பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்
.Episode 53: (Nordic Aliens தொடர்ச்சி 07)
Episode 54: ஜின்களால் மனிதர்களைக் கடத்திச்செல்ல முடியுமா?
வேற்றுக்கிரகவாசிகள் பற்றி இதுவரை நாம் பார்த்த பல சம்பவங்களில் பரவலாக அவதானிக்க முடிந்த ஓர் அம்சம் தான், வேற்றுக்கிரகவாசிகள் எனும் போர்வையில் வருகை தரும் இந்த ஜின் இனத்தவர்கள் மனிதர்களை அனாயாசமாகக் கடத்திக் கொண்டு செல்கிறார்கள் எனும் தகவல்.
இவ்வாறான தகவல்களைப் பார்த்த மாத்திரத்திலேயே நம்மில் அனேகமானோருக்கு ஒரு சந்தேகம் எழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது, இந்த வேற்றுக்கிரகவாசிகளெல்லாம் ஜின்கள் தான் என்று கூறுவதாக இருந்தால், ஜின்களால் மனிதர்களைக் கடத்திச் செல்ல முடியும் என்பதை முதலில் மார்க்கத்தின் வெளிச்சத்தில் நிரூபிக்க வேண்டியதும் அவசியமாகி விடுகிறது. இது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? இஸ்லாம் இந்தக் கருத்தைச் சரிகாண்கிறதா? ஜின்களால் இஷ்டத்துக்கு மனிதர்களைக் கடத்திச் செல்ல முடியுமா? இதை ஆமோதிக்கும் மார்க்க ஆதாரங்கள் ஏதும் இருக்கின்றனவா?
இது தான் நம்மில் அனேகமானோருக்குள் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதும், இந்தத் தொடரை எழுதிக் கொண்டிருக்கும் எனது கடமை என்பதை நான் மறக்கவில்லை. எனவே, இது குறித்த மார்க்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டுரை அமைகிறது.
மனிதர்களை ஜின்கள் கடத்திச் செல்வது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை எளிய நடையில் இலகுவாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் ஆதாரங்களை ஒவ்வொன்றாக, அவற்றுக்குரிய விளக்கங்களுடன் இனி நாம் பார்க்கலாம்:
ஆதாரம் 1: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவித்ததாவது: இரவு சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்கும் போது (மாலை மங்கும் போது), உங்கள் பிள்ளைகளை (வெளியில் தனியாக விடாமல்) உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் வெளியில் பரவும் நேரம் அது. சற்று நேரத்துக்குப் பிறகு வேண்டுமானால் அவர்களை மீண்டும் வெளியில் (விளையாட) விடலாம். மேலும், கதவுகளை மூடுங்கள்; மூடும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். ஏனெனில், (அவ்வாறு) மூடிய கதவை ஷைத்தான் திறப்பதில்லை. (ஸஹீஹுல் புகாரி: பாடம் 59, ஹதீஸ் 112)
முஸ்லிம் சமூகத்தில் பகுத்தறிவு வாதம் பேசக் கூடிய தரப்பினரும், ஜின்கள் பற்றி மார்க்கம் கூறியிருக்கும் செய்திகளை முழுமையாக ஆய்வு செய்யாமல், தமக்குத் தேவைப்படும் பகுதிகளை மட்டும் கத்தரித்தெடுத்து, அதன் மூலம் தமது பகுத்தறிவு வாதத்தை நிலைநாட்ட முயற்சிப்போரும் அனேகமாக இந்த ஹதீஸுக்கு, இது உணர்த்தும் கருத்துக்கு மாற்றமான வேறொரு கருத்தைக் கற்பிப்பதுண்டு. அந்த அர்த்தம் இது தான்:
“இந்த ஹதீஸில் முன்னிரவில் ஷைத்தான்கள் பரவுகின்றன என்பதன் மூலம் குறிப்பிடப் படுவது ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தான்கள் அல்ல. மாறாக இரவு படரும் நேரங்களில் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறிப் பூமியில் பரவும் பாம்பு போன்ற விஷ ஜந்துகளைத் தான் இதிலிருக்கும் ஷைத்தான் எனும் பதம் குறிக்கிறது. அரபு மொழிவழக்கில் தீங்கிழைக்கக் கூடியவற்றுக்குப் பொதுவாக ஷைத்தான்கள் என்று கூறப்படுவதுண்டு. இந்த அர்த்தத்திலேயே இங்கும் கூறப்பட்டுள்ளது. ஜின்களின் தீங்கிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இங்கு எதுவும் கூறப்படவுமில்லை; ஜின்களால் அவ்வாறான பௌதீக ரீதியிலான எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவும் முடியாது.”
