குழந்தைகள் தின நினைவலைகள். ************************** எல்.கே.ஜியும்,யு.கே.ஜியும் ரெண்டு வயதிலேயே கொண்டுபோய்விடும் ஃப்ரி கேஜியும் அறிந்திராத காலம்.கையை வைத்து காதை தொட்டால் மட்டுமே பள்ளியில் சேர்க்கமுடியும்.
ஆறாம் தெருவின் இறுதியில் புதுமனையாய் உருவெடுத்த புதிய பகுதியில்,சற்று கோணலான அமைப்பில்,நடுநயமாய் வீற்றிருக்கும் நம் பள்ளிக்கூடம். பொட்டைப்பள்ளிக்கூடம் என்றும்,எலிமோன்டி ஸ்கூல் என்றும் பட்டப்பெயர்சூட்டி அழைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
சுற்றி செங்கலாலான சுவர்.முகப்பில் ஒரு இரும்பு கேட்.பிற்காலத்தில் அந்த கேட் உடைந்து வாசல்மட்டும் இருந்தது.அது தான் பிரதான வாயில்.பின்புறமும் ஒரு வாசல் உண்டு.உள் நுழைந்ததும் நான்கடி அகலத்திற்கு மணல் பகுதி.அதைக்கடந்தபிறகு,பள்ளிக்கூடத்தின் திண்டு.படிக்கட்டு ஏறி வலப்பக்கம் தலைமையாசிரியரின் அறை.இடப்பக்கம் ஒன்றாம் வகுப்பு அறை.தரையோடு தரையாக கிடக்கும் நீளப்பலகைதான் மாணவர்களின் இருக்கை.ஐந்தாம் வகுப்பு வரை இருபாலருக்குமான பள்ளி.
கண்ணாடிபோட்ட ராமலட்சுமி டீச்சர்தான் அகரம் சொல்லிக்கொடுத்த முதல் ஆசிரியை. ஹெட்மாஸ்டர் நீளமான ஒரு பிரம்பை எப்போதும் கையில் வைத்துக்கொண்டே வலம்வருவார்.அதுவே அவர்மேல் மிரட்சியாக இருக்கும்.
சுற்றி வகுப்புகள்.குறுக்கே சுவர்கள் இல்லாத பெரிய வராண்டாவை நடு,நடுவே ப்ளைவுட் வைத்து தடுத்து வகுப்புகள் பிரிக்கப்பட்டிருக்கும்.மேலே நாட்டு ஓடு வைத்து மேயப்பட்டிருக்கும்.நட்ட நடுவே திறந்தவெளி.அதில் சில மரங்கள் நின்றது.ஒரு கைப்பம்பு இருக்கும்.தண்ணீர் குடிப்பது அதில் தான். ஒருவர் பம்பை அடிக்க,இன்னொருவர் இரண்டு கையையும் ஏந்தி தண்ணீரை வாய் வைத்து குடிப்போம்.
காலை இரண்டுபீரியட் முடிந்ததும் ஒன்னுக்குவிடும்.இன்டர்வெல் என்ற வார்த்தையெல்லாம் அன்றைக்கு கிடையாது
கடமையை முடித்துவிட்டு,பட்டாணிஅப்பா கடையில் போய் முட்டாய் வாங்கித்திங்க கூட்டம் முண்டும். சீசனுக்கு ஏற்ப சீமை நெல்லிக்காய்,நாட்டுநெல்லிக்காய்,நவ்வாப்பழம்,விளாங்காய்,கொல்லாம்பழம்,கல்கோனா மற்றும் ஐந்து பைசா,பத்துபைசா மிட்டாய்களை துட்டு கொண்டுவருபவர்கள் வாங்கித்திண்பார்கள்.ஐந்து பைசா மிட்டாயை பல்லால்கடித்து பங்குவைப்பதும் நடக்கும்.
