நாகர்கோவில் மோரிஸ் மத்தியாஸ் மருத்துவமனைக்கும், நம் ஊர் ஏர்வாடி மக்களுக்குமான தொடர்பு ஐம்பது அறுபது வருடங்களையும் கடந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை தான்.
தற்போதைய தலைமை டாக்டர்களின் தாத்தா டாக்டர் மத்தியாஸ் காலத்திலிருந்தே நம் ஊர் மக்களுக்கும் மத்தியாஸுக்குமான தொடர்பு ஆரம்பிக்கப்பட்டு தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது. என்ன நோய் வந்தாலும் மத்தியாஸுக்குப் போனால் சரியாகிவிடும் என்ற நம் மக்களின் மனநிலைக்கு மாற்றுக் கருத்தே இல்லை.
இயற்கைச் சூழலோடு, மனதிற்கு இதமான காற்றோட்டத்தோடு, சுகாதாரமான ரூம் வசதிகளுடன் கூடிய மருத்துவமனை என்பது மட்டுமல்ல, எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் “ம்…ம்ம்..ஒண்ணுமில்லை” என்று சொல்லி அதை இலேசாக்கிவிடும் பெரிய டாக்டர், டாக்டர் மோரிஸ்ஸின் வார்த்தை நோயாளிகளுக்குத் தெம்பைத் தந்தது என்றால் அது மிகையில்லை.
எத்தனையோ மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் வந்துவிட்ட போதிலும் இன்றுவரை நம் ஊர் மக்கள் இங்கு தொடர்ந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருப்பதற்கு இன்னொரு காரணம் – நல்ல கனிவான குணத்துடன் பயிற்றுவிக்கப்பட்ட நர்ஸ்கள்.
ஒரு குடும்ப உறுப்பினர் போன்று பழகி நம் இல்லத் திருமணங்கள், விசேஷ நிகழ்ச்சிகளில் கூட வந்து பங்குபெறும் வரை பரிச்சயமாகிப் போன ஆச்சர்யம்.
மத்தியாஸில் போய் அட்மிட் ஆகப் போகிறோம் என்றால் ஆஸ்பத்திரிக்குப் போகிறோம் என்ற மனநிலை என்றுமே ஏற்பட்டதில்லை நம் ஊர் மக்களுக்கு. ஏதோ தாய் வீட்டுக்கு போனது போல அப்படி ஒரு திருப்தி அவர்களின் கவனிப்பில்.
அடுத்த ரூம்களில் தங்கி இருப்பவர்களோடு ஆத்மார்த்தமாகப் பழகி ஏதோ இரயில் சிநேகம் போலல்லாமல் இன்று வரை அந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது நம் ஊரின் பல குடும்பங்களில்..
வணிகமயமாகிப் போன மருத்துவமனைகளில் 8க்கு 8, 10க்கு 10 போன்று பெட்டிக்குள் அடைத்துப் போட்டது போல ரூம்களைத் தான் இன்று அநேக மருத்துவமனைகளில் காணமுடிகின்றது. ஆனால், அந்தக் காலத்திலேயே அம்மி, ஆட்டு உரல், அடுப்பு, அடுப்படி, தோட்டம், மரங்கள் என சகல வசதிகளுடன் காற்றோட்டத்துடன், ஆஸ்பத்திரி என்ற ஃபீலிங்கே இல்லாமல் அவர்கள் வடிவமைத்திருக்கும் அந்தக் கட்டமைப்பிற்கே பாதி நோய்கள் பறந்து போய்விடும். மருத்துவமனையை இன்றையக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்திய போதிலும், விசாலமான ரூம் வசதிகளை அப்படியேத் தொடர்வது மிகவும் பாராட்டுக்குரியது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் தங்களின் பொருளாதார நிலைமையை எடுத்துச் சொல்லி ஃபீஸைக் குறைத்துக் கொடுத்த வரலாறும் நம் ஊர் மக்களுக்கு மத்தியாஸில் உண்டு. பணவசதி படைத்தவர்கள், வசதி இல்லாதோர் என எல்லோருக்கும் ஏற்ற ஒரு மருத்துவமனையாகத்தான் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோரிஸ் மத்தியாஸ் மருத்துவமனை.
ஏர்வாடிக்காரர்கள் இல்லாத மத்தியாஸ் ஆஸ்பத்திரியை ஒருநாளும் காணமுடியாது. அது உள்நோயாளிப் பகுதியாக இருந்தாலும் சரி, வெளிநோயாளிப் பகுதியாயினும் சரி, எப்படியும் ஒரு ஆளையாவது பார்த்துவிட முடியும். அந்த அளவிற்கானது ஏர்வாடி மக்களுக்கும் மத்தியாஸ் ஆஸ்பத்திரிக்குமான தொடர்பு.
இன்றும் கூட கன்சல்டிங் ஃபீஸ் கூட வாங்காமல் மருத்துவ சேவையாற்றி வருகிறார்கள் அங்குள்ள தலைமை மருத்துவர்கள். மருத்துவமனையில் மனிதம் இன்னும் செத்துவிடவில்லை என்பதற்கு இந்த மத்தியாஸ் ஆஸ்பத்திரி இன்றும் ஒரு சாட்சியாக உள்ளது.
இங்கு பணிபுரிந்த மற்றும் பணிபுரியும் பல நர்ஸ்கள், டாக்டர்கள், டெக்னீஷியன்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இங்கேயே பணிபுரிந்து கழித்துவிட்டது ஆச்சரியமாகத் தானிருக்கின்றது. சுசீலா அக்கா, தங்கம் அக்கா, அக்கவுண்டன்ட் கோமதி அக்கா, லேப் டெக்னீஷியன் திலீபன், பீட்டர் போன்றவர்கள் என ஒரு பட்டியலேயிடலாம்.
மருத்துவத்தை வணிகமயமாக்கி விட்ட மருத்துவமனைகளுக்கிடையில் மனிதாபிமான சேவையோடு மருத்துவப் பணியாற்றும் மோரிஸ் மத்தியாஸ் ஆஸ்பத்திரியின் சேவை மகத்தானது. ஏர்வாடி மக்களின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட ஓர் அங்கம் மத்தியாஸ் மருத்துவமனை என்றால் அது மிகையாகாது.
தொடரட்டும் மத்தியாஸின் மருத்துவசேவை…
ஏர்வாடி இளைஞன் |