நம்பியாற்று நினைவுகள்....
எல்லா ஆறுகளும்.. கடலில் சேருமாம்…. ஊரின் எல்லா வீதிகளும்… ஆற்றையே சேர்ந்தன.. இன்று வாலில்லா பட்டங்களாகவே.. ஆறில்லா தெருமுனைகள்.. ……. கரையோரப் பாறைகளில் ஆறுவரைந்த ஓவியங்கள்.. காட்டாற்று வெள்ளம் பற்றி கதை சொல்லும் காவியங்கள்..
சண்டையிட்ட குடும்பங்கள்.. தவறி விழுந்த துணிகளை மீட்டெடுத்து கொடுத்த சாக்கில் உறவுகளை கழுவித் துவைத்து உடுத்தச் செய்த படித்துறைகள்
ஆற்று மீன்களின் கணக்கெடுப்புகளில் பள்ளிக் கூட களவடிப்புகள்..
உற்றுக் குழிமேல் ஆமணக்கு இலை பரப்பி..மணல் நிரப்பி அக்கரைக்கு செல்லும்.. தயிர்காரியின் பாதம் படுவதற்காய் தவமிருந்த தருணங்கள்..
குர்பானி செம்மறியுடன் குளித்தெழுந்து..ஈரக் கயிற்றோடு… வெயில் மேய்ந்த.. நாட்கள்….
அவ்வளவு எளிதில் உலர்ந்து போவதில்லை எங்கள் ஈரச்சாரங்கள்..
கூடு சந்திக்கும் மாத்த்தில் நீர்க்குள்ளே விழாக் கோலம் ஆனை குளித்த ஆறன்றோ..
கரை நெடுகில் தோப்புகள்தான் சாரம் நிறைத்த புளியங்காயோ நெல்லிக்காயோ புளித்துப் போன நினைவுகளல்ல..
பாசிகளும் புதர்களும்.. பரவிக் கிடப்பது ஆற்றில் மட்டுமா???? ஆம் நாகரீகங்களை.. ஆறுகளே எழுதுகின்றன.. இன்றும்..கூட
ஆறுகளுடனே தான்.. எங்கள் வாழ்க்கைத் தடங்கள்.. அடுத்த தலைமுறைக்கோ ஆறுகளென்பதே.. கழிவுநீரின் வழித்தடங்கள்..
அத்தனை நினைவுகளையும்.. ஆற்றோடு கொட்டிவிட்டேன்.. என்ன செய்தாய் .. ஆற்றை என.. என் பிள்ளைகள் கேட்குமுன்….
கவிதை சிந்தா.... Sindha Mathar |