பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்
Episode 39: போல் ஹெல்யர் (Paul Hellyer):
Episode 40: ஃப்ளாட்வூட்ஸ் அசுரன் (Flatwoods Monster)
இனி நாம் வேற்றுக்கிரகவாசி வேடமிட்டு வரும் ஒருசில ஜின் இனத்தவர்களைத் தனித்தனியாக நோக்கலாம்:
ஃப்ளாட்வூட்ஸ் அசுரன் (Flatwoods Monster): ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ வெற்றிலை வடிவத்திலான தலையை உடைய, கிட்டத்தட்ட 7 அடி உயரம் கொண்ட, கறுப்பு நிற உடலையும், சிவப்பு-செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரக் கூடிய முகம் கொண்ட, மனித கண்களுக்கு மாற்றமான கண்களையுடைய, தனக்குப் பின்னால் இனம்புரியாத ஏதோ ஒளியின் பிரகாசத்தைக் கொண்ட விசித்திரமான உருவ அமைப்பைக் கொண்ட ஓர் இனம் என்று தான் இது வர்ணிக்கப் படுகிறது.
1952ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதி அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவிலுள்ள ஃப்ளாட்வூட்ஸ் எனும் கிராமத்தில் இதை நேருக்கு நேராக சில மனிதர்கள் சந்தித்த ஒரு சம்பவத்தையொட்டியே இதற்கு இந்தப் பெயர் வழங்கப் படுகிறது. அந்தச் சம்பவத்தையே இங்கு உதாரணமாக எடுத்துக் கொள்வதன் மூலம் இவர்கள் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்:
1952ம் ஆண்டு, செப்டம்பர் பாதம் 12ம் திகதி, மாலை 7.15 மணியளவில் “எட்வர்ட் மே” (13 வயது), “ஃப்ரெட் மே” (12 வயது) ஆகிய இரண்டு சகோதரர்களும், “டாமி ஹயர்” (10 வயது) எனும் தமது நண்பனோடு விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று, பிரகாசமாக ஒளிரும் ஒரு பொருள் வானில் குறுக்காகப் பறந்து சென்றதை மூவரும் கண்டனர். பறந்து சென்ற இந்தப் பொருள், சற்றுத் தொலைவிலிருந்த “பேலி ஃபிஷர்” எனும் விவசாயிக்குச் சொந்தமான மலைப்பாங்கான காணியில் வேகமாகத் தரையிறங்குவதை இவர்கள் அவதானித்தனர்.
உடனே மூன்று சிறுவர்களும் ஓடிச் சென்று எட்வர்ட், ஃப்ரெட் சகோதரர்களின் தாயார் “கத்லீன் மே” இடம் சம்பவத்தை முறையிட்டார்கள். உடனே இவர்களின் தாயார் மூன்று சிறுவர்களையும், மற்றும் “நீல் நன்லீ” (14 வயது), “ரோனி ஷேவர்” (10 வயது), மற்றும் மேற்கு வர்ஜீனிய தேசிய பாதுகாப்புப் படை (ஊர் காவல் படை) வீரர்களுள் ஒருவரான “யூஜீன் லெமன்” எனும் இளைஞன் ஆகியோரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, தரையிறங்கிய பொருள் என்னவென்பதை அறிந்து கொள்வதற்காக “ஃபிஷர்” என்பவருக்குச் சொந்தமான அந்தக் காணிக்கு விரைந்தார்.
அவர்களோடு கூடவே சென்று கொண்டிருந்த, ஊர் காவற்படை வீரர் யூஜீன் லெமனுக்குச் சொந்தமான நாய், அனைவரையும் முந்திக் கொண்டு வேகமாக அந்த இடத்தை நோக்கி ஓடிக் கண் பார்வையை விட்டும் மறைந்து விட்டது. திடீரென்று நாய் பயங்கரமாகக் குரைக்கும் சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் அந்த நாய், எதையோ கண்டு பயந்து நடுங்குவது போல், பின்னங்கால்களுக்கிடையில் தனது வாலைச் சொருகிக் கொண்டு இவர்களை நோக்கி ஓடி வந்தது.