யூனிஃபார்ம் இல்லை,பேச் இல்லை,ஷு சாக்ஸ் இல்லை,காலில் செருப்பே பலருக்கு இருக்காது.வெயிலின் கொதிப்பை தாங்கிப்பழகிய பாதம் ஒன்றாம்வகுப்பிலேயே வாய்த்தவர்கள் பலர்.காலில் முள் குத்தி அதை ஊக்கைவைத்து குத்தி எடுப்பதும் உண்டு. மஞ்சல் பைகட்டில் ஒரு சிலேட்டும்,குச்சியும் மட்டும்தான் அன்று பாடம் கற்றுத் தந்தது.
பள்ளிக்கூடத்துக்கு செல்லும்வழியில் சில வீடுகளில் ரேடியோவிலிருந்து பாடல்கள் கசியும்.
"மாஞ்சோலை கிளிதானோ"....
"காஞ்சி பட்டுடுத்து கஸ்தூரி பொட்டு வைத்து"....
"ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்"......
போன்ற இளையராஜாவின் மிக இனிய பாடல்களெல்லாம் எங்கள் பள்ளி பயணத்தில் காதில் விழும்.அன்று அதை ரசிக்கத்தெரியாது.ரசிக்கும் மனநிலையிலும் நாங்கள் இருக்கமாட்டோம்.ஆனால்,அது எங்களோடு இணைந்து,மண்டையில் தங்கி இருக்கிறது.இந்த பாடல்களை இன்று கேட்டாலும் அந்த நினைவுகளை சுமந்துவருகிறது.
முக்கியமாக,இன்றைக்குப்போல் வாழ்க்கை வசதிக்கேற்ப,அல்லது டாம்பீகத்தை காட்டும்விதமாக பள்ளிக்கூடங்கள் வகைப்படுத்தப்படவில்லை.அன்றைய பணக்கார வீட்டுப்பிள்ளைக்கும்,சேரியின் ஒதுக்கப்பட்ட வீட்டு பிள்ளைக்கும் ஒரே பள்ளியில்தான் படிப்பு.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஊர் என்பதாலும்,முஸ்லிம் தனவந்தர் கொடுக்கானி அப்பாவால் பள்ளிக்கான இடம் வழங்கப்பட்டது என்பதாலும் வெள்ளி,சனிதான் வாரவிடுமுறை.அதோடு,காலை பிரேயரில் ஐந்து கலிமாவும் சொல்லப்படும். அந்த கலிமாவை சொல்லிக்கொடுக்க நாலு பிள்ளைங்க இருப்பாங்க.அவங்களுக்கு இருக்குற பெருமை.....
ஐந்தாம் கலிமாவில் "அஸ்கோபிஸ்க"(அசலில் அது அஸ்தஃபிருக்க) என வரும்போது அனைவரும் உச்சஸ்தாயில் சொல்வது...
நோன்பு 27லிலிருந்து பெருநாள் வரை லீவுதான்.மூன்றாம் பெருநாள்,ஆறாம் பெருநாளுக்கு காட்டுப்பள்ளிக்கு போவதற்காக ரெண்டு பீரியட் முடிந்ததுமே பள்ளிக்கூடம் விடப்படும்.படுகளம் ஏழாம்பீரிலிருந்து பத்தாம்பீர்வரை லீவுதான்.தோப்புக்கும் லீவு உண்டு.
அந்தக்காலங்களில்,தெருக்கு சில அடையாளங்கள் உண்டு.அந்தந்த பகுதியில் பிரபலமாகி அப்படியே ஊர் முழுக்க பிரபலமானவர்களும் உண்டு.அவர்களைப்பிரபலப்படுத்துவதும் பள்ளிமாணவர்களே.கேலிக்கும்,கிண்டலுக்கும் உள்ளாகி கல்லடிகளும்,சொல்லடிகளும்பட்டு,ஏர்வாடியின் அழுத்தமாகவே மாறிவிட்ட,மனதோடு மறக்காமல் நிற்கின்ற மம்மர்,மொட்டைமம்மாத்து,ஆத்திக்கன் இவர்கள் தான் அன்றைய பள்ளிக்கூட பிள்ளைகளின் என்டர்டைணர்கள்.
