ரா_பிரபு
பாகம்:20 : 'மர்மங்கள் முடிவதில்லை (இறுதி பாகம்)
இக்கட்டுரையின் ஆரம்ப அத்தியாயத்தை நான் பூமி எனும் மர்ம கிரகம் என்று தொடங்கி இருந்தேன். 'அதை பற்றி கடைசி அத்தியாயத்தில் தொடர்கிறேன் 'என்று சொல்லி நிறுத்தி இருந்தேன். ஆம் இது நாம் அவ்வபோது கண்டுபிடிக்கும் பல கெப்ளர் கிரகங்களை விட மிக மிக அபூர்வமான ஒரு மர்ம கிரகம் தான் . சுற்றி பல கிலோமீட்டருக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தகிக்கும் மணல் நிரம்பிய பாலைவனதில் நடுவே ஒரே ஒரு ஒற்றை ரோஜா பூத்திருப்பதை போல "Observable univerce " என்று சொல்ல கூடிய 9300 கோடி ஒளி ஆண்டுகள் அளவு பரவிய பாலைவனத்தில் ஒற்றை ரோஜாவாய் நீரும் ,காற்றும், பசுமையும் விலங்குகளையும் பறவைகளையும் ,உங்களையும் என்னையும் கொண்ட ஒரு உயிருள்ள கிரகமாக பூமி இருப்பது மிக பெரிய மர்மங்களிலும் மர்மம். கிட்ட தட்ட 50... 55 வருடங்களாக தேடி கொண்டிருக்கின்றோம் . இவ்ளோ தூரத்துக்கு ஒருத்தன் கூடவா துணைக்கு இல்லை ??
இதை பற்றி பல கோட்பாடுகள் உண்டு அதில் Fermi paradox கள் மிக பிரபலம். இந்த தலைப்பை பற்றி பல பேர் பல கருத்துக்கள் சொல்லி இருந்தாலும் இப்போது நாம் குறிப்பாக Fermi யை நாடுவதற்கு காரணம் உண்டு. அதை அறிய முதலில் fermi பற்றி 4 வரிகள் தெரிந்து கொள்வோம்.
இவர் ஒரு Italian-American physicist . முழு பெயர் Enrico Fermi. statistical mechanics இல் புகழ் பெற்ற இவர் தான் நியூட்ரினோவின் இருப்பை பற்றி முதலில் எடுத்து சொன்னவர். உலகின் முதல் நியூக்ளியர் ரியாக்டரை கட்டமைத்தது வேறு யாரும் அல்ல இவர் தான். மேலும் "manhattan project " பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள் அதாவது முதல் அணுகுண்டு உருவாக்கம் அதிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1938 நோபல் பரிசை பெற்ற விஞ்ஞானி இவர். இவரிடம் ஒரு தனி தன்மை இருந்தது அதாவது சின்ன சின்ன நடைமுறை டேட்டாகளை வைத்து பெரிய பெரிய விஷயங்களை கணிபதில் கில்லாடி.
உதாரணமாக முதல் அணுகுண்டு சோதனையின் போது அதன் சக்தி என்னவாக இருந்தது என்பதை பிற்பாடு நிறைய ஆய்வுகள் எல்லாம் செய்து பார்த்து சொன்னார்கள் ஆனால் வெடி நடந்த நேரத்தில் fermi காற்றில் சில சின்ன சின்ன துண்டு காகிதங்களை பறக்க விட்டு வேடிக்கை பார்த்து விட்டு அது காற்றில் பயணிக்கும் தூரத்தை வைத்து காற்று அழுத்தம் மாறுபாட்டையும் அதன் மூலம் வெடிப்பின் சக்தியையும் கிட்ட தட்ட சரியாக அப்போதே ஆய்வுகள் ஏதும் இன்றி சொன்னார்.
அப்படி பட்டவர் 1950 இல் இந்த பிரபஞ்சத்தில் நாம் நோக்கி இன்று வரை நாம் அறிய கிடைத்த தகவலை வைத்து சொன்ன சில (ஒன்றுக்கொன்று முரண்பாடான) கருத்துக்கள் தான் Fermi paradox.