கிட்டத்தட்ட அரை கிலோமிட்டர் தூரம் அனைவரும் நடந்து சென்று, ஒரு குன்றுப் பகுதியை அடைந்தனர். குன்றின் மேல் ஏறிப் பார்த்த போது, தமக்கு வலப்புறத்தில் சுமார் ஐம்பது அடியளவு தூரத்தில் தீயினால் ஆன பெரும் பந்து போன்ற ஓரு வடிவம் அதிர்ந்து கொண்டிருப்பதைக் கண்டனர். அது மட்டுமல்லாமல், அந்த இடத்தைச் சுற்றி பணிமூட்டம் போன்ற இனம்புரியாத ஏதோ ஒரு பதார்த்தம் வளிமண்டலம் முழுவதும் நிறைந்திருந்ததையும் அவர்கள் அவதானித்தனர். இந்த விசித்திரப் பனிமூட்டத்தினால் கண்களும், நாசித்துவாரங்களும் எரிவதைப் போன்ற ஒரு வேதனையை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தார்கள்.
பெரிய தீப்பந்து போன்ற இந்த வடிவத்துக்கு இடப்புறம், பக்கத்திலிருந்த கருவாலி மரத்தின் கீழ் சிறிய மின்குமிழ்கள் போன்ற இரண்டு வெளிச்சங்களை “லெமன்” அவதானித்தான். உடனே தனது டார்ச் லைட்டை அந்த இடத்தை நோக்கித் திருப்பினான். அங்கு ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது. விசித்திரமான அங்க அடையாளங்களைக் கொண்ட இந்த உருவம், இவர்களின் டார்ச் வெளிச்சம் தன் மீது பட்ட உடன், கிசுகிசுப்பது போன்ற ஒருவகையான அதிர்வு சார்ந்த சத்தத்தை வெளிப் படுத்திக் கொண்டு அந்தரத்தில் எழும்பி இவர்களை நோக்கி சற்று தூரம் காற்றில் மிதந்து கொண்டு வருவது போல் வந்தது. இவ்வாறு வந்த இந்த உருவம் திடீரென்று மறுபடியும் தனது திசையை மாற்றிக் கொண்டு, திரும்பவும் பெரிய சிவப்புப் பந்தை நோக்கிக் காற்றில் மிதந்து செல்ல ஆரம்பித்தது.
சற்று நேரம் கைகால் செலிழந்தது போல் உறைந்து போய் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஏழு பேரும் அச்சம் மேலிடவே, அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு வீடு நோக்கி ஓடத் தொடங்கினர்.
வீட்டுக்கு வந்தவுடன் மே சகோதரர்களின் தாயார், உள்ளூர்க் காவல் நிலைய (ஷெரிஃப்) அதிகாரி “ராபர்ட் கார்” என்பவரையும், மற்றும் “ப்ராக்ஸ்டன் டிமோக்ராட்” எனும் உள்ளூர்ப் பத்திரிகை நிறுவனத்தின் சொந்தக்காரர் “லீ ஸ்ட்டெவர்ட்” என்பவரையும் உடனடியாகத் தொடர்பு கொண்டு, சம்பவத்தை முறையிட்டார்.
இதனையடுத்து பத்திரிகையாளர் ஸ்ட்டெவர்ட் சம்பந்தப்பட்டவர்களைத் தனித்தனியாகப் பேட்டி கண்டு விட்டு, மீண்டும் ஊர்காவற் படை வீரன் லெமனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அதே இரவின் பிற்பகுதியில் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்றார். பல மணி நேரம் கழித்து அங்குக் சென்ற போது கூட, சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி அருவருக்கத்தக்க நெடியோடு கூடிய உலோகம் கருகியது போன்ற ஒரு விசித்திரமான வாடையைத் தன்னால் நுகர முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இன்னொரு புறம் காவல் துறை சார்பாக ஷெரிஃப் கார், மற்றும் அவரது துணை அதிகாரி பர்னெல் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை மொத்தமாக சல்லடை போட்டுத் தேடலானார்கள். இவர்களது தேடலின் போதும் குறிப்பிட்ட அதே விசித்திரமான வாடையை மட்டுமே தம்மால் நுகர முடிந்ததென்றும்; அது தவிர்ந்த வேறெந்தத் தடயமும் தமக்குக் கிடைக்கவில்லையென்றும் குறிப்பிட்டனர்.
மறுநாள் காலையில், பத்திரிகையாளர் ஸ்ட்டெவர்ட் மீண்டும் ஒரு தடவை சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று வெளிச்சத்தில் பார்வையிட்ட போது, சம்பவத் தளத்தின் சேற்றுப்பாங்கான நிலப்பகுதியில் நீண்ட இரண்டு சுவடுகள் பூமியில் பதிந்திருந்ததை அவதானித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு வகையான கறுப்பு நிறத் திரவம் நிலத்தில் சிந்திரியிருப்பதற்கான தடயங்களையும் கண்டார்.
