Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 49
Posted By:Hajas On 3/18/2017 8:53:42 AM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

Episode 48:  (Nordic Aliens தொடர்ச்சி 02)

Episode 49: (Nordic Aliens தொடர்ச்சி 03)

 Image may contain: 1 person, text

“Daily Mail” எனும் பிரித்தானிய நாளிதளில் 2016, பெப்ரவரி 28 ஆம் திகதி ஒரு செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் வாசகத்தின் ஒரு பகுதி பின்வருமாறு குறிப்பிடப் பட்டிருந்தது:

“முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்வைட் ஐஸன்ஹவர் பதவியில் இருந்த போது, அவருக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இடையில் மூன்று இரகசிய நேரடிச் சந்திப்புகள் நிகழ்ந்ததாக அமெரிக்க காங்கிரஸ், மற்றும் பெண்ட்டகன் ஆலோசகர் திமொதி குட் “Timothy Good” தனது வார்த்தைகளால் உறுதிப்படுத்தினார். இந்தச் சந்திப்புக்களுக்கான ஆரம்பம் ஒரு தகவல் பரிமாற்றத்துடனேயே ஆரம்பித்தது.

அதாவது, ஜனாதிபதி ஐஸன்ஹவர், சில FBI உயர் அதிகாரிகள் உட்பட சில எண்ண அலைகளை சிக்னல் போல் அனுப்புவதன் மூலம் வேற்றுக்கிரகவசிகளுடன் ஆரம்பப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் Nordic இனத்தைச் சார்ந்த சில வேற்றுக்கிரகவாசிகளுடன் முதலாவது சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பிந்திய சந்திப்புகளின் விளைவாக, Nordic இனத்தவர்களுக்குப் பதிலாக, இறுதியில் நரைநிற வேற்றுக்கிரகவாசிகளுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையிலேயே இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. இந்தச் சந்திப்புக்களும், ஒப்பந்தக் கைச்சாத்திடல்களும் 1954 ஆம் ஆண்டு நியு மெக்ஸிகோ நகரில் இருக்கும் ஓர் இரகசிய இராணுவத் தளத்தில் வைத்தே நிகழ்ந்தன என்றும் குறிப்பிடப் பட்டது.”
- (Source: Daily Mail, February 28th 2016)

Nordic இனத்தவர்களைப் பற்றி முறையாக ஒருவர் ஆய்வு செய்ய ஆரம்பித்தால், அவர்கள் குறித்த ஏராளமான சம்பவங்களையும், ஆதாரங்களையும் இலகுவாக இணையத்தளங்களில் கூடப் பெற்றுக் கொள்ளலாம். பலர் வாயிலாகவும் இவர்கள் குறித்த பல ஆதாரபூர்வமான தகவல்கள் கசிந்திருக்கின்றன. அவை அனைத்தையும் இங்கு பட்டியல் போடுவது நமது நோக்கமல்ல. இவர்கள் பற்றிய யதார்த்தத் தன்மைகளை வாசகர் புரிந்து கொள்ளும் அளவுக்கு மட்டுமே இங்கு ஆதாரங்கள் வழங்கப் பட்டுள்ளன. மேலதிகமாக இவர்கள் குறித்துத் தேட விரும்புவோர், இவர்கள் குறித்த தகவல்களின் இறுதியில் வழங்கப்படவிருக்கும் இணைப்புகள் வாயிலாக மேலதிகத் தேடல்களை மேற்கொண்டு உண்மைகளை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளலாம்.

