வாப்பாவின் முதுகில் ஏறி சவாரி செய்த அன்று நமக்குத் தெரியாது, வாழ்வின் பளு. காலங்கள் உருண்டோட, சிலபல கண்டிப்புகளால் நமக்கும் நம் வாப்பாவுக்குமான இடைவெளி அதிகரிக்கிறது. அந்த வயதுக்கு ஏற்ற பக்குவத்தில் நாம் சிந்தித்து, வாப்பாவிடம் நம் முழு கோபத்தையும் காண்பிப்போம். பதிலுக்குப் பதில் பேசி வாக்குவாதம் அதிகரித்து பேச்சுவார்த்தை நிற்கிறது.
சில நேரங்களில் வாப்பாக்களின் கண்டிப்புகளால் வேதனை அடையும் நாம், சற்று நம் வாழ்க்கையை பின்னோக்கி தள்ளிப் பார்த்தால் பல விஷயங்கள் புரியும். அப்படி ஒவ்வொருவரும் ரீவைண்ட் செய்து பார்க்க வேண்டிய முக்கிய தருணங்கள் பற்பல. வாப்பாவின் தோளில் அமர்ந்து சென்ற ஊர்வலம், அவர் முதுகில் செய்த சவாரி, சுண்டு விரல் பிடித்து ஆயிரம் ஆயிரம் கேள்விகளை வாய் ஓயாமல் கேட்டுக் கொண்டு நடை போட்ட தருணம், சைக்கிள் கற்கையில் பின்னால் ஓடிவந்த வாப்பாவின் முகம் எனப் பலதையும் சிந்தித்து பார்க்க இந்த அவசர வாழ்வில் நமக்கு நேரமில்லை.
காலச்சக்கரம் வேகமாக சுழல, படிப்பு, வேலை, சம்பாத்தியம் என ஓடிக் கொண்டிருக்கையில் வாப்பாவின் சிந்தனை சற்று தலைதூக்கும். 'இதுமாதிரிதானே வாப்பாவும் உழைச்சிருப்பாரு?' என நாம் முழுதாய் எண்ணுவதற்குள் நமக்கென ஒரு குடும்பம் இருக்கும். நம் குழந்தையை தொட்டு தூக்கும் அந்த நொடியில் புரியும், நம் வாப்பா எப்படி அளப்பரியா ஆனந்தம் கொண்டிருப்பார் என்று.
உலகில் எவ்வளவு மோசமான ஆணாக இருந்தாலும், ஒரு வாப்பாவாக மாறிய அந்த தருணத்தில் அவர் அனுபவித்த அந்த மகிழ்ச்சி உண்மைதான். நம்முடைய வரவு அவருக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். அதை நாம் உணரும் போது நாம் ஒரு தந்தையாக மாறி இருப்போம். நம் குழந்தையின் விரல் பிடித்து நடக்கும் போதும், தோளில் சுமக்கும் போதும், செல்லமாக விளையாடும் போதும் நம் வாப்பா நினைவு வந்து போகும். வாழ்க்கை வட்டம்தானே! நம் குழந்தை வளர்ந்து நம்மிடம் சண்டை போடும் போது புரியும், அன்று நாம் இதேபோல செய்கையில் வாப்பாவின் மனம் எவ்வளவு வலியை உணர்ந்து இருக்கும் என்று! பிறகுதான், வாப்பாவுடன் நேரம் செலவிட நினைப்போம். ஆனால், பலருக்கு அந்த இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதில்லை.
நம் வாழ்வில் இனிமையான குழந்தை தருணங்களை எண்ணினால், வாப்பா இன்றும் 'Hero'வாகவே தெரிவார். காரணம், அவர் என்றும் 'Hero'தான்! சூழ்நிலைகள், பணம், கௌரவம் எனப் பல காரணிகளால் நம் வாப்பாக்களால் 'அபியும் நானும்' அப்பா போல ஐடியல் வாப்பாவாக இருக்க முடிவதில்லை! ஆனால், எல்லா வாப்பாக்களுமே தங்கள் குழந்தையை அரசனாக, அரசியாக பார்க்கவே விரும்புவார்கள். நம் வாழ்வில் ஈடு இணையில்லாதவள் 'ம்மா'. ம்மாவின் பாசம், அன்பு அவளது சொற்களில் வெளிப்படும். ஆனால், ஓர் வாப்பாவின் அன்பும், அக்கறையும் அவரது கண்டிப்பில்தான் வெளிப்படும். நம் வாழ்வில் 'அம்மா'யைக் கண்டு தினந்தோறும் ரசித்து வரும் நாம், தன் வாழ்வு முழுவதும் எங்கெங்கோ உழைத்து நம் வாழ்க்கைப் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கும் 'முதல்வனை' காண மறக்கிறோமோ?!
-ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)