நொண்டி, ஏழு கல் (எறி பந்து), பச்சை குதிரை, மேடு பள்ளம், கில்லி, தாயம், பரமப்பதம், தட்டாங்கல், ராஜா ராணி, பம்பரம், பட்டம் என நாம் மறந்து போன, மறைந்து போன குழந்தைப் பருவ விளையாட்டுகள் ஏராளம். ஆட்டோகிராப் சேரன் பாணியில் மனம் எங்கோ தொலைந்து போன பாதையை நோக்கி லயித்து போக ஆரம்பிக்கிறது. எந்த ப்ளே லிஸ்ட்டிலும் இல்லாமல் “ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. ” பாடல் தானாய் மனதினுள் ரீங்காரம் அடிக்க தொடங்குகிறது.
இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் ஆன்ட்ராய்டு யுகம் நமது நாட்களை களவாடிக் கொண்டது. கூகிள் ப்ளே ஸ்டோரில் தொடுதிரையை கீறியவாறு விளையாடிக் கொண்டிருகிறோம் தன்னந்தனியாக. ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விளையாட்டு என சீர்படுத்தி, அதில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று வகைப்படுத்தி நம்மவர்கள் இதிலும் புத்திசாலித்தனத்தை ஆழமாக பதித்தவர்கள்.
கடைசியாக இந்த விளையாட்டை எல்லாம் விளையாடி மகிழ்ந்தவர்கள் 1990-களில் பிறந்தவர்களாக தான் இருக்க முடியும். 21 ஆம் நூற்றாண்டு நாளுக்கு நாள் மாற்றத்தை பரிசளித்து, நமது நினைவுகளை பேரழிவுக்குள்ளாக்குகிறது. மாற்றம் மட்டுமே மாறாதது என்ற போதிலும். இந்த அதிவேக மாற்றங்கள் கொஞ்சம் ஏமாற்றமும் அளிக்கின்றன…
நொண்டி ஒன்று முதல் ஐந்து வரை கட்டம் வரைந்து வரிசையாக எண் குறிக்கப்பட்டு. சில்லு கல்லை முறையே ஒவ்வொரு கட்டத்தினுள் சரியாக விழும் படி செய்து நொண்டி நொண்டி தாண்டி செல்லும் விளையாட்டு. பெரும்பாலும் பெண்கள் விளையாடும் விளையாட்டாகவே இது இருந்தது.
ஏழு கல் (எறி பந்து) இரண்டு அணிகளாக பிரிந்து, ஐந்து அல்லது ஏழு தட்டையான கற்கள் எடுத்து அடுக்கி ஒரு பந்தை வைத்து அந்த அடுக்கை தகர்க்க வேண்டும். ஒரு அணி அதை மீண்டும் அடுக்கவும், ஒரு அணி அதை தடுப்பதுமே இந்த வீர விளையாட்டு. எத்தனை முறை பந்தில் அடிவாங்கி முதுகு, தொடை பழுத்திருக்கும் என இந்த விளையாட்டை விளையாடியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
பச்சை குதிரை அவுட் ஆன ஒருவரை குனியவைத்து மற்றவர்கள் அவரது முதுகில் கையை வைத்து தாண்ட வேண்டும். இதில் பல நிலைகள் இருக்கின்றன. சரியாக தாண்டாவிட்டாலும், தவறு செய்தாலும், அவர் அவுட்டாகி விடுவார்.
கில்லி கிரிக்கெட் பாட்டன் கில்லி. ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த போது. களவாடி சென்றி கண்டுப்பிடித்த விளையாட்டு. கிரிக்கெட்டை விட கடினமான விளையாட்டு. குறி தப்பக் கூடாது, கூர்மையான பார்வை வேண்டும் இதில் வெற்றி பெற.
தாயம் சூது விளையாட்டின் தாய் என்று தான் கூற வேண்டும். ஆனால், கோடை விடுமுறையின் சிறந்த விளையாட்டும் கூட. பொழுது போவதே தெரியாது, மாலைக்கு மேல் இந்த விளையாட்டை விளையாட கூடாது என தடை விதிப்பும் இருக்கிறது.
பரமப்பதம் ஆங்கிலேயர்கள் திருடி சென்ற மற்றுமொரு விளையாட்டு. “ஸ்னேக் அண்ட் தி லேடர்” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த விளையாட்டை எவ்வளவு பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். பாம்புகளிடம் கடி வாங்காமல் எல்லை கோட்டை அடைவதே வெற்றி.