இனி இவர்களின் யதார்த்தத் தன்மை பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுவதால், அவற்றை ஒருசில சம்பவங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முயற்சிக்கலாம்:
.
சம்பவம் 1 - பில்லி மயர் (Billy Meier):
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த Billy Meier எனும் இவர், வேற்றுக்கிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்வோர் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஒருவர். வேற்றுக்கிரகவாசிகள் குறித்த பல ஆய்வுகளுக்கு இவர் சொந்தக்காரராக இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு வேற்றுக்கிரகவாசிகளை நேரில் சந்தித்த அனுபவம் பெற்ற ஒருவர் என்ற அடிப்படையில் கூட பரவலாக அறியப்பட்ட ஒருவர் இவர். தனது ஐந்து வயதிலிருந்து Nordic இனத்தைச் சேர்ந்த வேற்றுக்கிரகவாசிகளோடு தனக்கு மிகவும் நெருங்கிய தொடர்புகளும், உறவுகளும் இருப்பதாகப் பட்டவர்த்தனமாக அன்று முதல் இன்று வரை தயங்காமல் சொல்லி வருபவர். (இன்றைய திகதிக்கு இவரது வயது 79 என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்)

சிறு வயதிலிருந்தே பல தசாப்தங்களாக இவரோடு தொடர்பிலிருக்கும் வேற்றுக்கிரகவாசி இனத்தவரை இவர் “Plejarans” என்று தான் கூறுகிறார். இது Nordic இனத்தவரின் இன்னொரு பெயர். “Plejarans” என்பதன் அர்த்தம், “Pleiades” எனும் நட்சத்திரத் தொகுதியிலிருக்கும் கிரகத்திலிருந்து வருகை தருபவர்கள் என்பது தான். அதாவது இவரோடு நெருங்கிப் பழகும் வேற்றுக்கிரகவாசிகள், ஆரம்பம் முதல் தம்மைப் பற்றி அறிமுகம் செய்திருப்பது, தாம் “ப்ளேடீஸ்” எனும் நட்சத்திரத் தொகுதியிலிருக்கும் கிரகங்களிலிலுருந்து வருபவர்கள் என்று தான். வேற்றுக்கிரகவாசிகள் கூறியிருக்கும் இந்த அறிமுகங்களை இவர் உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கிறார். இதன் பிரகாரமே இவர் இந்த வேற்றுக்கிரகவாசிகளை “Plejarans” என்று அழைக்கிறார்.

மேலும், இந்த வேற்றுக்கிரகவாசிகளின் தோற்றத்தைப் பற்றி பில்லி கூறும் போது, இவர்கள் தோற்றத்தில் மனிதர்களைப் போலவே இருப்பார்கள் என்று கூறுகிறார். மேலும், இவர்கள் வசிக்கும் கிரகத்தின் பெயர் “எர்ரா” (Erra) என்றும், நமது முப்பரிமான உலகின் நேரப்பரிமாணத்திலிருந்து ஒரு செக்கனிலும் குறைவான அளவு சற்றே சரிவான ஒரு நேரப் பரிமாணத்திலேயே இந்தக் கிரகம் இருப்பதாகவும், தூரத்தின் அடிப்படையில் இது ப்ளேடியன் உடுத்தொகுதியிலிருந்து 80 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு கிரகம் என்றும் பில்லி விபரம் கூறியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்த Nordic இனத்தவர்களோடு தனக்கிருக்கும் தொடர்புகளைப் பற்றிக் கூறும் போது, பிரத்தியேகமாக ஒரு Nordic இனத்துப் பெண்ணுடன் தனக்கு நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இந்தப் பெண்ணின் பெயர் “செம்ஜாசே” (Semjase) என்றும் இவர் குறிப்பிடுகிறார். இந்தப் பெண் தன்னை அதிகம் நேசிப்பதாகவும், நமது உலகின் சமகால நிகழ்வுகள், மற்றும் மனித இனத்தின் எதிர்காலம் குறித்த மறைவான பல செய்திகளையும் கூட இந்தப் பெண் அவ்வப்போது தன்னிடம் பிரத்தியேகமாக அறிவித்து விட்டுச் செல்வதாகவும் பில்லி குறிப்பிட்டிருப்பதுண்டு.