பள்ளிக்கூடத்திற்கு கொண்டுபோகும் குச்சிடப்பாக்கள் கூட பயன்படுத்தி தீர்த்த பவுடர் டப்பாக்காளாத்தான் இருக்கும்.நைஸில் பவுடர் டப்பாக்களை பல பிள்ளைகள் குச்சி டப்பாக்களாக பயன்படுத்தியது நினைவில் வருகிறது.இன்றும் நைஸில் டப்பாவை முகர்ந்தால் அந்த ஞாபகத்தை தரும்.குச்சி டப்பாவை மறந்து வரும் பிள்ளைகளுக்கு,இருப்பவர்கள் கடன் கொடுப்பதும் உண்டு.சிலர்,எங்க மாமா போலீஸ் நீ குச்சி தரலைனா புடிச்சி குடுத்துடுவேன் என்று பயமுறுத்திய அனுபவமும் உண்டு.குச்சியில் கடல் குச்சி என்று ஒன்று இருக்கும்.அது தான் உண்மையில் குச்சிபோல இருக்கும்.எங்களுக்கு குச்சி சென்னையிலிருந்து அசல் குச்சி டப்பாவோடு வரும்.அதை மூன்றாய் உடைத்து கொண்டுபோவோம்.மொத்தமாய் கொண்டுபோய் காணாக்கிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.
ஒன்றாம்,ரெண்டாம் வகுப்பு படிக்கும்பொழுது,வீட்டிலிருக்கும் தம்பி,தங்கைகளை அழைத்துவந்து பக்கத்திள் வைத்துக்கொள்ளும் பழக்கம் அப்போது இருந்தது.
பள்ளிக்கூடத்தில் முள்காட்டில் கூடாரம் அமைத்து விளையாடுவோம்.எந்த பாம்புக்கும்,பல்லிக்கும் பயம் ஏற்பட்டதில்லை அன்று.
மழைக்காலங்களில்,பள்ளிக்கூடத்தைச்சுற்றியுள்ள புதுமனைப்பகுதி களிமண் சேராய் இருக்கும்.களிமண் எடுத்து,ரேடியோ,மண்சட்டி வடிவங்களில்,சில கலாரசனை உள்ள சீனியர் மாணவர்கள் உருவாக்கி வருவார்கள்.
ஒன்னாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை கற்றுத்தந்த ஆசிரியர்கள்,ராமலட்சுமி டீச்சர்,பாத்திமுத்து டீச்சர்,பரிதா டீச்சர்,ஐரின் டீச்சர்,சரிபாடீச்சர்,கந்தப்பன் சார் மறக்கமுடியாதவர்கள்.அன்று அவர்கள் கற்றுத்தந்த கல்வியை இன்று எந்த மாடர்ன் ஸ்கூல்களும் கற்றுத்தரவில்லை.இனியும் கற்றுத்தரப்போவதும் இல்லை.
அன்றைக்கு வகுப்பில் ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடில்லை.Home work இல்லை.ஸ்கூல் பஸ் இல்லை.uniform இல்லை.மூளையை மழுங்கடிக்கும் அளவுக்கு பாடச்சுமை இல்லை.
காக்கைகளையும்,குருவிகளையும்,அணில்களையும் ரசித்துக்கொண்டே,இயந்திரமாக இல்லாமல்,அவற்றைப்போலவே சுதந்திரமாக கல்வி பெற்றோம்.இதில் கற்றவர்கள்தான்,மருத்துவர்களாகவும்,விஞ்ஞானிகளாகவும் உலகெங்கும் புகழ்பெற்று விளங்குகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!
நன்றி:Shamran Sufyan. |