பரிவாரத்தின் கொள்கைக்கு ஒவ்வாத பார்வை கொண்ட வர்களையும் சொந்தம் கொண்டாட அவை தயங்கவில்லை. தொடக்கத்தில் வரலாற்றில் அவர்களது கவனம் பண்டைய இந்தியாவிலும் மத்திய கால இந்தியாவிலும் இருந்தது. இப்போது தங்கள் ‘வரலாற்றுப் போர்’களின் மையத்தைச் சற்றே சமீபத்திய காலத்துக்கு நகர்த்தியிருக்கிறார்கள். குறிப்பாக, தேசியவாத மரபு, சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியல் சட்ட உருவாக்கம் ஆகியவற்றின் காலத்துக்கு!
2014 மக்களவைத் தேர்தல் முதலே இந்தியாவின் அரசியல் சூழலில் இதுபோன்ற முக்கிய மாற்றங்கள் தொடங்கிவிட்டன. சுதந்திரப் போராட்டம் தொடங்கி, பல விஷயங்கள் தொடர்பான தேசியக் கருத்துகளுக்குப் புதுவிளக்கம் கொடுப்பதிலும் மாற்றுவதிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். இது சுதந்திரப் போராட்டக் களத்
திலும், இந்தியா எனும் கருத்தாக்கத்துக்கான கட்டுமானத்
திலும் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக் கொள்வதற் கான நேரடி முயற்சியும்கூட. மக்களவைத் தேர்தலில் வெற்றி
பெற்ற பின்னர், மத்திய அரசில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை, நவீன இந்திய வரலாற்றை மிகுந்த கவனத்துடன் மீட்டுருவாக்கம் செய்யும் வேலைகளுக்கு சங்கப் பரிவாரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.
கவனமான மீட்டுருவாக்கம்
இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான சுதந்திரப் போராட்டத்துக்குப் பல இழைகள் உண்டு. கம்யூனிஸ்ட்டுகள், சோஷலிஸ்ட்டுகள், பழமைவாதிகள் என்று பல அமைப்பினரும் இதில் அடக்கம். ஆனால், ஆர்.எஸ்.எஸ்-க்கு இதில் பங்கே இல்லை. “பிரிட்டிஷாருக்கு எதிரான எந்த ஒரு இயக்கத்துடனும் ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் இணையவில்லை. மறுபுறம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஷாகாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் ஈடுபட்டிருந்தார்கள். உடற்பயிற்சி மையங்களில் புரட்சிகரமான சதித் திட்டங்கள் நடப்பதாகச் சின்னதாகச் சந்தேகம் எழுந்தாலும் அவற்றை நசுக்கியெறிந்தது பிரிட்டிஷ் அரசு. ஆனால், ஷாகாக்களில் நடந்துவந்த சண்டைப் பயிற்சியைத் தடை செய்ய பிரிட்டிஷ் அரசு முயற்சி செய்யாதது, காலனி ஆதிக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்கிறது” என்கிறார் வரலாற்றாசிரியர் தனிகா சர்க்கார்.
அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளையொட்டி நடந்த நாடாளுமன்ற விவாதங்களின்போது, சுதந்திரப் போராட்டத்தில் சங்கப் பரிவாரங்கள் இடம்பெறாதது தொடர்பாகத் தொடர்ந்து பேசப்பட்டது. தங்களுக்குச் சொந்தமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும்படியான சுதந்திரப் போராட்ட வீரர்கள் பாஜகவிடம் இல்லாததைப் பற்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் பரிகாசம் செய்தனர். தற்போது சுதந்திரப் போராட்டத்தில் தாங்கள் இடம்பெறாததால், நவீன தேசியத் தலைவர்களைச் சொந்தம் கொண்டாடுவதிலும், தங்கள் அரசியல் மற்றும் சித்தாந்தத்துடன் வரலாற்று ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லாத அரசியல் ஆளுமைகளைச் சுவீகரித்துக்கொள்வதிலும் வலதுசாரிகள் மும்முரமாக இருக்கிறார்கள். மகாத்மா காந்தி, வல்லபபாய் படேல், அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களைத் தற்போது சொந்தம் கொண்டாடும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள்.
போலி அறச் சீற்றம்
தேசிய இயக்கம் தொடர்பான விரிவான வரலாற்றைப் பற்றி, ‘இந்தியாஸ் ஸ்ட்ரகிள் ஃபார் இண்டிபெண்டன்ஸ்’ என்ற தலைப்பில் வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான பிபின் சந்திரா, தனது சக ஊழியர்களுடன் இணைந்து எழுதிய நூல் தொடர்பாக சங்கப் பரிவாரங்கள் போலியாக உருவாக்கி வரும் கோபம் சமீபத்திய உதாரணம். இந்திய சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகம் செய்த பகத் சிங்கையும் அவரது தோழர்களையும் ‘புரட்சிகர பயங்கரவாதிகள்’என்று அந்நூலில் குறிப்பிடப்பட்டிருப்பதை இவர்கள் ஆட்சேபிக்கிறார்கள். ‘பயங்கரவாதிகள்’எனும் பதத்தில் இந்த ‘பிற்காலத்திய தேசியவாதிகள்’குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். நாயக அந்தஸ்து கொண்ட தேசியத் தலைவர்களின் நடவடிக் கைகளைப் பற்றி எழுதும்போது இப்படிப்பட்ட பதங் களைப் பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள். பிபின் சந்திராவுடன் இணைந்து இந்நூலை எழுதியிருக்கும் ஆசிரியர்கள் சொல்வதுபடி, ‘பயங்கரவாதி’எனும் வார்த்தை தனியாகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, ‘புரட்சிகரப் பயங்கரவாதிகள்’ என்றுதான் எழுதப்பட்டி ருக்கிறது. தங்கள் கருத்துகள், வழிமுறைகள் மற்றும்
வியூகங்களைப் பற்றி விவாதிக்க இந்த வார்த்தை களை பகத் சிங்கும் அவரது தோழர்களுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, கருத்தாக்கங்கள், வார்த்தைகள், அவற்றின் அர்த்தங்கள், சித்தாந் தங்கள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டேவருகின்றன.
