பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 19: பறக்கும் தட்டுக்குரியோர் யார்
Episode 20: ஜின்கள்
இதுவரை முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும், ஆதாரங்களையும் மட்டும் வைத்துக்கொண்டு, பூமியில் மட்டும் தான் ஜின்கள் வாழ்கின்றனர் என்று அவசரப்பட்டு யாரும் முடிவெடுத்து விடவும் கூடாது. பூமி அல்லாத, நமது அறிவுக்கு இதுவரை எட்டாத, இந்தப் பிரபஞ்சத்தின் பரந்து விரிந்த பல்வேறு பகுதிகளிலும் கூட ஜின் இனத்தைச் சேர்ந்த பல்வேறு தனித்துவமான இனத்தவர்கள் சஞ்சரித்துக் கொண்டும், வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்பதே மார்க்கத்தின் நிலைபாடு. இதைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்:
ஆதாரம் 1: வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவ்விரண்டிலும் ஜீவராசிகளைப் பரவச் செய்திருப்பதும், அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும்போது அவர்களை ஒன்று சேர்க்க ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:29)
இந்த வசனத்தின் மூலம் இரண்டு உண்மைகள் தெளிவாகின்றன:
முதலாவது உண்மை: பூமியில் மட்டுமல்ல; இந்தப் பிரபஞ்சத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாகப் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் எனும் உண்மை. மனித இனம் அல்லாத வேறெந்த ஜீவராசியாக இருந்தாலும், அது பகுத்தறிவு வழங்கப்பட்டதாக இருந்தால், அதை ஜின் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் எனும் மார்க்கத்தின் நிலைபாட்டுக்கு அமைய, இந்தக் கருத்தின் மூலம், இந்தப் பிரபஞ்சத்தில் பல்வேறு வகையான ஜின் இனத்தவர்கள் பரவலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை புலப்படுகிறது.
இரண்டாவது உண்மை: “அவன் விரும்பும்போது அவர்களை ஒன்று சேர்க்க ஆற்றலுடையவன்” எனும் வாசகத்தின் அர்த்தத்தை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு விதத்தில் அர்த்தம் கொள்ளும் போது, யுகமுடிவு நாளின் பின்னர் நடக்கவிருக்கும் விசாரணை நாளில் அனைவரையும் ஒன்று திரட்டுவதையே இந்த வாசகம் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொண்டால், பகுத்தறிவு வழங்கப் பட்டவர்களுக்கே மறுமை நாளில் விசாரணைகள் நடைபெறும் எனும் அடிப்படையை வைத்து, பகுத்தறிவு வழங்கப்பட்ட ஜின் இனத்தைச் சேர்ந்த பல்வேறு விதமான இனங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் எல்லாத் திக்குகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற அர்த்தம் வெளிப்படுகிறது.
இன்னொரு விதத்தில் இதை அர்த்தம் கொள்ளும் போது, இந்தப் பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளில், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளாதவாறு பல்வேறு இனத்தவர்கள் ஏற்கனவே பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், அல்லாஹ் விரும்பும் போது இவ்வாறான வேறுபட்ட இனத்தவர்கள் இந்த உலகத்திலேயே ஒருவரையொருவர் நேரடியாக சந்தித்துக் கொள்ளவும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவான் என்ற அர்த்தமும் வெளிப்படுகிறது.
இந்த அர்த்தத்தில் இந்த வாசகத்தைப் புரிந்து கொள்ளும் போது, நமது முப்பரிமான உலகுக்குள் அடிக்கடி பறக்கும் தட்டுக்களில் வந்து போகும் ஜின்கள் மனிதர்களைச் சந்திப்பது, இரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது போன்ற இன்றைய உலகின் அமானுஷ்யமான நிகழ்வுகளைக் கூட, அன்றே குர்ஆன் எதிர்வு கூறியிருக்கிறது என்ற கருத்திலும் இதை நோக்கலாம்.