முதலில் ubservable univarse பற்றிய சில சின்ன சின்ன( ! ?) டேட்டாகள் : முதலில் இந்த அண்டதின் வயது எவ்ளோ தெரியுமா ? 13.82 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது இந்த பிரபஞ்சம் தோன்றி. அதாவது 1382 கோடி ஆண்டுகள். பிக் பேங் வெடிப்புக்கு பின் பிரபஞ்சம் விரிவடையும் வெகம் கூடி கொண்டே போவதால் இன்று நமது பிரபஞ்சம் 9300 கோடி ஒளியாண்டுகள் அளவு பறந்து விரிந்துள்ளது. இந்தளவுக்கான பரப்பளவை கற்பனை செய்வது கடினம். இது மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு அளவு. இதில் உள்ள மொத்த நட்சத்திரத்தின் எண்ணிக்கையை எழுத நீங்கள் 10 பக்கத்தில் 26 சைபர் போட்டு பிறகு அதனை septillian களாக மாற்ற வேண்டும். (மொத்தமாக ஒரு 60 சைபருக்கு மேல் தேறும்.) அண்டத்தில் உள்ள மொத்த காலக்சியின் எண்ணிக்கை 100 பில்லியன். இதில் 50 sextillian பூமி போன்ற கிரகங்கள் உள்ளன.
நம்ம பால் வெளி திரள்வரை மட்டும் பார்த்தோமேயானால் கூட 100 இலிருந்து 400 பில்லியன் நட்சத்திரங்களும் 100 பில்லியன் பூமி போன்ற கிரகங்களும் இருக்கின்றன. நமது கேலக்சியின் வயது 13.21 பில்லியன் ஆண்டுகள். இதன் பரப்பளவு 1 லட்சம் ஒளி ஆண்டுகள் அளவு அகலம்.இந்தளவு கற்பனைக்கு எட்டாத பரப்பளவில் நாம் மட்டும் தான் தனி ஆள் என்பது முட்டாள் தனமான கருத்து என்கிறார் பெர்மி . அவர் கருத்து படி 1ஐ தொடர்ந்து 16 சைபர் போட்டு அந்தளவு எண்ணிக்கையிலான மேம்பட்ட உயிரினங்கள் இந்த அண்டத்தில் இருக்கலாம் என்கிறார். சரி அப்படியானால் ஏன் நம்மை தவிர வேறு யாரும் கண்ணுக்கு தெரியவில்லை? அதற்க்கு பல காரணங்கள் சொல்கிறார் Fermi.
வரிசையாக சிலதை பார்ப்போம்.
☯ இந்த பூமி உருவாகி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. நாம சில லட்சம் வருடமா தான் இங்க இருக்கோம். ஆதாவது நமக்கும் முன்பு பல கோடி ஆண்டுகள் ஏலியன் இந்த கிரகத்தை ஆண்டு அனுபவித்து விட்டு போய் விட்டன நாம தான் இங்க கால தாமதமாய் வந்து இருக்கிறவங்க.
☯ கினற்றுக்குள் இருக்கும் தவளை எவ்ளோ சுத்தி வந்தாலும் வெளி உலகில் உள்ள உயிரினம் பற்றி அவைகளால் அறிய முடியாது என்பதை போல வெளி என்பது நம் அறிவுக்கு எட்டியத்தை விட மிக பெரியது . இதில் வெளியில் ஒரு குறிப்பிட்ட தொலைவு தாண்டி நம்மால் எதையும் கண்டுகொள்ள முடியாத படி தனிமை படுத்த பட்ட ஒரு இடத்தில் தான் நாம் வாழுகிறோம். நாம் அறிந்த அண்டம் வெறும் ஒரு கிணறு தான்.