மேலே குறிப்பிட்ட மகாத்மா காந்தி, வல்லபபாய் படேல், அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற எல்லாத் தலைவர்களுக்கு இடையேயும் தீவிரமான கருத்து முரண்பாடுகள் இருந்தன. ஆனால், ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், சாதி, பாலினம், சமூகம் முதல் சுதந்திரம், சமத்துவம், நீதி வரையிலான பல்வேறு கருத்துகளில் சங்கப் பரிவாரங்களுக்கு முரணான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள். எனவே, நாம் இன்றைக்குக் காண்பதெல்லாம் சுதந்திரப் போராட்ட இயக்க வரலாற்றிலிருந்து குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அம்சங்களைப் பயன்படுத்தி, பாஜகவுக்கும் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கும் இடையே ஒரு
தொடர்பு இருப்பதாக நிறுவ மேற்கொள்ளப்படும் முயற்சிகள்தான்.
அம்பேத்கரைச் சொந்தம் கொண்டாட சங்கப் பரிவாரங்கள் உக்கிரமாகச் செயல்படுவது கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். தலித் ஓட்டுக்களைப் பெறுவதையும் தாண்டிய விஷயம் இது. பெரும் பாலான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகளும் தலைவர்களும் அரசியல் சட்ட உருவாக்கத்திலோ சுதந்திரத்
துக்குப் பிறகான இந்தியா தொடர்பான கருத் தாக்கத்தைப் பற்றிப் பேசுவதிலோ எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. அரசியல் சட்டத்தை வடிவமைப்பதில் தாங்கள் பங்கு வகிக்காததால், அதை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய அம்பேத்கருடனான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள்.
என்ன செய்திருக்கிறார்கள்?
இதுபோன்ற மீள்கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படு வதன் காரணம் என்ன? இதற்கான இயல்பான பதில்களில் ஒன்று, தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் வலதுசாரிகளின் பங்கு குறைவு என்பதுதான். நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் ஆழ்ந்த முத்திரையைப் பதித்த தேசிய ஆளுமைகளுடனான தொடர்பு இல்லை
என்றால், பரந்த அளவிலான அரசியல், குறிப்பாகத் தேசியவாத அரசியலைக் கையாள்வது கஷ்டம். வலதுசாரிகளைப் பொறுத்தவரை பரந்த அளவிலான அரசியலுக்குத் தேவையான அளவிலான சொந்த சித்தாந்தச் சரக்கு கம்மி. தொண்ணூறுகளின் தொடக் கத்தில் அயோத்தியா இயக்கத்தில் அவர்கள் ஈடுபட் டதை வேண்டுமானால் விதிவிலக்காகச் சொல்லலாம்!
உண்மையில், வரலாற்றுத் தலைவர்களைச் சொந்தம் கொண்டாடுவது என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. இது எந்த அளவுக்கு வெற்றியைத் தரும் என்றும் புரியவில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பன்முகத்தன்மை, அக்காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பிரச்சாரக் கூட்டங்கள், போராட்டங்கள் போன்றவை சக்திவாய்ந்த நிகழ்வுகள். ஒற்றைத் தன்மை கொண்ட சிந்தனை, குறுகிய எண்ணம் கொண்ட அரசியல் ஆகியவற்றால் சுதந்திரப் போராட்டத்துடன் ஒருபோதும் பொருந்திப்போக முடியாது. காலனியாதிக்கத்துக்கு எதிரான தேசியவாதத்துக்குப் பதிலாக, இந்து தேசியவாதத்தின் கருத்தைக் கொண்டுவர முயற்சிப்பதில் வலதுசாரிகள் வெற்றிபெறப் போவதில்லை.
இதுவரை அவர்களுக்குக் கிடைத்திருப்பதெல்லாம் எதிர்மறையான விளைவுகளே. என்னுடன் பணிபுரி யும் நண்பர் பொருத்தமாக ஒரு விஷயம் சொன் னார். “அவர்கள் (வலதுசாரிகள்) புத்தகம் எழுதுவ தில்லை. மாறாக புத்தக விற்பனையையும் விநியோ கத்தையும் தடுத்து நிறுத்துகிறார்கள். அவர்கள் திரைப்படங்களையோ, ஆவணப்படங்களையோ தயாரிப்ப தில்லை; ஆனால், அவற்றைத் தணிக்கை செய்கிறார் கள். அவர்கள் ஜே.என்.யு. போன்ற கல்வி நிறுவ னங்களை உருவாக்குவதில்லை; அவற்றை அழிக்கிறார்கள். அவர்கள் புதிய தேசியவாதக் கருத்தை வழங்கவில்லை. அதே வார்த்தையை (தேசியவாதம்) பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், அதற்கு முற்றிலும் வேறு அர்த்தத்தை வழங்குகிறார்கள்”!
- ஸோயா ஹஸன், ஜவாஹர்லால் நேரு
பல்கலைக்கழகப் பேராசிரியை.
‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்
Thanks: http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8608132.ece