குறிப்பிட்ட பறக்கும் தட்டு தரையிரங்கியதற்கான தடயம் இதுவாகத் தான் இருக்க வேண்டும் என்று அவர் அபிப்பிராயப் பட்டார். ஏனெனில், சம்பவம் நடந்த அந்தப் பகுதி வாகனப் போக்குவரத்துக்கு எந்தவகையிலும் அனுமதிக்கப் படாத ஒரு பகுதியாக இருப்பதனால், குறிப்பிட்ட பறக்கும் தட்டைத் தவிர வேறெந்த வாகனத்தின் மூலமும் இந்தப் புதுத் தடயம் ஏற்படுத்தப் பட்டிருக்க வாய்ப்பில்லையென்றும் அவர் கருதினார்.
ஆனால், இது ஒரு வாகனத்தின் சுவடு தான் என்பது பிறகு உறுதிப்படுத்தப் பட்டதாகக் கூறப் படுகிறது. அதாவது, சம்பவம் நடந்து சற்று நேரத்திற்குள் ஊர் முழுவதும் இந்தச் செய்தி பரவி விட்டிருந்ததால், அதே இரவில் “மாக்ஸ் லொக்கார்ட்” என்பவர் தனது பிக்கப் ட்ராக் வண்டியில் சம்பவத் தளத்தைப் பார்வையிடச் சென்றதாகவும், அந்த வாகனத்தின் தடயங்களாகவே பத்திரிகையாளர் காலையில் அவதானித்த தடயங்கள் இருக்க வேண்டும் என்றும் பிறகு கருதப் பட்டது.
இதனையடுத்து, பறக்கும் தட்டுச் சம்பவங்கள் குறித்த முறையான புலனாய்வுகளுக்காக நியமிக்கப் பட்டிருந்த வில்லியம், மற்றும் டொனா ஸ்மித் ஆகியோர் பல சாட்சியங்களிடமும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதன் போது, பல சாட்சிகள் வாயிலாகவும் குறிப்பிட்ட சம்பவத்துக்கு நிகரான வேறு பல சம்பவங்களைத் தாமும் நேரடியாகக் கண்டதாகப் பலராலும் வழங்கப் பட்ட வாக்குமூலங்கள் மூலம் மேலும் பல புதுத் தகவல்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின. இவற்றுள் குறிப்பிடத்தக்க உதாரணங்களாகப் பின்வரும் சம்பவங்கள் அமைந்திருந்தன:
21 வயதுடைய ஓர் இளம் பெண்ணும், அவரது தாயாரும், ஃப்ளாட்வூட்ஸ் சம்பவத்தில் குறிப்பிடப்பட்ட வேற்றுக்கிரகவாசியின் உருவ அமைப்புக்கு அச்சு அசலாகப் பொருந்திப் போகும் அதே தோற்றத்திலும், அதே அருவருக்கத் தக்க வாடையுடனும் கூடிய ஓர் உருவத்தை, செப்டம்பர் 12ம் திகதி ஃப்ளாட்வூட்ஸ் சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக எதிர்பாராதவிதமாகத் திடீரென்று நேருக்கு நேர் மிகவும் கிட்டிய தூரத்தில் தாமும் சந்திக்க நேர்ந்ததாக வாக்குமூலம் கொடுத்தார்கள்.
இந்தச் சந்திப்பின் போது, குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசியிடமிருந்து வெளிப்பட்ட அருவருக்கத்தக்க நெடியுடன் கூடிய அந்த விசித்திரப் பணிமூட்டம் தம் மீது படர்ந்ததன் விளைவாகக் குறிப்பிட்ட இளம் பெண்ணின் உடல் நலம் மிகவும் பாதிக்கப் பட்டதாகவும், சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக அந்த இளம் பெண் “க்ளார்க்ஸ்பர்க்” மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகே உடல் நிலை தேறியதாகவும் குறிப்பிடப் பட்டது.
மேலும், ஃப்ளாட்வூட்ஸ் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளுள் ஒருவரான ஊர்காவற் படை வீரர் யூஜீன் லெமனின் தாயாரையும் புலனாய்வும் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தினர். சம்பவத் தளத்துக்கு மிகவும் அண்மையிலிருக்கும் வீடுகளில் யூஜீனின் வீடும் ஒன்று. இந்தக் காரணத்தையும் ஒட்டியே யூஜீனின் தாயாரின் வாக்குமூலமும் பெறப்பட்டது. இவரது வாக்குமுலத்தின் போது மேலும் சில தகவல்களையும் இவர் கூறினார்.
