“பதினைந்து சென்ட் இடமும் ஏழு லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால் மாதம் ரெண்டரை லட்சம்வரை சம்பாதிக்கலாம்’’ என்கிறார் காளான் உற்பத்தியில் சாதித்திருக்கும் மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த ராஜ்குமார்.
எம்.காம்., பட்டதாரியான ராஜ்குமாரும் பி.பி.இ., படித்த ஸ்ரீ பிரியாவும் காதலித்துக் கரம்பிடித்தவர்கள். பொற்கொல்லரான ராஜ்குமார், பத்து வருடங்களுக்கு முன்பு நகைத் தொழில் நலிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கியபோது பெரிதும் பாதிக்கப்பட்டார். வீட்டிலிருந்த பொருட்களை விற்றுச் சாப்பிடும் அளவுக்கு, அவரது பொருளாதார நிலை சுருங்கியது. கடன் தொல்லை தந்த நெருக்கடியால் இருவரும் தற்கொலைக்கு முயற்சித்தார்கள். சரியான நேரத்தில் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதால் பிழைத்தார்கள்.
புத்துயிர் தந்தது
இந்தப் பின்னணியில் ‘நம்மாலும் வாழ முடியும்’ என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்தது பால் காளான் வளர்ப்பு. “அந்தச் சம்பவத்துக்குப் பிறகு வாழ்ந்து காட்டணுங்கிற வெறி எங்களுக்குள்ள ஏற்பட்டுச்சு. நண்பர்கள் ஆறு பேரைச் சேர்த்துக்கிட்டு கொடி முருங்கையை விலைக்கு வாங்கி, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பிச்சேன். வீட்டுச் செலவு போக, கூடுதலா கொஞ்சம் வருமானம் கிடைச்சுது. அதை மூலதனமா வைச்சு, அடுத்து என்ன பண்ணலாம்னு நாங்க யோசிச்சப்ப காளான் உற்பத்தியைப் பத்தி கேள்விப்பட்டேன்.
பட்டன் காளான், சிப்பிக் காளான், பால் காளான் என மூணு காளான் வகைகள் சந்தையில் இருக்கு. பால் காளான் பத்து நாள் வரைக்கும் கெட்டுப் போகாது. மத்த ரெண்டுக்கும் ஆயுசு ஒருநாள்தான்.
தமிழ்நாட்டோட தட்பவெட்ப நிலைக்கு ஏற்றதாக இருக்கிறது மட்டுமில்லாம, உற்பத்தி செலவும் பால் காளானுக்குக் குறைவு. அதனால, பால் காளான் உற்பத்தியைக் கத்துக்கிட்டோம். இது தொடர்பான பயிற்சி வகுப்புகள்ல ரெண்டு பேருமே கலந்துக்கிட்டோம். பால் காளான் வளர்க்க ஆரம்பிச்சபோது, நஷ்டம்தான் கிடைச்சது.
இருந்தாலும் மனம் தளராம எங்களுடைய அனுபவங்களையே பாடமாக்கி உழைக்க ஆரம்பிச்சோம். உழைப்பு வீண் போகல. பயிற்சியின்போது பதினொன்றுக்கு முப்பத்து மூன்று அடி ஷெட்டுல 10 கிலோ காளான் உற்பத்தி பண்ணலாம்னு சொல்லிக் குடுத்தாங்க. ஆனா, நாங்க அதே ஷெட்டில் 30 கிலோ காளான் உற்பத்தி பண்ற அளவுக்கு நுணுக்கத்தைக் கத்துக்கிட்டோம்’’ முகம் பிரகாசிக்கச் சொல்கிறார் ராஜ்குமார்.
எப்படி வளர்ப்பது?
பால் காளான் விதைத்த 35-வது நாளிலிருந்து மகசூல் கொடுக்கும். ஒரு விதைப்புக்கு மூன்று முறை அறுவடை எடுக்கலாம். விதைத்த அறுபதாவது நாளில் மொத்த அறுவடையும் எடுத்துவிட்டு, அடுத்த விதைப்புக்குத் தயாராக வேண்டும். 350 கிராம் எடை கொண்ட பால் காளான் பாக்கெட் விதை 40 ரூபாய்.
ஒரு கிலோ பால் காளான் 150 ரூபாய். 50 கிலோ பால் காளான் உற்பத்தி செய்வதற்கு 500 லிட்டர் தண்ணீரும், 60 யூனிட் மின்சாரமும் தேவை. வேலை ஆட்களும் அதிகம் தேவையில்லை. இவர்களுடைய பண்ணையில் நிறுவிய 3 பேர் தவிர, வேலைக்குத் தனியாக மூன்று பேர் இருக்கிறார்கள்.
’’கடினமான வேலை இல்லைன்னாலும், இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தையைப் போல் காளானை ரொம்ப கவனமா வளர்க்கணும். காளான் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட வைக்கோலுடன் வெல்லம் சேர்த்துக் கால்நடைகளுக்குக் கொடுத்தால் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம். காளான்களுக்குச் சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறதால, இன்னும் பத்து வருஷத்துக்கு இந்தத் தொழிலில் போட்டியே இருக்காது.
நிச்சய வருமானம்
நாங்கள் உருவாக்கிக் கொடுத்த காளான் பண்ணைகளை வைத்து, மாநிலம் முழுக்க 40 குடும்பங்கள் பிழைத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகச் சென்னை ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் காளான் வளர்ப்பில் அதிக ஆர்வமாய் இருக்கிறார்கள்.
காலத்துக்கேற்ப நவீன உத்திகளையும் கையாண்டு வருவதால், உற்பத்தி செலவு இன்னும் குறையும். இப்போது மாசம் 2000 கிலோவரை பால் காளான் உற்பத்தி செய்கிறோம். இதுல ரூ. 3 லட்சம் வருமானம் கிடைக்கும். எல்லாச் செலவுகளும் போக, எங்களுக்கு மாசம் ரூ. 2 1/2 லட்சம் கையில தங்கும்.
15 சென்ட் இடமும் ஏழு லட்ச ரூபாயும் இருந்தால் இதே வருமானத்தைப் பெறமுடியும். அது மாத்திரமில்லாமல், ஆறே மாதத்தில் போட்ட முதலீட்டை எடுத்துடலாம்’’ உத்தரவாதமாகச் சொல்கிறார் ராஜ்குமாரின் மனைவி ஸ்ரீ பிரியா.
ராஜ்குமார் தொடர்புக்கு: 99524 93556
Thanks: http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-2-12-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article7116386.ece
|