பகுத்தறிவு வாதிகளின் இந்த வாதமும், விளக்கமும் பக்கச்சார்பானது; அறிவீனம் மிக்கது; அரைகுறை ஆய்வின் அடிப்படையிலானது. இதை நாம் பின்வரும் ஆதாரங்கள் மூலம் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
ஆதாரம் 2: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவித்ததாவது: இரவில் உங்கள் பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளின் வாயைக் கட்டி வையுங்கள். மேலும், உங்கள் கதவுகளை மூடி விடுங்கள். உங்கள் பிள்ளைகளை உங்கள் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இந்த நேரங்களில் பூமியில் பரவித் திரியும் ஜின்கள் (கையில் அகப்படுவதை) அள்ளிக் கொண்டு சென்று விடுவதுண்டு. நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், விஷமம் பன்னக் கூடியவைகள் (எலி போன்றவை) விளக்கின் திரிகளை இழுத்துச் சென்று வீடுகளில் குடியிருப்போரை எரித்து விடலாம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவராகிய “அத்தா” என்பவர், “ஜின்கள்” என்பதற்குப் பதிலாக இன்னோர் அறிவிப்பில் “ஷைத்தான்கள்” என்றும் கூறியுள்ளார். (ஸஹீஹுல் புகாரி: பாடம் 59, ஹதீஸ் 122)
இந்த ஹதீஸைப் பார்க்கும் போதே நமக்கு உண்மை புலப்பட்டு விடுகிறது. பகுத்தறிவாளர்கள் கூறுவது போல் மாலை நேரத்தில் வெளியில் பரவித் திரிவதாகக் கூறப் பட்டிருப்பது பாம்பு போன்ற விஷ ஜந்துகளை அல்ல; மாறாக ஜின்களைத் தான் என்பது இங்கு வெட்டவெளிச்சமாகி விடுகிறது. ஏனெனில், இந்த ஹதீஸின் அரபு வாசகத்தில் “ஜின்கள்” எனும் நேரடிச் சொல் தான் கையாளப் பட்டுள்ளது.
மேலும், பிள்ளைகளை வெளியில் விடாமல் பக்கத்தில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்கான காரணத்தைக் கூட இந்த ஹதீஸில், “ஜின்கள் அள்ளிக் கொண்டு சென்று விடுவதுண்டு” என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. அதாவது, முன்னிரவு நேரங்களில் வெளியில் சிறு பிள்ளைகள் தனியாக விடப்பட்டிருந்தால், அவர்களை ஜின்கள் கடத்திக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு எனும் காரணம் கூட இங்கு கூறப்பட்டுள்ளது.
மேலும், பகுத்தறிவு வாதிகளின் அரைகுறை வாதங்களுக்குச் சாட்டையடி கொடுப்பது போல் இந்த ஹதீஸில், ஜின்களைப் பெயர் குறிப்பிட்டுத் தனியாகவும், எலிகள் போன்ற தீங்கிழைக்கக் கூடிய உயிரினங்களைத் தனியாகவும் வகை பிரித்து நபியவர்கள் சொல்லியிருப்பதையும் பார்க்க முடிகிறது.
