை நாம் காணலாம்.
1. பெற்றோர் தொழுகையில் மிகப் பேணுதலாக இருப்பர். தொழும் இடம் வீடாக இருக்கலாம் அல்லது பள்ளிவாசலாக இருக்கும். பெற்றோர் தொழும் காட்சிகள் குழந்தைகளது மனதில் ஆழப்பதிய ஆரம்பிக்கும், குறிப்பாக குழந்தைகளது முதல் எட்டு வயது வரை இந்த நிலையைக் கவனிக்கலாம். ஆனால் இப்படியான சூழலில் வளரும் குழந்தைகளிடத்தில் நண்பர்களுடனான சகவாசம் அதிகரிக்க அதிகரிக்க சிலபோது தொழுகையில் சோர்வு ஏற்படலாம். என்றாலும் பெற்றோரது தொடர் நினைவூட்டல்களின் மூலம் குழந்தைகளது அந்த சோர்வு நிலையினை இல்லாது செய்துவிடலாம்.
2. தந்தை தொழுபவராக இருப்பார், தாய் தொழுகையை கடைபிடிப்பவராக இருக்கமாட்டார். இப்படியான வீடுகளில் குழந்தைகள் தொழுகைகளில் பெரிதாக கவனம் செலுத்துபவர்களாக இருக்கமாட்டார்கள். ஏனெனில் குழந்தைகள் தமதுஆரம்பப் பருவங்களில் தாயுடன் தான் அதிகமான பிணைப்பில் இருப்பர். ஆனால் இப்படியான சந்தர்ப்பங்களில் தந்தை அந்நிலையை மாற்ற பங்கெடுக்க முடியும். அவர் குழந்தையை தொழக்கூட்டிச் செல்லலாம், குழந்தையுடன் தொழுகைப் பற்றிப் பேசலாம், அல்லதுவீட்டில் குழந்தையையும் சேர்த்து தொழுகையை நடத்தலாம்.
3. தாய் தொழுகையில் பேணுதலாக இருப்பார், தந்தை அப்படி இருக்கமாட்டார். இப்படியான நிலையின் போது ஏற்கனவே கூறப்பட்டது போன்று நிலைமை சீரியஸாக இருக்காது. குழந்தையை பாட்டனாருடன் தொடர்புபடுத்திவிடலாம். அல்லது அக்குழந்தையின் வயதில் இருக்கும் தொழும் குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திவிடலாம். எனவே இப்படியான விசயங்களின் மூலம் குழந்தை, பார்த்து பின்பற்றும் வகையில் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி தொழுகையில் குழந்தைக்கு ஆர்வமூட்டலாம்.
4. தாய், தந்தை இருவரும் தொழுகையில் கவனம் இல்லாதிருத்தல். சிலநேரம் பெற்றோர் தொழுவார்கள், இன்னும் சிலநேரம் தொழமாட்டார்கள். இப்படியான பெற்றோர் இருப்பர். இப்படியான வீட்டில் குழந்தை தொழுகையில் கவனம் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. என்றாலும் தொழுகையுடன் எவ்விதத்திலும் தொடர்பே இல்லாத வீட்டினை விட இந்த வீடு பரவாயில்லை என்றே கூறலாம். எனவே இப்படியான நிலையின் போது குழந்தைகளது தொழுகை விடயத்தில் ஆர்வம் கொண்ட மூன்றாமொருவர் தான் தலையிட வேண்டிவரும். உதாரணமாக தாய் வழி உறவினர்கள் அல்லது தந்தை வழி உறவினர்கள் தலையிட்டு குழந்தையை தொழுகையுடன் தொடர்புபடுத்தலாம்.
5. தாய், தந்தை ஒரு போதும் தொழாதவர்களாக இருத்தல். இதுமிகவும் சிக்கலான நிலை. குழந்தை |பெற்றோர் தொழுவதைத் தனது கண்களால் காணவில்லை. எனவே தொழுகையில் அசிரத்தையாக இருப்பதுநியாயமானது. ஒரு தடவை குழந்தைகளுக்கான ஆற்றங்கரையோர பயிற்சிப்பாசறைக்கு நான் பொறுப்பாக இருந்தேன். தொழுகை நேரமானவுடன் சரி இப்போது ஜமாஅத்துடன் தொழுவோம் என்று கூறினேன். அப்போது பத்து வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை எனக்கு வுழுஃ எடுக்கத் தெரியாது என்றான். நான் சொல்லிக் கொடுத்தேன். அதன் பிறகு தொழத் தெரியாதுஎன்றான், அதையும் சொல்லிக் கொடுத்தேன். எல்லாம் முடிந்த பிறகு ‘எனக்கும் தொழஆசை இருந்தது, ஆனால் எனக்குயாரும் சொல்லித்தரவில்லை’ என்றான்;. தாமதித்துத் தான் அக்குழந்தையின் பெற்றோர் தொழாதவர்கள் என்பது எனக்குத் தெரியவந்தது. இப்போது அக்குழந்தை தொழும் மற்றக் குழந்தைகளுடன் நெருக்கமாக இருப்பதை கவனிக்கமுடிகிறது. இப்படியாக ஐந்து வகைகளையும் கூறிமுடித்தேன்.
அப்போதுஅந்த கேள்வியைக் கேட்டவர் : ‘அல்லாஹ்வின் அருளால் எனது வீடுமுதலாவது நிலையில் இருக்கிறது’என்றார். என்றாலும் தொழுகையில் குழந்தைகளை கவனமுள்ளவர்களாக ஆக்குவது கஷ்டமாகத் தான் இருக்கிறது என்றும் கூறினார்.
அதற்குநான் : ஆம், இந்தக் கஷ்டம் இயல்பானது. தொழுகையில் பேணுதலாக இருப்பது குழந்தைகளுக்குச் சிரமமாகத் தான் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் விளையாட்டில் கூடுதலான ஈடுபாட்டைக் காட்டுவார்கள். நாம் குழந்தையைத் தொழுகைக்குஅழைத்துச் செல்வதன் மூலம் அல்லது தொழச் சொல்வதன் மூலம் அதனது விளையாட்டு தடைபடுகின்றது. இதனால், தொழுகை நேரத்தின் போது குழந்தை முணுமுணுப்பதை நம்மால் உணர முடியும். அல்லதுதொழுகைகைத் தாமதப்படுத்த குழந்தை ஏதாவது காரணமொன்றைக் கூறுவதைக் காணலாம். அப்போதுகுழந்தைகளை மிக நளினமாக நாம் கையாளத் தெரிந்துக் கொள்ளவேண்டும். ‘நீங்கள் தொழுதால் நான் இன்னபரிசுபொருள் தருவேன்’ போன்ற நிபந்தனை வார்த்தைகளையோஅல்லது கண்டிப்பான வார்த்தைகளையோ நாம் பயன்படுத்துவதனைத் தவிர்ந்துகொள்ளவேண்டும். ஆனால், இதற்குப் பதிலாக தொழுது முடிந்த உடன் குழந்தையைப் பார்த்து ‘உண்மையில் தொழுகை மிகப் பெரும் ஆறுதலை நமக்கு அளிக்கிறது’ போன்ற வார்த்தைகளை சந்தர்ப்பத்தைப் பொறுத்துக் கூறுவது ஏற்றமானது என்று அவருக்குக் கூறிமுடித்தேன்.
Thanks: http://www.samooganeethi.org/index.php/category/social-justice/item/459-தொழுகையும்-குழந்தைகளும்
|