☯ நம்மை போல சாதாரணமாக வாழ்வது குடியிருப்பு அமைப்பது இதெல்லாம் "அவர்களை "பொறுத்த வரை மிக மிக பின் தங்கிய நிலை... காரணம் அவர்கள் நம்மை போல பழைய மாடலாக வெறும் 3 டைமன்ஷனில் வாழ்பவர்கள் அல்ல. அவர்கள் நம்மால் இப்போதைக்கு அண்டமுடியாத வேறு வகை உயர்ரக பரிமாணத்தில் வாழ்பவர்கள். பிரபஞ்சத்தை நம்ம ரேஞ்சுக்கே வச்சி யோசிக்கறது நமது பிழை
☯ அங்கே ரெண்டு வகை ஏலியன்கள் உள்ளார்கள் அதில் ஒருவகை வேட்டையாடுபவை...ஆக்ரமிப்பவை. அதனால் மற்ற சாதா வகை வேற்று ஜீவிகள் தங்கள் இருப்பை மற்றும் இருப்பிடத்தை காட்டி கொடுக்கும் எந்த சிக்னலையும் அவைகள் வெளியிடுவது இல்லை.
☯ நம்மால் வெறும் காதால் கேட்க முடியாத கண்ணால் பார்க்க முடியாத ஆனால் நம்மை சுற்றியே இருக்கும் ஒரு ரேடியோவின் மின்காந்த அலை போல அவைகள் அண்டத்தில் நம்மை சுற்றி பரவி இருக்கிறார்கள் அவர்களை கண்டு கொள்ளும் அளவு நமக்கு தான் தொழில்நுட்பம் போதவில்லை
☯ மானின் நடமாட்டத்தை ஒளிந்திருந்து கவனிக்கும் ஒரு புலி போல அவர்கள் தங்களை வெளிப்படுத்தி கொள்ளாமல் நம்மை முற்றுலுமாக கண்காணித்து கொண்டு தான் இருக்கிறார்கள். நாம் அவர்களை ஆராய்வதை பற்றியும் அவர்களுக்கு தெரியும்.
☯ இது கொஞ்சம் சுவாரஷ்யமானது... அதாவது அவர்கள் நம்மை எப்போதோ தொடர்பு கொண்டு விட்டார்கள் நாமளும் பதில் சொல்லியாச்சு... அதனுடன் சில பல ஒப்பந்தம் கூட போட்டாச்சு ஆனால் நம்ம அரசாங்கம் அதை நம்மிடம் இருந்து மறைக்கிறது .
☯ மேம்பட்ட உயிரினங்கள் நிறையவே இருக்கின்றன ஆனால் அதீத இடைவெளி காரணமாக நாம் அவர்களை இன்னும் அடைய முடியவில்லை. ரொம்ப தொலைவில் உள்ளார்கள்.
இப்படி போகிறது Fermi Paradox . அண்டத்தை பொறுத்த வரை அதன் மர்மத்தை கண்டுபிடிப்பது இன்றைய மனிதனுக்கு சாத்தியம் இல்லை என்றே படுகிறது. அண்டத்தை ஒப்பிடும் போது மனிதனின் கால கட்டம் மிக சின்னது. ஒரு 1 லட்சம் பக்கம் கொண்ட மகா புத்தம் ஒன்றில் இரு வரிகளை படித்து விட்டு கதை புரியவில்லையே என்று சொல்வது போல நாம் இந்த குறுகிய கால கட்டத்தை அளந்து ஒன்றும் கிடைக்காமல் தினறுகின்றோமா ?? நிஜமான கதை மொத்த மனிதன் இனம் அழிந்தும் பல கோடி ஆண்டுக்கு பின் தான் தொடங்க இருக்கிறதா ..? அல்லது நாம் தான் வெறும் ஆரம்பமா மற்றவைகளின் வரவு இனி தானா ?
அவ்வபோது பூமியை பார்வையிடுவதாக சொல்ல படும் ஏலியன்கள் எல்லாம் யார் அது நாமே தானா ?? அதாவது எதிர்காலத்தில் மேம்பட்ட இனமாக மாறிய நாம் டைம் டிராவல் செய்து நம்மையே கடந்த காலத்தில் காண அவ்வபோது வருகை தருகிறோமா ?? அல்லது நாம் பார்க்கும் உணரும் மொத்த பிரபஞ்ச நிதர்சனமும் ஒரு மாய தோற்றமா? ???
பிரபஞ்சத்தின் மர்மங்களுக்கு முடிவே இல்லை.