இதிலிருந்து, நபியவர்கள் மாலை நேரங்களில் கதவை மூடச் சொன்னதற்கும், பிள்ளைகளை வெளியில் தனியாக விட வேண்டாமென்று சொன்னதற்குமான காரணம், அந்த நேரங்களில் பூமியில் பரவித் திரியும் ஜின்களின் தீங்குகளிலிருந்து சிறுபிள்ளைகளைப் பாதுகாக்கவே எனும் உண்மை நமக்கு இலகுவாகப் புரிகிறது. இந்த உண்மையை இன்னும் ஆணித்தரமாக நிரூபிக்கும் விதமாகப் பின்வரும் ஆதாரம் அமைந்திருப்பதையும் பார்க்கலாம்:
ஆதாரம் 3: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவித்ததாவது: இருள் பரவத் தொடங்கும் போது, அல்லது (முஸத்ததின் அறிவிப்பின் படி) மாலை நேரத்தின் போது உங்கள் பிள்ளைகளைக் கூடவே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், வெளியில் சுற்றித்திரியும் ஜின்கள் அவர்களைக் கடத்திக் கொண்டு சென்று விடலாம். ஸுனன் அபூதாவூத்: பாடம் 27, ஹதீஸ் 65 தரம்: ஸஹீஹ் (அல்பானி)
இந்த ஹதீஸிலும், வெளியில் சுற்றித் திரிபவை பற்றிக் குறிப்பிட “ஜின்கள்” எனும் நேரடிப் பதமே கையாளப் பட்டுள்ளது. மேலும், இங்கு ஜின்கள் பிள்ளைகளைப் பிடிப்பதைக் குறிப்பிட “ஃக த ஃப” எனும் அரபுப் பதமே கையாளப் பட்டுள்ளது. இந்தப் பதத்தின் நேரடி அர்த்தமே “கடத்திச் செல்லுதல்” / “ஆள் கடத்தல்” / “பலவந்தமாகத் தூக்கிச் செல்லுதல்” என்பது தான்.
ஆக, இந்தச் செய்தியானது ஜின்கள் சிறுபிள்ளைகளைக் கடத்திச் செல்லலாம் என்பதையே கூறுகிறது என்பது இந்த ஹதீஸ் மூலம் இன்னும் உறுதியாகிறது.
ஆனால், நமது வாதத்தை முழுமையாக ஊர்ஜிதப் படுத்த இந்த ஆதாரங்கள் மட்டும் போதுமா? ஏனெனில், இந்தச் செய்திகளெல்லாம் சிறு பிள்ளைகளை ஜின்கள் கடத்துவது பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றன. வளர்ந்த மனிதர்களை ஜின்கள் கடத்தலாம் என்பதற்கு இதை எப்படி ஆதாரமாக எடுப்பது? இப்படியொரு கேள்வி முன்வைக்கப் பட்டால், அதற்குப் பதிலளிக்கும் விதமாக இன்னும் ஏதாவதோர் ஆதாரமும் மேலதிகமாக இருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். அதன் மூலம் நமது வாதம் அசைக்க முடியாதவாறு நிரூபணமாகி விடும். இனி அவ்வாறான மேலும் சில ஆதாரங்களைப் பார்க்கலாம்:
ஆதாரம் 4: அரபு மொழி வழக்கில் மூடநம்பிக்கை சார்ந்த செய்திகள் / நம்ப முடியாத கதைகள் / யதார்த்தத்துக்கு ஒத்துவராத செய்திகள் போன்றவற்றைக் குறிப்பிடுவதற்கு “ஃகுராஃபா” எனும் சொல் உபயோகிக்கப் படுவதுண்டு. இது தொன்று தொட்டு அரபுகளிடம் வழக்கிலிருக்கும் ஒரு சொல்.
