கால் வண்டி, அரை வண்டி, முழு வண்டி, லோடு வண்டி அன்று நாம் அறிந்து வைத்திருந்த சைக்கிள்கள்.
கடைக்கு, வேலைக்கு, பள்ளிக்கு, உறவினர் வீடுகளுக்கு என எங்கு சென்றாலும் சைக்கிளிலேயே சென்று வந்த அந்த காலம் கரையேரிவிட்டது.
இன்று: குழந்தைப் பருவம், சிறு பருவம் இவற்றோடு முடிவடைந்து விடுகிறது சைக்கிள் பயணம்.
இளைஞர்கள் திரும்பிக்கூடப் பார்க்கத் தயாரில்லை.
கொய்யாப்பா கடை, MPM கடை, மிஃராஜ் அப்பா கடை, தெற்கு மெயின் ரோட்டில் அன்று நாம் அறிந்த வாடகைச் சைக்கிள் கடைகள். 35 வயதைக் கடந்த எங்கள் பகுதியைச் சார்ந்த அனைவரும் இந்த 3 கடைகளில் ஏதாவது ஒன்றில் நிச்சயம் வாடகைச் சைக்கிள் ஓட்டியே இருப்பார்கள்.
பலர் ஓட்டக் கற்றுக் கொண்டதும் இக்கடைகளின் வாடகைச் சைக்கிள்களில் தான். சொந்த சைக்கிளோடு வலம் வந்தவர்கள் சொற்பமானவர்களே!
நோட்டில் பெயரையும், வண்டி நம்பரையும், எடுத்த நேரத்தையும் எழுதிவிட்டு சைக்கிளை எடுத்துச் சென்று, அவ்வப்போது ஆங்காங்கே மணி எத்தனை? மணி எத்தனை என்று விசாரித்து, விசாரித்து சைக்கிள் ஓட்டிய அந்த நாட்களை மறக்க முடியுமா?
வீலின் அருகே பலூனைக் கட்டிக் கொண்டு படபடவென்ற சப்தத்தோடு ஓட்டியதில் ஏதோ பைக் ஓட்டிய ஒரு திருப்தி கிடைத்தது.
ஒரு ரவுண்டுக்காக பிறரிடம் கெஞ்சிய சம்பவங்களை சந்தித்தவர்கள் பலர் உண்டு.
சொந்த சைக்கிள் வைத்திருந்தவர்களில் சிலர் அதை அழகுபடுத்துவதிலும், பராமரிப்பதிலும் காட்டிய ஆர்வங்கள் நம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
இன்று வரை ஒன்று மட்டும் புரியவே இல்லை... டைனமோ லைட்டைச் சுற்றி கட்டப்பட்ட துணி மஞ்சள் கலரில் மட்டுமே இருந்தது எதனால்???
சைக்கிளோடு தொடர்புடைய நினைவுகள் தான் எத்தனை? எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது.
இரவு நேரங்களில் டைனமோ லைட்டு எரியவில்லை என்பதைக் குற்றமாக்கி, காசைக் கரக்கும் காவல்துறைக்கு பயந்து பயந்து வடக்கு ரோட்டைக் கடக்கும் அந்த த்ரில்...... இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. இல்லாத அந்த அபராதத்தை இருக்கிறதென்று நம்பி காசைத் தொலைத்தவர்கள் பலர்.
முன்னாலும் பின்னாலுமாக மூவர் அமர்ந்து செல்வதும், கரடு முரடான இடங்களில் முன்னால் இருப்பவர் வலியில் நெலிவதும், குழந்தைகளை ஹான்பரில் மாட்டப்பட்ட கூடைகளில் அமர வைத்து வலம் வருவதும்.... தன்னைவிட உயரமான பெரிய சைக்கிளை சிறுவர்கள் பெடல் போட்டு ஓட்டுவதும்,
வவ்வா பாலத்தில் குளிக்கச் செல்லும் போது சைக்கிளையும் உள்ளே இறக்கி குளிக்க வைப்பதும், ஸ்டாண்ட் போட்டு டயரை சுற்ற விட்டு பின்னால் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதும், நம்பிமலைப் போன்ற இடங்களுக்கு நண்பர்கள் சகிதம் சைக்கிளிலேயே செல்வதும், சில நேரங்களில் கீழே விழுந்து நொறுங்கி கைகால் உரசி காயம் ஏற்படுவதும், மருந்தே போடாமல் அந்த காயம் மறைந்து போவதும்....
எல்லாம் முடிந்து விட்டது 90 களில் சுற்றித் திரிந்து, இவற்றை அனுவவித்த கடைசித் தலைமுறையோடு..
இன்றும் கலர் கலராக சைக்கிள்கள் ஓடத்தான் செய்கிறது... ஆனாலும் ஏனோ அந்த திருப்தி இவற்றில் இல்லை.
இழந்தது சைக்கிள்களை மட்டுமல்ல... அவை தந்த ஆரோக்கியங்களையும் தான்.
Thanks: நெல்லை ஏர்வாடி அழகும் வளமும்