✴ ✴ ✴ ✴
நண்பர்களே ! கட்டுரை என்ன அமானுஷ்யத்தில் இருந்தும் மர்மத்தில் இருந்தும் அறிவியலுக்கு தாவி விட்டதே என்று நினைப்பவர்களுக்கு... என்னை பொறுத்த வரை அமானுஷ்யமும் அறிவியலும் வேறு அல்ல. ஒரு குறிப்பிட்ட விஷயம் அது விளக்க படும் வரை அமானுஷ்யமாக இருக்கிறது. விடை கிடைத்து விளக்க பட்டவுடன் அவை அறிவியல் உண்மையாகி விடுகின்றன. (என்ன தான் அமானுஷ்யத்தில் ஆரம்பித்தாலும் அறிவியலில் வந்து முடித்தால் தான் நமக்கும் ஒரு திருப்தி ) இதில் அமானுஷ்யம் என்பவை அறிவியலை விட அதிக ஈர்ப்பை ஏற்படுத்து கின்றன. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டிய இடம் ஒன்றை பற்றி நான் கொஞ்சம் பகிர விரும்புகிறேன்.
அதாவது நாம் பரபரப்பு விறுவிறுப்பு விரும்பியா அல்லது 'உண்மை விரும்பியா ' என்பது தான் அது. இதை நான் சொல்ல காரணம் உலகில் பேய் கதைகள் ..புரளிகள்... அமானுஷ்யங்கள் பெரும்பாலும் இந்த பரபரப்பு விரும்பிகளால் தான் பேச படுகின்றது. மர்மங்களை இரு வகையினரும் அதிகம் விரும்புவார்கள் ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.
ஒரு உண்மையை ஆராயும் மன நிலையும் அறியும் தேடலும் கொண்ட ஒருவர் மர்மத்தை விளக்கி உண்மையை அறிவதில் அந்த மர்மத்தை நீர்த்து போக செய்வதில் அதிகம் ஆர்வம் கொள்கிறார். ஆனால் ஒரு பரபரப்பு விரும்பி மர்மத்தை அழிய விடாமல் காப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார். இன்று பெர்முடாவின் மர்மம் முற்றிலும் விஞ்ஞானிகளால் விளக்க பட்டுவிட்ட பின்பும் "இல்லை அதெல்லாம் இல்லை பெர்முடாவில் மர்மம் உள்ளது . இல்லை என்றால் கப்பல் எப்படி காணாமல் போகும் "? என்று இவர்கள் தொடர்ந்து சொல்லுவார்கள். இவர்களை பொறுத்த வரை இவ்வளவு நாளாக பரபரப்புக்கு தீனி போட்ட பெர்முடாவை விளக்கி விடுவதில் கொஞ்சம் வருத்தம் இவர்களுக்கு.
நீங்கள் மர்மத்தை தொடர்ந்து நீடிக்க விரும்புகிறீர்களா அல்லது அதில் உள்ள மர்மத்தை ஆராய்ந்து உண்மையை கண்டு அந்த மர்மத்தை அழிக்க ஆசை கொள்கிறீர்களா என்பதில் கவனமாக இருங்கள். காரணம் உலகில் உண்மை அறியும் ஆவல் துளியும் இல்லாத பரபரப்பு விரும்பிகள் பலரால் தான் தொடர்ந்து புரளிகள் கட்டுக்கதைகள் கிளப்ப படுகின்றன .உண்மையான அறிவியல் விரும்பிகளுக்கு எதிரிகள் இவர்கள். நீங்கள் ஒரு போதும் பரபரப்பு விரும்பியாக இல்லாமல் உண்மை விரும்பியாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை..
மர்மங்கள் அழகானவை.... மர்மங்கள் சுவாரஸ்யமானவை.. மர்மங்கள் ஆவலை தூண்டுபவை... அவற்றை அறிவு தேடலுக்கு பயன் படுத்துமாறு கேட்டு கொண்டு கட்டுரையை நிறைவு செய்கிறேன். அடுத்து வேறு தலைப்பில் சந்திக்கும் வரை..
உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் ரா.பிரபு.
|