உதாரணமாக, மனித இனத்தின் ஆண்மீக வளர்ச்சி, இறந்து போனபின் தொடங்கும் அடுத்த ஜன்ம வாழ்க்கை போன்றவை குறித்த பல பெறுமதி மிக்க ஞானங்களை இவர்கள் தனக்கு அவ்வப்போது கற்று தருவதாக பில்லி குறிப்பிடுகிறார். மேலும், இன்றைய உலகிலிருக்கும் மதங்களை (இஸ்லாம் உட்பட) பின்பற்றுவதால் மனித இனத்துக்கு இழிவையும், அழிவையும் தவிர வேறெந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லையென்றும், இந்த மதங்கள் அனைத்துமே பொய்யான கட்டுக்கதைகள் என்றும், உண்மையான மனித இனத்தின் வரலாறு என்பது, இந்த மத நூல்களிலோ, அல்லது வரலாற்று நூல்களிலோ குறிப்பிடப் பட்டிருப்பவை போன்றது அல்ல என்றும் இந்த வேற்றுக்கிரகவாசிகள் தம்மிடம் கூறியிருப்பதாகவும் இவர் குறிப்பிடுகிறார்.

மேலும், விஞ்ஞானம், வானியல், சூழலியல் போன்ற பல துறைகளிலும் கரைகடந்த ஞானம் பெற்ற இந்த இனத்தவர்கள், இந்தப் பிரபஞ்சம் குறித்த சரியான ஞானத்தைப் பெற்றவர்கள் என்றும் பில்லி நம்புகிறார். இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் பல மறைவான அம்சங்கள் குறித்த இரகசியங்கள், மற்றும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பவை பற்றிய தீர்க்கதரிசன ஞானம் போன்ற அனைத்துமே இந்த இனத்தவர்களுக்குத் தெரியும் என்றும் பில்லி குறிப்பிடுகிறார்.

மேலும், பூமியின் இன்றைய மனித சனத்தொகை மிகவும் அதிகம் என்றும், இது இப்படியே தொடர்ந்தால், இந்தப் பூமியின் சூழல் சமனிலை சீர்குலைந்து, பாரிய அழிவுகள் ஏற்படும் என்றும், எனவே இவ்வாறான அழிவுகளைத் தடுக்கும் பொருட்டு, மனித சனத்தொகையைக் குறைப்பதற்கு உலக தலைமைத்துவங்கள் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் இந்த வேற்றுக்கிரகவாசி இனத்தவர்கள் தன்னிடம் அடிக்கடி எச்சரித்து விட்டுச் சென்றதுண்டு என்றும் பில்லி குறிப்பிடுகிறார்.

தன்னிடம் வரும் இந்த Nordic இனத்தவர்கள் இவ்வாறு சொல்லி விட்டுச் செல்லும் கதைகளில் பாதிக்கு மேல் பொய்யும், பித்தலாட்டமுமே இருக்கின்றன என்பது பில்லி போன்றவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லையென்பதை நாம் ஏற்கனவே ஒரு தடவை விளக்கியிருக்கிறோம். அந்த அடிப்பவையில், பில்லியின் பார்வையில் இவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் என்றும், இவர்கள் சொல்லி விட்டுச் செல்வதெல்லாமே உண்மையென்றும் தான் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கமைய, தான் உண்மையென்று கருதுபவற்றை அவர் அப்படியே உலகுக்கு எத்தி வைக்கிறார். அவ்வளவு தான். வேற்றுக்கிரகவாசிகள் சொல்லி விட்டுச் செல்லும் பொய்யான தகவல்களைக் கழித்து விட்டு, இதிலிருக்கும் உண்மைகளை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டியது நம்மைச் சார்ந்தது.