உதாரணத்துக்கு யாராவது ஒருவர், கொஞ்சம் கூட நம்ப முடியாத, அறிவுக்குப் பொருந்தாத ஒரு செய்தியைச் சொன்னால், அந்தச் செய்தியைக் கேட்கும் அரபுகள், அதை உண்மைக்கு மாற்றமான கட்டுக்கதை என்று கருதினால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதை “ஃகுராஃபா” என்று அழைப்பதுண்டு.
“ஃகுராஃபா” எனும் இந்தச் சொல்லுக்கு இந்த அர்த்தம் எப்படி உருவானது என்பதை நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை விளக்கிக் கூறிய ஒரு செய்தியே பின்வரும் ஹதீஸ்:
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்த செய்தி: ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தவர்களோடு அமர்ந்திருக்கையில், (நம்புவதற்குக் கடினமான) ஒரு செய்தியைக் கூறினார்கள். அப்போது பெண்களுள் ஒருவர், “இந்தச் செய்தி ஃகுராஃபா கதைகளைப் போல் (நம்ப முடியாத கதை போல்) அல்லவா இருக்கிறது?” என்று நபியவர்களைப் பார்த்துக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஃகுராஃபா பற்றிய உண்மைக் கதை என்னவென்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டு விட்டுத் தொடர்ந்து கூறினார்கள்: “ஃகுராஃபா என்பது பனூ உத்ரா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதரின் பெயர். அவரை ஒருமுறை ஜின்கள் கடத்திச் சென்று விட்டார்கள். கடத்திச் சென்ற ஜின்கள் அவரைச் சில காலம் தம்மோடு வைத்துக் கொண்டார்கள். பிறகு அவரை மீண்டும் மக்களிடம் விட்டு விட்டுச் சென்றார்கள். அங்கு (ஜின்களோடு) தங்கியிருந்த போது நடந்த பல விசித்திரமான நிகழ்வுகளைப் பற்றி அவர் மக்களுக்குக் கூறினார். மக்கள் அதைக் கேட்டு (நம்ப முடியாமல்) ஆச்சரியமடைந்தனர். இது முதல், ஆச்சரியப்படத்தக்க கதைகளுக்கெல்லாம் ஃகுராஃபாவின் கதைகள் என்று கூறுவதை மக்கள் பிற்காலத்தில் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.” ஷமாஇல் முஹம்மதியா (திர்மிதி): பாடம் 38, ஹதீஸ் 252
ஜின்கள் மனிதர்களைக் கடத்திச் செல்வதென்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு வழக்கம் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஹதீஸ் ஒன்றே போதுமானது. இருந்த போதும், இதை இன்னும் உறுதிப்படுத்தும் இன்னோர் ஆதாரத்தையும் பார்க்கலாம்:
ஆதாரம் 5: அப்துர் ரஹ்மான் இப்னு அபூ லைலா அறிவித்த செய்தி:
(உமர் (ரழி) அவர்கள் கலீஃபாவாக இருந்த காலத்தில்) அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் ஒரு நாள் இரவு இஷா தொழுகைக்காக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றார். இவ்வாறு சென்றவரை சில ஜின்கள் கடத்திக் கொண்டு சென்று விட்டனர். அன்றிரவு அவர் வீடு திரும்பவேயில்லை. எல்லா இடங்களிலும் அவரைத் தேடிப் பார்த்து விட்டு, இறுதியில் அவரது மனைவி அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்களிடம் சென்று, (தன் கணவர் தொலைந்து போனதைப் பற்றி) முறையிட்டாள்.
உடனே உமர் (ரழி) அவர்கள் அந்த மனிதரைப் பற்றி (வேறு பலரிடமும்) விசாரித்தார்கள். விசாரித்த அனைவரும், அந்த மனிதர் இஷா தொழுகைக்காக வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பவில்லை என்றே சாட்சி கூறினார்கள். இறுதியில் உமர் (ரழி) அவர்கள் (இந்தப் பிரச்சினைக்குத் தீர்ப்புக் கூறும் போது) அந்தப் பெண்ணிடம் இன்னும் நான்கு வருடங்கள் அந்த மனிதர் திரும்பி வருவாரா என்று காத்திருக்குமாறு தீர்ப்புக் கூறினார்கள்.