தட்டாங்கல்
ஒரே அளவிலான சிறிய உருண்டை வடிவிலான கூழாங்கற்களைக் கொண்டு சிறுமிகள் ஆடும் விளையாட்டு இது. 'பாண்டிக்கல்' என்றும் இதை அழைப்பார்கள். சங்க காலத்தில் இதன் பெயர் தெற்றி.
ஏழு கற்களைக் கொண்டு ஆடப்படும் இந்த ஆட்டத்தில் ஒண்ணான், இரண்டான், மூன்றான், நான்கான், ஐந்தான், ஆறான் , ஏழான், எட்டான், ஒன்பதான் மற்றும் பத்தான் என பத்துப் பிரிவுகள் விளையாட வேண்டும். ஒவ்வொன்றுக்கும் எடுக்க வேண்டிய கற்களின் எண்ணிக்கைக்கும், எடுக்கவேண்டிய விதத்துக்கும் விதிமுறைகள் உண்டு.
முதலில் ஆரம்பிக்கும்போது ஏழு கற்களையும் கீழே போட்டுவிட்டு, அதில் ஒரு கல்லை 'தாய்ச்சிக் கல்' என்று கையில் எடுத்துக்கொள்வார்கள். இந்தக் கல்லினை மேலே வீசியெறிந்துவிட்டு, அது கீழே கைக்கு வந்து சேருவதற்குமுன், கீழே கிடக்கும் கற்களை அலுங்காமல் (ஒன்றை எடுக்கும்போது அடுத்தக் கல்லைத் தொட்டுவிடக் கூடாது) கையில் எடுத்துக்கொண்டு, மேலிருந்து விழும் தாய்ச்சிக் கல்லைப் பிடிக்க வேண்டும். இப்படி எல்லா கற்களையும் எடுத்ததும் முதல் ஆட்டம் முடிவுபெறும். இதுபோன்று 10 பிரிவுகள் ஆடவேண்டும். காய்களின் எண்ணிக்கை வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு விதமாக மாறுபடும். ஆட்டத்தில் சுவாரஸ்யம் சேர்க்கும்விதம் பாடிக்கொண்டே விளையாடுவதும் உண்டு!
ராஜா ராணி சீட்டில் ராஜா, ராணி, மந்திரி, போலீஸ், திருடன் என தனி தனியே எழுதி போட்டு. ஆளுக்கொரு சீட்டு எடுக்க வேண்டும். பின் ராஜாவிலிருந்து திருடன் வரை முறையே வரிசையாக கண்டுபிக்க வேண்டும். (இந்த விளையாட்டை வகுப்பறையில் விளையாடி ஆசிரியரிடம் பிடிப்பட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா???)
பம்பரம் பம்பரம் விளையாட்டை சின்ன கவுண்டர் படம் நினைவு இருக்கும் வரை மறந்து விட முடியாது. இதற்காகவே கேப்டன் அவர்களுக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும். சிறு வயதில் பெண்களை கவர்ந்திழுக்க கையில் எல்லாம் எடுத்து சுற்ற விட்டு சீன் போட்ட நினைவுகளை இன்றளவும் மறக்க முடியாது.
பட்டம் இன்றெல்லாம் நொடிக்கு நொடி வானில் விமானம் பார்க்க முடிகிறது ஆனால், ஒரு பட்டம் கூட பார்க்க முடிவதில்லை. அன்றெல்லாம், வான மேகங்களை மறைத்து வானவில் கோலமிட்டுக் கொண்டிருக்கும் பட்டங்கள். சில விஷயங்கள் மாறாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என நெஞ்சம் ஏங்குகிறது.
கோலி குண்டு இந்த விளையாட்டில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நிலத்தில் குறி வைத்து அடித்து குழியில் விழ செய்யும் விளையாட்டு. இதை தான் குச்சி வைத்து அடித்து பில்லியர்ட்ஸ் என்று பணக்காரர்கள் விளையாடிக் கொண்டு இருகிறார்கள். மற்றொரு கோலி குண்டு விளையாட்டு, வட்டமான குழிகள் உள்ள தட்டில், கோலி குண்டுகள் நிரப்பி, குறுக்க நெடுக்க குண்டுகள் மேலும் கீழுமாய் மாற்றி எடுத்து கடைசியாக ஒரே ஒரு குண்டு மட்டும் மிஞ்சும் படி விளையாடுவது. இதற்கு கொஞ்சம் மூளை அதிகம் வேண்டும்.
Thanks: http://tamilseithy.net/31790
http://www.vikatan.com/news/sports/64735-aadu-puli-aattamsave-our-traditional-games.art
|