வேற்றுக்கிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்வோர் மத்தியிலும், மற்றும் உலக அரங்கில் இவ்வாறான செய்திகளை விமர்சனப் பார்வையோடு பார்ப்போர் மத்தியிலும் கூட பில்லியின் தகவல்களுக்கும், ஆதாரங்களுக்குமென்று ஒரு தனி மரியாதை உண்டு. 1970 களில் இருந்து இன்றுவரை இவர் உலகுக்கு சமர்ப்பித்திருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்பட, வீடியோ, ஆடியோ, மற்றும் வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து சேகரிக்கப் பட்டவையாகக் கூறப்படும் சில உலோகத் துண்டுகள் ஆகிய ஆதாரங்களுள் அனேகமானவை, எந்த விமர்சகர்களாலும் இதுவரை பொய்ப்பிக்கப்பட முடியாத அளவுக்கு நம்பகம் மிக்க தரத்தில் அமைந்திருப்பவை.

இந்த இடத்தில் இன்னொரு சிறிய தகவலையும் பதிவு செய்து கொள்வதே சிறந்தது. அதாவது, இன்றைய உலகில் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து நேரடி சாட்சியம் கூறிய பலரையும் பொய்யர்கள், பைத்தியக்காரர்கள், பிரபலம் பெறுவதற்காக இட்டுக்கட்டியவர்கள் என்று திட்டமிட்டுப் பல்வேறு பட்டங்களை அவர்களுக்குச் சூட்டுவதன் மூலம் வேற்றுக்கிரகவாசிகள் சார்ந்த தகவல்களையெல்லாம் பொய்ப்பிப்பதற்காகவென்றே இன்னொரு கூட்டம் இன்றைய உலகில் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது.

இவர்களைப் பொருத்தவரை வேற்றுக்கிரகவாசிகள் குறித்து ஆயிரக்கணக்கானோர் வழங்கும் வாக்குமூலங்கள் உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள வேண்டிய எந்த அக்கறையும் இவர்களுக்கு இல்லை. உண்மையோ, பொய்யோ; எதுவாயிருந்தாலும், அவை அனைத்தையும் எப்படியாவது பொய்ப்பித்தே தீர வேண்டும் எனும் வெறியோடு மட்டுமே சுற்றிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

இவ்வாறானவர்களில் அனேகமானோர் தம்மை “விமர்சகர்கள்” (critics) / “தோலுரித்துக் காட்டுபவர்கள்” (Debunkers) என்று தான் அழைத்துக் கொள்வதுண்டு. அனேகமான அரச அமைப்புகளுக்குக் கூட வேற்றுக்கிரகவாசிகள் குறித்த செய்திகளை மூடி மறைக்கும் தேவை அன்று முதல் இருந்து வருவதால், இவ்வாறான “விமர்சகர்களுக்கு” அனேகமான சந்தர்ப்பங்களில் அரச அங்கீகாரம் கூட கிடைப்பதுண்டு. இவ்வாறான வெறி பிடித்த விமர்சர்களின் பொய்ப் பிரச்சாரங்களின் விளைவாகவே வேற்றுக்கிரகவாசிகள் குறித்த பல உண்மைச் சம்பவங்கள் கூட இன்று “கற்பனைக் கதைகள்” என்று முத்திரை குத்தப்பட்டு மூலை முடுக்குகளில் முடங்கிப் போயிருக்கின்றன.

அனேகமான பறக்கும்தட்டுச் சம்பவங்களை ஏற்கனவே “பொய்கள்” என்று முத்திரைகுத்துவதில் ஓரளவு வெற்றிகண்டிருக்கும் இவ்வாறான பல புகழ்பெற்ற “விமர்சகர்”களால் கூட இதுவரை பில்லியின் ஆதாரங்களைப் பொய்யானவையென்று நிரூபிக்க இயலவில்லை. எனவே, இவர் விடயத்தில் இந்த விமர்சகர்கள் கூட மௌனத்தையே கடைப்பிடிப்பதைப் பார்க்க முடிகிறது. ஏனெனில், இவர் இதுவரை சமர்ப்பித்திருக்கும் ஆதாரங்களுள் அனேகமானவையின் நம்பகத்தன்மை அத்தகையது.