நான்கு வருடங்கள் கடந்த பிறகு மீண்டும் அந்தப் பெண் உமர் (ரழி) அவர்களிடம் சென்று (தனது கணவர் இன்னும் திரும்பவில்லை என்று) கூறினாள். உடனே உமர் (ரழி) அவர்கள் (மீண்டும் மக்களிடம்) இது குறித்து விசாரிக்க, அவர்களும் அந்தப் பெண்ணின் கூற்றை உண்மைப் படுத்தினர். (தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட) உமர் (ரழி) அவர்கள் அந்தப் பெண் விரும்பினால் இப்போது வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கினார்கள். அவ்வாறே அந்தப் பெண்ணும் வேறொரு திருமணம் செய்து கொண்டாள்.
ஆனால், (நான்கு ஆண்டுகள் கழித்து, திருமணம் எல்லாம் முடிந்த பின்) அவளது பழைய கணவர் (தொலைந்து போனவர்) திரும்பி வந்ததும் பிரச்சினை ஏற்படவே, அவர் (தனது மனைவி இன்னொருவரைத் திருமணம் முடித்திருப்பதைக் குறித்து) உமர் (ரழி) அவர்களிடம் வந்து முறையிட்டார். அதற்கு உமர் (ரழி) அவர்கள், “உங்களில் ஒருவர் பல வருடங்கள் காணாமல் போய் விடுகிறார். அவரது குடும்பத்துக்கோ அவர் உயிரோடிருக்கிறாரா? இறந்து விட்டாரா என்பது கூட தெரியாது. (பிறகு தொலைந்து போனவர் திரும்பி வந்து நீதி கேட்கிறார்)” என்று கூறினார்கள். அதற்கு அந்த மனிதர் “முஃமின்களின் தலைவரே, எனது தலைமறைவுக்கு ஒரு நியாயமான காரணம் உள்ளது” என்று கூறினார். அதற்கு உமர் (ரழி) அவர்கள், “உமது காரணம் தான் என்ன?” என்று வினவினார்கள். அதற்கு அந்த மனிதர் பின்வருமாறு பதில் கூறினார்:
“ஒரு நாள் இரவு, இஷா தொழுகையை நிறைவேற்றும் நோக்கத்தோடு நான் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றேன். ஆனால், சில ஜின்கள் என்னைக் கைப்பற்றிக் கொண்டு சென்று விட்டனர். மேலும், நான் (சிறைக் கைதியைப் போல்) நீண்ட காலம் அவர்களுடன் தடுத்து வைக்கப் பட்டிருந்தேன். பிறகு சில முஃமினான ஜின்கள் (அல்லது முஸ்லிமான ஜின்கள்) – (அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸஈத், சரியான வார்த்தை முஃமினா? அல்லது முஸ்லிமா? என்பது தனக்குச் சரியாக ஞாபகமில்லையென்று கூறினார்) இந்த ஜின்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர். இவர்களை வெற்றி கொண்ட அந்த நல்ல ஜின்கள், அனைவரையும் சிறைப் பிடித்தார்கள்.
சிறைப்பிடிக்கப் பட்டவர்களோடு இருந்த என்னைக் கண்டதும் அவர்கள், “நீங்கள் மனித இனத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிமாக இருக்கிறீர்கள். உங்களைச் சிறைப்பிடித்து வைத்துக் கொள்வதற்கு எமக்கு அனுமதியில்லை.” என்று கூறினார்கள். பிறகு, நான் விரும்பினால் அவர்களோடு தொடர்ந்தும் இருக்கலாம்; அல்லது எனது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்ல விரும்பினால், திரும்பிச் செல்லலாம் என்று கூறினார்கள். நான் எனது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்ல வேண்டுமென்றேன். உடனே அவர்கள் என்னையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டார்கள். (பிரயாணத்தின் போது) இரவுப் பொழுதுகளில் அவர்களில் எவரும் என்னோடு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், பகல் பொழுதுகளில், நான் பின்தொடர்ந்து கொண்டே வரும் விதமாக ஒரு குச்சி (என்னை வழிநடத்திக் கொண்டே) இருந்தது.”