மேலும், பூமியில் மட்டுமல்லாது, பிரபஞ்சத்தின் எல்லை வரை ஜின்கள் சஞ்சரித்துக் கொண்டும், வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்பதைப் பின்வரும் ஆதாரங்கள் இன்னும் உறுதிப்படுத்துகின்றன:
ஆதாரம் 2: "நிச்சயமாக நாம் வானத்தைத் தீண்டிப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம். "செவிமடுப்பதற்காக (வானவர்கள் பேசிக் கொள்வதை ஒட்டுக் கேட்பதற்காக) (அங்கு பல) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போராக இருந்தோம். ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான். (அல்குர்ஆன் 72 : 8,9)
இந்த வசனங்களின் மூலம், வின்னுலகில் வானவர்கள் பேசிக் கொள்வதை ஒட்டுக் கேட்கும் அளவுக்கு, பிரபஞ்சத்தின் எல்லையைகளையும் தாண்டி, முதலாவது வானம் வரை பரவிக் காணப்படக் கூடியவர்களாகவே ஜின் இனத்தவர்கள் இருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகிறது.
இதை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக பின்வரும் ஹதீஸ் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: வின்னுலகில் அல்லாஹ் ஒரு விடயத்தைக் கட்டளையிடும் போது, அந்தக் கட்டளைக்குக் கட்டுப்பட்ட வானவர்கள், இரும்புச் சங்கிலியால் பாறையின் மீது அடிப்பதைப் போன்ற சத்தத்துடன் தமது சிறகுகளை அடித்துக் கொள்கிறார்கள்.
தமது அச்ச உணர்வு (அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கேட்டதன் விளைவாக தமக்குள் ஏற்பட்ட நடுக்கம்) விலகிய பிறகு அவர்கள், “உமது இறைவன் உம்மிடம் கூறியது என்ன?” என்று தமக்குள் கேட்டுக் கொள்வார்கள். அதற்கு அவ்வானவர்கள் “உண்மையை மட்டுமே இறைவன் கூறினான். அவனே மிகப் பெரியவன்” என்று பதிலளிப்பார்கள்.
இந்தச் சம்பாஷனையை, ஒட்டுக்கேட்போர் (ஜின்கள்), ஒருவருக்கு மேல் ஒருவராக நின்றவாறு ஒட்டுக் கேட்கிறார்கள். இவ்வாறு ஒட்டுக் கேட்கும் செய்திகளை, மேலே இருக்கும் ஜின்கள், கீழே இருப்பவர்களுக்கு உடனே எத்தி வைத்து விடுவார்கள். இதன் போது, அவர்களை நோக்கி எறியப்படும் எரிநட்சத்திரங்கள், மேலிருப்பவர், கீழிருப்பவருக்கு செய்தியை எத்தி வைக்க முன்னரோ, அல்லது கீழிருப்போர் ஜோதிடனின் காதுகளில் செய்தியை எத்தி வைக்க முன்னரோ தாக்கும்; அல்லது செய்தியை எத்தி வைத்த பின்னர் தாக்கும். பிறகு, இந்தச் செய்தியோடு ஜோதிடன் நூறு பொய்களைத் தனது தரப்பில் கலந்து விடுகிறான். வின்னிலிருந்து எத்திவைக்கப்பட்ட செய்தி மட்டுமே அதில் உண்மையாக இருக்கும். நூல்: ஸுனன் இப்னு மாஜா - பாகம் 1, ஹதீஸ் 199 தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்)
ஆகவே, மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், பறக்கும் தட்டுக்களில் வரக்கூடிய ஜீவராசிகள் உட்பட, மனிதன் வாழ முடியாத பிரபஞ்சத்தின் பல பகுதிகளில் பரவி வாழக் கூடிய ஜீவராசிகள் அனைத்தும் ஜின்கள் எனும் இனத்தைச் சார்ந்தவை தாம் எனும் நமது வாதத்தின் முதலாவது நியாயம் மீண்டும் இங்கு நிரூபணமாகிறது.
இனி இந்த வாதத்தை ஊர்ஜிதப்படுத்தும் இன்னொரு நியாயத்தையும் பார்க்கலாம்.
