சமீபத்தில் நண்பர் ஒருவரின் ஏழு வயதுப் பெண் திடீரென சுகவீனமடைந்தாள். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சுருண்டு விழுந்தவள் ”வயிறு வலிக்கிறது” என்று அழுதிருக்கிறாள். பதறிப் போன பெற்றோர்கள் உடனடியாக மகளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். பலவிதமான சோதனைகளையும், ஸ்கேன்களையும் செய்து பார்த்த மருத்துவர், ’உடலில் எந்தக் கோளாறும் தெரியவில்லையே!’ என்று குழம்பியிருக்கிறார். இதற்கிடையே நான்கைந்து நாட்கள் ஓடி விட்டது. இந்த நாட்களில் தொடர்ச்சியாக வலி நிவாரணி ஊசி போட்டே சமாளித்திருக்கிறார்கள். வலி நிவாரணியின் தீவிரம் குறையும் போதெல்லாம் அவள் துடிதுடித்துப் போயிருக்கிறாள்.
கடைசியாக எந்தச் சோதனையும் நோயைக் கண்டு சொல்லாததால் குழம்பிப் போன மருத்துவர்கள், எதற்கும் ஒரு முறை வயிற்றைச் சுத்தம் செய்து பார்த்து விடுவோமென்று எனிமா கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வயிற்றிலிருந்து கட்டி கட்டியாக கறுப்பு நிறக் களிம்பு போன்ற பொருள் கடும் துர்நாற்றத்துடன் வெளியேறியுள்ளது. அதைச் சோதனைக்கனுப்பிப் பார்த்த போது, அவ்வளவும் அந்தச் சிறுமி தினசரி தின்னும் நொறுக்குத் தீனிகளின் கழிவு என்று தெரிய வந்துள்ளது. மகளைச் செல்லமாக வளர்ப்பதாகக் கருதிக் கொண்டு பெற்றோர் அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
லேய்ஸ், குர்குர்ரே, சீட்டோஸ், கிண்டர் ஜாய், சீஸ் பால் மற்றும் கடைகளில் பல வண்ணங்களில் சரம் சரமாகத் தொங்கும் அத்தனை நொறுக்குத் தீனிகளும் தான் அவள் வயிற்றை நிறைத்துள்ளது. அது சரியாக செரிமானமாகாமல் இரைப்பையிலும், குடலின் உட்சுவரிலும் ஒரு பிசினைப் போல் படிந்து போயிருக்கின்றது. தொடர்ந்து உள்ளே வரும் உணவுப் பொருள் எதையும் செரிக்க விடாமல் செய்ததோடு, கடுமையான வலியையும் தோற்றுவித்திருக்கின்றது.
குழந்தைகளைக் கவர்வதற்கென்றே தொலைக்காட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்களில் பெரும்பாலானவை தின்பண்டங்களுக்காகவும், அதனை சாப்பிட்ட பின் பற்களை எந்த பற்பசையைக் கொண்டு விளக்கலாம் என்பதற்காகவுமே காட்டப்படுகின்றது. சுமார் 50% விளம்பரங்கள் ஜங்க் புட் என்று சொல்லப்படும் குப்பை உணவுகளைக் கடை விரிப்பதாகவும், ஒரு வாரத்துக்கு சராசரியாக 45 மணி நேரம் தொலைக்காட்சிகளின் முன் செலவழிக்கும் குழந்தைகள் ஆண்டொன்றுக்கு சுமார் 30,155 விளம்பரங்களைக் காண்பதாகவும், அமெரிக்கச் சிறார்களில் 60% பேர் ஒபசிட்டி எனப்படும் அதீத உடற்பருமன் நோய்க்கு ஆட்பட்டிருப்பதாகவும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சொல்கின்றது.
உலகளவில் குப்பை உணவுச் சந்தையின் தோராய மதிப்பு சுமார் ரூ. 6521 பில்லியன். அமெரிக்காவில் விளம்பரங்களுக்காக மட்டுமே சுமார் 83.2 பில்லியன் ரூபாயைக் குப்பை உணவு தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலவிடுகின்றன. மேற்கத்திய நாடுகளில் ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு வலுவுடன் இருக்கும் தரக்கட்டுப்பாட்டுச் சட்டங்களையே கால் தூசுக்கு மதிக்கும் குப்பை உணவு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா என்பது திறந்த மடம் தான்....ஆகையால் இனிமேலாவது திருந்தி சத்தான ஆரோக்கிய உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்போம்.
|