பல தசாப்தங்களாக வேற்றுக்கிரகவாசிகள் குறித்து இவர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இவரது பிரச்சாரக் காலப் பகுதியில் இவரது உயிருக்கும் ஓரிரு சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல் ஏற்பட்டதுண்டு. 1980 ஆம் ஆண்டு ஜப்பானின் “நிப்போன் தொலைக்காட்சி” (Nippon Television) நடத்திய பேட்டியொன்றின் போது, இது குறித்து பில்லி பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.

ஒரு தடவை (1980, மே 10ம் திகதி) பில்லியை நோக்கி மறைவிலிருந்து மேற்கொள்ளப் பட்ட துப்பாக்கிச் சூட்டிச் சம்பவத்தின் போது, துப்பாக்கிக் குண்டு பில்லியின் தலைக்கு அருகால் தவறிச் சென்றதால் பில்லி உயிர் தப்பினார். இது அல்லாமல் இன்னும் இரண்டு தடவை கூட இவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது கூட இவர் உயிர்பிழைத்ததாகச் சொல்லப் படுகிறது.

இவர் குறித்த மேலதிக தேடல்களை விரும்புவோருக்குப் பின்வரும் இணைப்பு உதவலாம்:
https://en.wikipedia.org/wiki/Billy_Meier
.
சம்பவம் 2 – Whitley Strieber:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேற்றுக்கிரகவாசிகள் குறித்த பல உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தியவர்களுள் இவரும் பிரபலமான ஒருவர். கிட்டத்தட்ட இருபது வருடங்களாகத் தொடர்ச்சியாக வேற்றுக்கிரகவாசிகள் குறித்து மக்களுக்குப் பலவிதமான எச்சரிக்கைகளை விடுத்து வந்தவர்களுள் இவரும் ஒருவர்.

கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட பல செயல்திட்டங்களோடு தான் இந்த வேற்றுக்கிரகவாசிகள் அடிக்கடி இங்கு வருகை தருகிறார்கள் என்றும், இந்த உண்மையை நிரூபிக்கும் விதமாகப் பல்லாயிரக்கணக்கான ஆதாரங்கள் உலகில் கொட்டிக் கிடக்கின்றன என்றும் இவர் குறிப்பிடுகிறார். மேலும், இந்த வேற்றுக்கிரகவாசிகளின் பிரதான திட்டங்களுள், மனித இனத்தின் மரபணுக்களோடு, தமது மரபணுக்களைத் தொழினுட்ப ரீதியில் கலப்பதன் மூலம், “மனித + வேற்றுக்கிரகவாசி” கலப்பினங்களை (Hybrids) உலகில் உருவாக்குவதும் ஒரு திட்டம் என்றும் இவர் ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.

இதைப் பற்றி இவர் விளக்கும் போது, வேற்றுக்கிரகவாசிகளால் இதுவரை கடத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் வாக்குமூலங்களின் போதெல்லாம், தமது விந்து / முட்டை மாதிரிகளை வேற்றுக்கிரகவாசிகள் சேகரித்துக் கொள்வதாகக் குறிப்பிடுவதை முக்கியமாகச் சுட்டிக் காட்டுகிறார். அதாவது, இவ்வாறு மனித விந்து / முட்டை மாதிரிகளை இவர்கள் சேகரிப்பதன் அடிப்படை நோக்கமே, அடுத்தடுத்த தலைமுறைகளில் தூய மனித இனத்துக்குப் பதிலாக, வேற்றுக்கிரகவாசி மரபணுக்களால் கலப்படமான மரபணுக்களையுடைய கலப்பின மனிதர்களை உலகில் அதிகம் பரவச் செய்வது தான் என்று இவர் குறிப்பிடுகிறார்.