நியாயம் 2: இஸ்லாத்தின் பார்வையில், ஜின் இனம் என்பது மனித இனத்தைப் போன்ற தனித்துவமான ஓரு தனி இனமல்ல. மாறாக, மனித இனத்தைப் போன்ற தனித்துவமான பல இனங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பைத் தான் ஜின்கள் எனும் பதம் உணர்த்துகிறது. இதை பின்வரும் ஆதாரங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஆதாரம் 1: மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடம் கட்டுவோரையும், முத்துக்குளிப்போரையும்; மற்றும் சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்). (38 : 37-38)
ஆதாரம் 2: அவை (ஜின்கள்), ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்). (34:13)
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கு வியாக்கியானம் கூறும் இமாம் இப்னு கதிர், தனது தஃப்ஸீரில் பின்வருமாறு கூறுகிறார்:
ஸுலைமான் (அலை) அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்ட ஜின்களுள் சில இனத்தவர்கள் உயரமான அறைகளையும், சிற்பங்களையும், நீர்த்தேக்கங்களுக்கு ஒப்பான பிரும்மாண்டமான பாத்திரங்களையும், நகர்த்த முடியாத கொப்பரைகளையும் அவருக்காக செய்து கொடுப்போராகவும், மற்றும், மனிதர்களால் சாதிக்க முடியாத பல கட்டுமானப் பணிகளைச் செய்வோராகவும் இருந்தனர். மேலும், சமுத்திரத்துக்கு அடியில் மூழ்கிச் சென்று, உலகில் வேறெங்கும் கிடைக்காத அரிதான முத்துக்களையும், பவளங்களையும், மற்றும் விலைமதிக்க முடியாத பொருட்களையும் கொண்டு வந்து ஸுலைமான் (அலை) அவர்களிடம் ஒப்படைக்கக் கூடிய ஜின்களின் இன்னோர் இனத்தவரும் இருந்தார்கள்.
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களில், தனித்துவமான தன்மைகளைக் கொண்ட மூன்று வேறுபட்ட ஜின் இனத்தவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான். “கட்டடம் கட்டுவோர்” என்பதன் மூலம், மனிதர்களால் சாதிக்க முடியாத பல அபாரமான கட்டடக்கலைத் தொழினுட்பங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு வகையான ஜின் இனத்தவர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை தான் இங்கு உணர்த்தப் படுகிறது. அதே நேரம், “முத்துக்குளிப்போர்” எனும் வாசகத்தை வைத்து, இவர்கள் முதலில் குறிப்பிடப்பட்ட இனத்தைப் போன்றவர்கள் அல்லர் என்பது தெளிவாகத் தெரிகிறது. தண்ணீருக்கு அடியில் மீன்களைப் போல் சகஜமாக சஞ்சரிக்கக் கூடிய ஆற்றல் மிக்க வேறோர் இனத்தைச் சேர்ந்த ஜின்களாகவே இவர்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று இனத்தவர்களிலும், ஒரு வகையான இனத்தவருக்கு இருக்கும் திறமைகளும், ஆற்றல்களும் தனித்துவமான பன்புகளும் மற்ற வகையைச் சார்ந்தவர்களிடம் இருப்பதில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும், “சங்கிலியால் விலங்கிடப்பட்ட வேறு பலரையும்” எனும் வாசகத்திலிருந்து, ஜின்களைக் கட்டுப்படுத்துவது குறித்த அனைத்து ஆற்றல்களும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஸுலைமான் (அலை) அவர்களால் கூட கட்டுப்படுத்த முடியாத சில அடங்காப்பிடாறி இனத்தவர்களும் ஜின்களுக்குள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதும் இங்கு புலப்படுகிறது. இவ்வாறு பல்வேறு பட்ட இனத்தவர்கள் ஜின்களில் இருக்கிறார்கள் என்பதை இந்தத் தொடரின் பிந்திய பகுதியில் இன்னும் விரிவாக நோக்கவிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ். இப்போதைக்கு இவ்வளவோடு நிறுத்திக் கொள்ளலாம்.
