அன்புகூர்ந்து அமைதியாக, பொறுமையாக, நிதானமாக, படியுங்கள்.
எல்லா இயக்கங்களுமே, நம் சமுதாயத்துக்கு, அவர்களால் இயன்ற அளவு, அவரவர் பாணியில் சேவை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
கருத்து வேறுபாடுகள் இருப்பதால்தானே தனித்தனியாக செயல்படுகிறார்கள்!
உறுப்பினர்கள் வேண்டுமானால், சில இயக்கங்களில் குறைவாகவும், மற்ற சில இயக்கங்களில் அதிகமாகவும் இருக்கலாம்.
ஆனால், குறிக்கோள் என்னவோ ஒன்றுதான்.
தவ்ஹீத் பேசுவோர் எப்படி அவர்களின் கொள்கையில் பிடிப்பாக, உறுதியாக இருக்கிறார்களோ,
அதுபோலவேதான் சுன்னத் ஜமாத்தினரும், அவர்களின் கொள்கையில் பிடிப்பாக, உறுதியாக இருக்கிறார்கள்.
இதில், தப்லீக் ஜமாத், தவ்ஹீத் ஜமாத், சுன்னத் ஜமாத், என ஏன் ஒருவரை மற்றவர் குறை கான்கின்றோம்?
இதில் யாரும் உயர்ந்தவர், யாரும் தாழ்ந்தவர் இல்லை.
சுவர்க்கம் புகுவோர் யார் என்ற முடிவு நம்மை படைத்த ரப்பிடமே உள்ளது.
ஒரு இயக்கத்தின் தலைவராவது, அவ்வளவு சுலபமானது ஒன்றும் அல்ல,
அவர்களை நாம் விமர்சிப்பது, நம் சகோதரரின் மாமிசத்தை நாம் உண்பது போன்றது.
ஆனால், சகோதரர்களே! நீங்களே பார்க்கின்றீர்கள்.
இங்கு ஒவ்வொரு தலைவர்களையும், எப்படியெப்படியெல்லாம் விமர்சிக்கின்றார்களென்று.
இது நாம் செய்யும் சிறு அமல்களையும் வீணாக்கிவிடுகிறது.
உதாரணத்துக்கு:
ஒரு முறை இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்ட ஒரு மார்க்க பிரச்சினை தொடர்பாக தம் மாணவர்களுக்கு பாடம் கற்பித்த போது:
அக் கருத்தில் அவரது மாணவரான யூனுஸ் இப்னு அப்துல் ஆலா அவர்கள் உடன்படவில்லை.
இதனால், உடனே கோபத்துடன் யூனுஸ், அந்த சபையில் இருந்து எழுந்து வீடு சென்று விட்டார்!
அன்று இரவு இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் யூனுஸ் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்கள்!
யார் என்று யூனுஸ் கேட்க:
ஷாபி (ரஹ்) என்று சொல்லாமல், இயற்பெயரான, முஹம்மது இப்னு இத்ரீஸ் என்று பதில் சொல்லப்படுகிறது.
இமாம் ஷாபி (ரஹ்) அவர்களை தவிர, தனக்கு அந்த பெயரில் தெரிந்த, வேறு யாருமே இல்லையே, என அனைத்து நபர்களையும் நினைவு கூர்ந்து கொண்டு, கதவை திறந்தபோது இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் அங்கு நிற்பதை கண்டு யூனுஸ் வியப்புற்றார்.
அப்போது இமாம் ஷாபி (ரஹ்) பின்வருமாறு பேச தொடங்கினார்கள்.
யூனுஸே! நாம் நூறு பிரச்சினைகளில் ஒன்றுபட்ட போதிலும்,
ஒரே ஒரு பிரச்சினையில் பிளவுபட்டுக் கொள்வதா?
எல்லா கருத்து வேற்றுமைகளிலும், வெற்றியை நாடாதீர்கள்.
சில சந்தர்பங்களில், குறித்த தருணத்தை வெற்றி கொள்வதை விட,
உள்ளங்களை வெற்றி கொள்வதே முக்கியமாகும்.
நீங்கள் கடந்து வருவதற்காக கட்டிய பாலத்தை அழிக்க வேண்டாம்.
ஒரு நாள் அது மறுபடியும் நீங்கள் திரும்பிச் செல்வதற்கு தேவைப் படலாம்!
எப்போதும் தவறான ஒன்றை அறவே வெறுத்து ஒதுக்கி விடுங்கள்.
மாறாக தவறு செய்த மனிதரை அல்ல !
எல்லா பாவங்களையும் முழுமையாக வெறுத்திடுங்கள்.
மாறாக பாவம் செய்த மனிதரை அல்ல !
அதை செய்தவர் மீது கருணையையும், மன்னிப்பையும் அதிகம் காட்டுங்கள்.
ஒருவருடைய பேச்சை விமர்சியுங்கள்.
மாறாக பேசிய மனிதரை அல்ல !
பேசியவருக்கு மதிப்பளியுங்கள்.
எமது வேலையே நோயை அழிப்பதேயன்றி,
நோயாளியை அல்ல!
என்று யூனுஸிடம் கூறினார்கள்.
மாஷாஅல்லாஹ்
இந்த அழகான செய்தியை நம்மில் பலர் கடைபிடிக்காததே, விரோதங்கள், குரோதங்கள், வளர மூலமுழுக் காரணம்.
பிரச்சனைகளுக்கு மத்தியில் நாம் சுழன்று கொண்டு இருக்கிறோம்.
அதை தூர வீசிவிட்டு,
அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து, பாரத்தை அவனிடமே ஒப்படைத்துவிட்டு, நிம்மதியாக தொழுது, துஆ செய்வோம். சகோதரத்துவம் பேனுவோம்.
சந்தோஷம் தானே வரும். |