அதாவது, குறிப்பிட்ட பறக்கும்தட்டு தரையிறங்கியதாகக் கூறப்பட்ட அதே நேரத்தில், பூகம்பம் ஏற்படும் போது அதிர்வது போல் மிகவும் பலமாகத் தமது மொத்த வீடும் அதிர்ந்ததாகவும், தமது வீட்டிலிருந்த ரேடியோ கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு சுத்தமாக செயலிழந்து போனதாகவும் இவர் குறிப்பிட்டார்.
மேலும், உள்ளூர்க் கல்வி அதிகார சபைப் பணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம், குறிப்பிட்ட சம்பவம் நடந்த இரவுக்குப் பிறகு, மறுநாள் காலையில், அதாவது செப்டம்பர் 13ம் திகதி சுமார் 6.30 மணியளவில் பூமியிலிருந்து குறிப்பிட்ட பறக்கும்தட்டு வேகமாக மேலெழும்பிச் சென்றதைத் தான் நேரில் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் நடந்த போது பக்கத்திலிருந்ததாகக் கூறப்பட்டவர்களுள் அனேகமானோர், மேலே குறிப்பிட்டது போன்ற பல நோய்களுக்கு உள்ளானார்கள் என்பதும், பல நாட்களாக நோய்களில் அவதிப்பட்டார்கள் என்பதும் கூட விசாரணைகளின் போது கண்டறியப் பட்டது. இந்த நோய்களுக்கெல்லாம் காரணம், குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசியிடமிருந்து வெளிப்பட்ட பணிமூட்டம் போன்ற புகையாக இருக்கலாம் என்றே மருத்துவ ரீதியாகவும் அனுமானிக்கப் பட்டது.
இந்த நோயின் பிரதான அறிகுறிகளாகக் குறிப்பாக மூக்குப் பகுதியில் கடுமையான எரிச்சல், தொண்டை அலற்சி மற்றும் வீக்கம் போன்றவை வெளிக்காட்டப் பட்டன. சம்பவத்தின் போது பக்கத்தில் இருந்த லெமன், இரவு முழுவதும் தொடர்ச்சியாக வாந்தியெடுத்துக் கொண்டிருந்ததாகவும், ஜன்னி போன்ற அறிகுறிகளுடன் விடிய விடிய அவதிப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. மேலும், சம்பவத்தைத் தொடர்ந்து பல வாரங்களாக லெமன் தொண்டை நோயால் பாதிக்கப் பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
சம்பவத்தின் நேரடி சாட்சிகளுள் பலருக்கு சிகிச்சையளித்த ஒரு மருத்துவர் கருத்து வெளியிட்ட போது, கடுகு வாயுவினால் தாக்கப்பட்ட ஒருவரிடமிருந்து என்னென்ன நோய் அறிகுறிகள் வெளிப்படுமோ, அதற்கு நிகரான அறிகுறிகளே இந்த நோயாளர்களிடமிருந்தும் வெளிப்பாட்டதென்று அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாவோருக்கு ஏற்படும் ஹிஸ்டீரியா நிலையின் போது கூட இவ்வாறான அறிகுறிகள் அரிதாக சிலருக்கு வெளிப்படுவதுண்டு என்றும் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்த விரிவான பல சான்றுகள், ஆவணங்கள், மற்றும் வாக்குமூலங்கள் போன்ற பலவிதமான ஆதாரங்களும் இணையத்தில் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. அந்த அளவுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சம்பவமாகவே இந்தச் சம்பவம் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. எல்லாச் சான்றுகளையும் இங்கு பதியப் போனால், இதிலேயே கட்டுரை நீண்டு கொண்டு செல்லும். எனவே, கட்டுரையின் சுருக்கம் கருதி, மாதிரிக்கு ஓர் இணைப்பை மட்டும் கீழே வழங்குகிறேன். இது குறித்து விரிவாக ஆய்வு செய்ய விரும்புவோர் பின்வரும் இணைப்பின் ஊடாக மேலதிகமான தேடல்களையும் தொடரலாம்:
Source: https://en.wikipedia.org/wiki/Flatwoods_monster
ஃப்ளாட்வூட் அசுரர் எனும் இந்த இனம் பற்றிய தகவல்களாக இவ்வளவும் போதுமென்று கருதுகிறேன். இனி இன்னோர் இனத்தவர் பற்றி நோக்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 41: நரை நிறத்தவர்கள் (Grey Aliens):
|