ஆதாரம் 2: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஜின்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களுள், இறக்கைகளையுடைய ஒரு வகையினர் காற்றில் பறந்து செல்லக் கூடியவர்கள். இன்னொரு வகையினர் நாய்களும் பாம்புகளுமாக இருப்பார்கள். இன்னொரு வகையினர் தங்கிக் கொண்டும், பிரயாணம் செய்து கொண்டும் இருப்பார்கள். நூற்கள்: முஷ்கிலுல் அஸார் 2473 / தபராணி / ஹாக்கிம் / பைஹக்கி தரம்: ஸஹீஹ் (அல்பானி)
ஆதாரம் 3: அல்கமாஹ் தன்னிடம் கூறியதாக அஷ்ஷஅபி அறிவித்ததாவது: இப்னு மஸ்ஊதிடம், “ஜின்களின் இரவின் போது அல்லாஹ்வின் தூதருடன் உங்களில் எவரேனும் இருந்தீர்களா?” என்று நான் கேட்டேன். அவர் கூறினார் “எங்களில் யாரும் கூட இருக்கவில்லை. மக்காவில் இருந்த போது ஒரு நாள் இரவு திடீரென்று நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. “அல்லாஹ்வின் தூதரை யாராவது கொன்றிருக்கலாம்; அல்லது கடத்தப் பட்டிருக்கலாம்; அவர்களுக்கு என்ன நடந்திருக்கும்?” என்று நாம் பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய இரவை மிகவும் கெட்ட இரவாகவே நாம் விடியும் வரை கழித்தோம். அதிகாலைப் பொழுதையடைந்த போது ஹிரா குகையின் பக்கமிருந்து நபி (ஸல்) அவர்கள் வந்து கொண்டிருந்ததைக் கண்டோம். அல்லாஹ்வின் தூதரிடம் மக்கள் இரவுப் பொழுதைக் கழித்த விதம் பற்றிக் கூறலானார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஜின் இனத்தைச் சேர்ந்த ஒரு குழு சார்பாக ஒருவர் வந்து என்னை அழைத்தார். ஆகவே நான் அவர்களிடம் சென்று, குர்ஆனை ஓதிக் காட்டி விட்டு வந்தேன்” என்று கூறினார்கள். இப்னு மஸ்ஊத் தொடர்ந்து கூறினார், “ஜின்கள் விட்டுச் சென்ற தடயங்களையும், அவர்கள் தங்கியிருந்த போது பற்ற வைத்திருந்த தீக்குண்டத்தின் அடையாளங்களையும் நாம் சென்று பார்த்தோம்” அஷ் ஷஅபி கூறினார்: “அந்த ஜின் இனத்தவர்கள், தமது உணவு குறித்து நபியவர்களிடம் கேட்டார்கள். மேலும், அவர்கள் ஈராக்கைச் (மெசொபொத்தேமியா) சேர்ந்த ஜின்களாகவே இருந்தார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கமைய “உங்கள் கையில் கிடைக்கும், அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத ஒவ்வோர் எலும்புத் துண்டிலும் உங்களுக்கு உணவு இருக்கிறது; (மனித கால்நடைகளின்) சாணத்திலெல்லாம் உங்களது (ஜின்களது) கால்நடைகளுக்கு உணவு இருக்கிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(காய்ந்த) எலும்புத் துண்டுகளாலும், கெட்டிச் சாணத்தாலும் சிறுநீர் கழித்த பின் துப்பரவு செய்ய வேண்டாம்; ஏனெனில், ஜின் இனத்தைச் சேர்ந்த உங்கள் சகோதரர்களுக்கு அவற்றில் உணவளிக்கப் பட்டிருக்கிறது” என்றும் கூறினார்கள். நூல்: திர்மிதி – பாடம்: 47, ஹதீஸ்: 3567 தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்)
இந்த ஹதீஸ்களின் அடிப்படையிலான விளக்கங்களை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 21: ஜின் இனங்கள் |