இந்தக் கதையைக் கேட்ட உமர் (ரழி) அவர்கள், “அவர்களோடு நீர் தங்கியிருந்த போது உமது உணவு என்னவாக இருந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் “சிரமமான உணவாகவும், அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத உணவாகவுமே அது இருந்தது” என்று பதிலளித்தார். மீண்டும் உமர் (ரழி) அவர்கள், “அவர்களோடு நீர் தங்கியிருந்த போது பானமாக எதை அருந்தினீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “ ‘அல் ஜதாஃப்’ (அழுகிப் போகாத ஒருவகையான பானம்)” என்று பதிலளித்தார்.
(இறுதியில்) உமர் (ரழி) அவர்கள், அந்த மனிதரிடம் “நீர் விரும்பினால், உமது மஹர் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்வதன் மூலம் முறிந்த இந்தத் திருமண உறவை முறிந்ததாகவே ஆக்கிக் கொள்ளலாம். அல்லது விரும்பினால், உமது மனைவியை நீர் மீளப் பெறலாம்” என்று தீர்ப்பளித்தார்கள். - பைஹக்கி, ஸுனன் அல் குப்ரா: 7 / 445, 446 மேலும் இந்தச் செய்தி, “மனார் அல் ஸபீல்” (2 / 88) இலும் பதிவாகியுள்ளது. (“இர்வா உல் ஃஹலீல்” (Irwa Al Ghalil) (4 / 151 – இல.1709) இல், இந்தச் செய்தி “ஸஹீஹ்” ஆன அறிவிப்பு என்று ஷெய்ஹ் அல்பானி (ரஹ்) அவர்களால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.)
இந்தச் சம்பவத்தில் உமர் (ரழி) அவர்கள் நடந்து கொண்ட விதமே நம்மை அதிகம் சிந்திக்கத் தூண்டுகிறது. பொதுவாக, உமர் (ரழி) அவர்களது குணாதிசயம் பற்றி நாமெல்லோரும் அறிவோம். வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகவே பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும் சுபாவம் உடையவர் உமர் (ரழி) அவர்கள். மேலும், நீதி / நேர்மை என்று வரும் போது மிகவும் கண்டிப்போடும், நுணுக்கத்தோடும் நடந்து கொள்பவர்கள்.
யாரிடம் வாலாட்டினாலும், உமர் (ரழி) அவர்களிடம் வாலாட்ட எவருமே துணிவதில்லை. அந்த அளவுக்கு விவரமானவரும் கண்டிப்பானவருமே உமர் (ரழி) அவர்கள். ஷைத்தானே உமர் (ரழி) அவர்களைக் கண்டால், அஞ்சி, வேறு தெருவுக்கு ஓடுவதாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துப் பேசியிருப்பதிலிருந்து, அன்னாரின் சுபாவம் எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இப்பேர்ப்பட்ட உமர் (ரழி) அவர்கள் கலீஃபாவாக இருக்கும் போது தான் இந்த அன்ஸாரி மனிதர் வந்து, தன்னை ஜின்கள் கடத்திச் சென்றதாகக் கூறியிருக்கிறார். இதை இந்த மனிதராக இட்டுக்கட்டிச் சொல்லியிருந்தால், அதை யாரிடம் கூறினாலும், உமர் (ரழி) அவர்கள் முகத்தை பார்த்துக் கூறுவதென்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத காரியம். உமர் (ரழி) அவர்களது புத்திக் கூர்மைக்கு முன்னால், அந்தக் கட்டுக்கதையைச் சொன்னவன் ஒரு நொடியில் மாட்டிக் கொண்டிருப்பான். மேலும், இவ்வாறு மனிதர்களை ஜின்கள் கடத்திச் செல்வது என்பதெல்லாம் இஸ்லாத்தின் நம்பிக்கைப் பிரகாரம் சாத்தியமே இல்லையென்றிருந்தால், இந்தக் கதையைச் சொன்ன அந்த மனிதர் உமர் (ரழி) அவர்களிடம் அங்கேயே மிதி வாங்கியிருப்பார். “யாரிடம் வந்து கதை அளக்கிறாய்? ஜின்களாவது மனிதர்களைக் கடத்துவதாவது..” என்று கூறி, அந்த மனிதரின் இடுப்பெலும்பை அன்றே ஒடித்திருப்பார்கள்.