இது பற்றி இவர் மேலும் கூறுகையில், கடத்தப்பட்ட பெண்களில் கணிசமான தொகையினர் பல்வேறு அடிப்படைகளிலும் பலவந்தமாகக் கருவூட்டப் பட்டே திருப்பி அனுப்பப் படுவதாகவும், இவ்வாறு கருவூட்டி அனுப்புவதன் நோக்கம், மனிதப் பெண்களின் கருவறைகளில் வேற்றுக்கிரகவாசிக் கலப்பினங்களை வளரச் செய்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதைப் பரிசோதனை செய்து பார்ப்பது தான் என்றும் இவர் கூறுகிறார்.

மேலும், கடத்தப் படுபவர்களில் ஒரு சாராரின் உடல்களுக்குள் சத்திரசிகிச்சை மூலம் நுண்சில்லுகள் (Microchips) போன்ற தொழினுட்பம் சார்ந்த சில நுண்ணிய கட்டமைப்புக்களைத் தோலுக்கு அடியில் பதித்து இவர்கள் அனுப்புவதும் உண்டு. இது ஏன் என்பதற்கு “விட்லி” விளக்கம் கூறுகையில், இந்த வேற்றுக்கிரகவாசிகள் தமது சுய தேகத்தில் இருக்கும் போது, இந்த முப்பரிமான உலகிலிருக்கும் எல்லா அம்சங்களையும் தமது சுய தேகத்தின் மூலம் உணரவோ, அனுபவிக்கவோ முடியாது என்பதால், இவ்வாறான காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் போது, தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் விதமாக மனித உடல்களை இரவல் பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறான பதியங்களைச் சத்திரசிகிச்சை மூலம் இவர்கள் மனித உடல்களுக்குள் பதிக்கிறார்கள் என்றும் கூறுகிறார்.

வேற்றுக்கிரகவாசிகளுடன் ஏற்பட்ட ஆரம்பகால நேரடி சந்திப்புகள் பற்றி விட்லி கூறுகையில், 1985, டிசம்பர் 26ம் திகதி மாலை நேரம், நியுயோர்க் நகரில் தனது கேபினில் இருந்து கொண்டிருந்த போது, வேற்றுக்கிரகவாசிகளால் தான் கடத்தப் பட்டதாகவே கூறுகிறார். இந்தக் கடத்தல் சம்பவம் குறித்த முழு விபரங்களையும் விரிவாக உள்ளடக்கி, “Communion: A True Story” எனும் தலைப்பில் ஒரு புத்தகத்தை இவர் 1987 இல் வெளியிட்டார். வேற்றுக்கிரகவாசிகள் குறித்து இவர் எழுதிய புத்தகங்களுள் முதலாவது புத்தகமாகமாகக் கருதப்படும் இந்தப் புத்தகம், தன்னை பற்றிய ஒரு சுயசரிதமாகவே இருந்தது.

இந்தப் புத்தகத்தை இவர் எழுதிய ஆரம்ப காலங்களில் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த முழுமையாய ஓர் அறிவு இவருக்கு இருக்கவில்லை. தனக்கு நேர்ந்த அனுபவங்களை மட்டுமே இதில் விபரித்து எழுதியிருந்தார். இந்த நூலில் இவர் வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்களை “வருகையாளர்கள்” (The Visitors) என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் யார், எங்கிருந்து வருகிறார்கள், என்ன நோக்கத்தில் வந்தார்கள் என்பன போன்ற விபரங்கள் எதுவும் அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இவர் எழுதிய இந்த முதலாவது புத்தகமே இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து இவரது இருபது வருடத்துக்கும் மேற்பட்ட பிரச்சாரக் காலத்தில் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த மேலும் நான்கு புத்தகங்கள் இவரால் எழுதப் பட்டன. “Transformation”, “Breakthrough: The Next Step”, “The Secret School”, “Solving the Communion Enigma: What Is to Come” ஆகிய புத்தகங்களே இவை. இதில் கடைசியாக (2011ம் ஆண்டு) எழுதப்பட்ட புத்தகத்தில் வேற்றுக்கிரகவாசிகளது பல்வேறு திட்டங்கள் குறித்து இவர் பிரத்தியேகமாக எழுதியிருக்கிறார்.

