கி.பி 760ம் ஆண்டு காலத்தில் முஹத்திஸ் இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்கள் கஃபதுல்லாஹ்விற்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த போது ஓரு கனவு காண்கிறார். கனவில் உரையாடல் .இடம்பெறுகிறது. ஹஜ்ஜிக்கு இந்த வருடம் ஆறு லட்சம் பேர் வருகை வந்தார்கள் ஆனால் சிரியாவின் தலைநகரில் வசிக்கும் அலி அல் முஃபிக் என்ற செருப்புத்தைக்கும் தொழிலாளியை தவிர அல்லாஹ்தஆலா எவரது ஹஜ்ஜையும் இவ்வருடம் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் அலிக்கு அல்லாஹ்தஆலா ஹஜ் செய்யாமலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு உரிய கூலியை வழங்கினான் என்ற குரல் கேட்டதும் இமாம் அப்துல்லாஹ் பின் முபாரக் திடுக்கிட்டு எழுந்தார்கள்.
டமஸ்கஸ் சென்று அலியை சந்திப்பதாக இமாம் அவர்கள் முடிவுசெய்தார்கள். 6 மாத பயணத்தின் பின்னர் அவர்கள் டமஸ்கஸ் சென்றடைந்தார் தலைநகரில் இருந்த கடையொன்றுக்குச் சென்று அலி அல்முஃபிக்கின் வீடு எது என கேட்டார்கள் இடம் காட்டப்பட்டது. அலி ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. நேர்மையான மனிதராக தென்பட்டார்.
சிறிது நேரம் உரையாடியதன் பின்னர் இமாம் அவர்கள் அலியை நோக்கி “நீங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற நிய்யத் வைத்திருந்தீர்களா? ஆமாம் 13 வருடங்களாக நான் அதற்கான பணத்தை சேகரித்து வந்தேன் இம்முறை மொத்த பணத்தையும் சேகரித்துவிட்டேன் ஆனால்……. சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்ட நிலையில் என்னால் ஹஜ் கடமையை இம்முறையும் பூர்த்திசெய்ய முடியவில்லை என்றார் அலி.
இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்கள் அலியிடம் ஹஜ் செய்யாமைக்கான காரணத்தை வற்புறுத்திக்கேட்டார்கள்;. ஆலி பதில்சொல்ல ஆரம்பித்தார். “நான் நாள் கூலிக்காக செருப்புத் தைத்துவருகிறேன். ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஏனவே 13 வருடங்களாக சேமித்ததன் மூலம் எனது கையிருப்பில் மூவாரயிரம் தினார்கள் இருந்தன. இவை ஹஜ் செய்ய போதுமானவை. ஹஜ் பயணத்திற்கான நாளும் நெருங்கியது. எனது மனைவியோ கர்பிணியாக இருந்தார். எனது அயலவர்கள் மிக வறியவர்கள். அன்று இரவு பக்கத்து வீட்டில் இருந்து வீசிய இறைச்சிக் கறியின் வாசனை எனது மனைவிக்கு இறைச்சிசாப்பிடும் ஆர்வத்தை தூண்டியது அவளோ கர்ப்பிணி எவ்வாறு அளவது கோரிக்கையை நான் தட்ட முடியும. பக்கத்துவீட்டுக் சென்றேன். என்னை அவர்கள் வரவேற்று உட்கார வைத்தார்கள்.
“ உங்கள் வீட்டில் சமைக்கப்பட்டுள்ள இறைச்சியை எனது மனைவி சாப்பிட விரும்புகிறாள்” என்றேன். பக்கத்துவீட்டுகாரன் என்னை பார்த்து இந்த இறைச்சிக்கறி “ எங்களுக்கு ஹலால், உங்களுக்கு ஹராம்” என்றான் எனக்குப் புரியவில்லை. அவன் சொன்னான் நானும் எனது பிள்ளைகளும், மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. எனது பிள்ளைகள் பசியினால் படும்கஷ்டத்தை என்னால்பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே உணவுதேடி வெளியில் சென்ற போது செத்த கழுதையொன்று என் கண்களுக்குத் தெரிந்தது. நான் அதனை எனது மனைவியிடம் எடுத்துச்சென்று சமைக்குமாறு கொடுத்தேன். அந்தக் கறியைதான் நீங்கள் கேட்கிறீர்கள். சாப்பிடுவதற்கு ஏதுவுமே இல்லாமையினால் தான் அது எங்களுக்கு ஹலால் என்றும் உங்களுககு ஹராம் என்றும் கூறினேன் என்று பக்கத்துவீட்டுக்காரன் கூறியதும் என்னை அறியாமலேயே என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.
உடனே 13 வருடங்களாக ஹஜ் செய்வதற்கு நான் சேகரித்த பணத்தை பக்துவீட்டுக்காரனிடம் கொடுத்தேன். இந்த சந்தர்ப்பத்தில் ஹஜ் செய்வதை விட அயல்வீட்டானின் தேவையை நிறைவேற்றுவது அவசியம் என்று நான் நினைத்தேன் என்று தனது கதையை கூறிமுடித்தார் அலி அல் முஃபிக். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களுக்கு அப்போது தான் தெரியவந்தது “ஏன் அல்லாஹ்தஆலா அலி அல் முஃபிக் என்பவருக்கு ஹஜ்செய்யாமலேயே அதற்கான கூலியை வழங்கினான் என்பதை. |