ஆனால், அப்படியெதுவுமே இங்கு நடக்கவில்லை. அந்த மனிதர் சொன்ன கதையைக் கேட்டு உமர் (ரழி) அவர்கள் ஆச்சரியப் படவே இல்லை. முழுக் கதையையும் பொறுமையோடு கேட்டு முடித்த பின், திருப்பி அவரிடம் கேட்டதோ, “ஜின்களோடு இருந்த காலங்களில் என்ன சாப்பிட்டீர்? என்ன பருகினீர்?” எனும் இரண்டு கேள்விகளை மட்டுமே. அந்தக் கேள்விகளுக்குரிய பதில்களை அந்த மனிதர் சொன்னதோடு உமர் (ரழி) அவர்கள் அந்த மனிதரின் கதையை முழுமையாக நம்பி ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அவருக்கு சார்பாகத் தீர்ப்பும் வழங்கியிருக்கிறார்கள்.
நீதி செலுத்தும் போது எந்தவொரு மனிதருக்கும் அணுவளவு கூட பாரபட்சம் காட்டாத, உண்மைகளைக் கண்டுபிடித்து, நீதி செலுத்தும் நுணுக்கத்தில் இன்றைய உலகைக் கூட பிரமிக்கச் செய்த மாபெரும் தலைவரான உமர் (ரழி) அவர்கள், இப்படி ஒரு மனிதர் கூறிய நிரூபிக்க முடியாத ஒரு கூற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு, தீர்ப்பும் வழங்கினார்கள் என்றால், ஜின்கள் மனிதர்களைக் கடத்திச் செல்வது குறித்த அறிவு ஏற்கனவே உமர் (ரழி) அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் இப்படி நடந்து கொண்டிருக்கவே மாட்டார்கள்.
அதாவது, ஜின்களால் மனிதர்களைக் கடத்திச் செல்ல முடியும் என்பது இஸ்லாத்தின் பார்வையில் ஒன்றும் புதிய கருத்து அல்ல; ஏற்கனவே மார்க்கத்தின் பார்வையில் அது சரிகாணப்பட்ட அம்சம் என்பதை அறிந்திருந்ததால் தான் இந்த வழக்கில் தீர்ப்புக் கூறும் போது உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஏற்கனவே நாம் பார்த்த ஹதீஸ் ஆதாரங்களோடு இந்தச் சம்பவத்தையும் இணைத்துப் பார்க்கும் போது, சந்தேகத்துக்கே இடமில்லாதவாறு நமது வாதம் இங்கு நிரூபணமாகிறது. அதாவது, மனிதர்களை ஜின்கள் கடத்திச் செல்வதென்பது ஒன்றும் அதிசயம் அல்ல; காலாகாலமாகத் திரைமறைவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு யதார்த்தமே இது என்பதை மார்க்கம் கூட அங்கீகரிக்கிறது என்பதை இங்கு உறுதிப் படுத்திக் கொண்டோம். இனி இன் ஷா அல்லாஹ் இன்னொரு கேள்விக்கான விடையை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
|