1998, ஜூன் மாதம் 6ம் திகதி அதிகாலை நேரம், டொரண்ட்டோ நகரில் “விட்லி” தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வழமைக்கு மாற்றமாக ஒரு புது விதமான “வருகையாளர்” வந்ததாக அவர் குறிப்பிட்டார். இந்தப் புதிய “வருகையாளர்” இதற்கு முன் ஒருபோதும் வந்ததில்லை. ஏனையோரைப் போலல்லாது, இவர் பார்ப்பதற்கு மிகவும் இயல்பான மனித தோற்றத்திலேயே இருந்தார் என்று குறிப்பிடப் படுகிறது. சற்று வயதான ஒருவரின் தோற்றமே இவருக்கு இருந்ததாகவும் குறிப்பிடப் படுகிறது.

வருகை தந்த இந்த மர்ம நபர், அந்த அதிகாலைப் பொழுதில் கூட விட்லியோடு நீண்ட நேரம் உரையாடி விட்டுச் சென்றதாகவும், இந்த உரையாடலில், ஆன்மீக வளர்ச்சி, பூமியின் சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் பற்றி, விரிவுரை நிகழ்த்துவது போல் பல புதுத் தகவல்களை இந்த மர்ம நபர் விளக்கிக் கூறி விட்டுச் சென்றதாகவும் விட்லி குறிப்பிட்டார்.

மேலும், மனித உயிர் பற்றிய ஒரு புதிய தகவலையும் இந்த நபர் விட்லிக்குக் கற்றுக் கொடுத்ததாகக் கூறப் படுகிறது. அதாவது ஒவ்வொரு மனிதனது முன் நெற்றிக்கு எதிரிலும் ஓர் இலத்திரன் (Electron) அந்தரத்தில் மிதந்து கொண்டிருப்பதாகவும், இந்த இலத்திரன் தான் அந்த மனிதனது உயிர் என்றும் இந்த மர்ம நபர் தன்னிடம் கூறியதாக விட்லி குறிப்பிடுகிறார். இதைக் கூறி விட்டு அந்த நபர் விட்லியிடம் ஒரு குவளையைக் கொடுத்ததாகவும், அந்தக் குவளையினுள் வெள்ளை நிறத்திலான ஓர் இனம்புரியாத திரவம் இருந்ததாகவும், அதைக் குடிக்குமாறு மர்ம நபர் கூறியதும், விட்லி அதைக் குடித்ததாகவும் குறிப்பிடப் படுகிறது.

இதற்கு முன் சந்தித்த எந்த வேற்றுக்கிரகவாசிகளோடும் இந்த நபர் வருகை தராத ஒருவர் என்பதால், இவரைக் குறித்து அறிந்து கொள்ள விட்லி விரும்பினார். எனவே இவரது பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு மர்ம நபர், தன்னை “மீக்காயில் / மைக்கேல்” (Michael) என்று அழைத்தால் போதும் என்றும், அதற்கு மேல் தன்னைப் பற்றி அறிய வேண்டிய அவசியம் இல்லையென்றும் பதிலளித்ததாக விட்னி குறிப்பிட்டார். ஆனால், பிற்காலத்தில் இவரைப் பற்றி வர்ணிக்கும் போதெல்லாம், இவரை “திறவுகோளின் அதிபதி” (Master of the Key) என்று தான் விட்லி அழைத்ததுண்டு. இந்தச் சம்பவம் மொத்தத்தையும் விரிவான வடிவத்தில் “The Key” எனும் தனது நூலில் விட்லி விபரித்திருக்கிறார்.

விட்லி குறித்து மேலதிகமாகத் தேட விரும்புவோருக்குப் பின்வரும் இணைப்பு உதவலாம்:
https://en.wikipedia.org/wiki/Whitley_Strieber

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

Episode 50: (Nordic Aliens தொடர்ச்சி 04)







Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..