ஓரெழுத்து வெண்பா
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
உலகில் இப்படி ஒரு பாடலை யாராவது எழுத முடியுமா? அதற்கு அந்த மொழியில் வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் முடியவே முடியாது என்று தான் தோன்றுகிறது. ஒரே ஒரு தமிழ் எழுத்தை அந்த எழுத்தின் வரிசையை மட்டும் பயன்படுத்தி ஒரு வெண்பாவை இயற்ற முடியுமா என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இன்று வெண்பா எழுதுவதற்கே ஆட்கள் இல்லை என்ற நிலையில், பதினைந்தாம் நூற்றாண்டிலே அருணகிரிநாதர் இப்படி ஒரு பாடலை இறை அருள் இல்லாமல் எப்படிபாடியிருக்க முடியும்
அருணகிரிநாதர் கந்தர் அந்தாதி 54
சொற்பிரிவு
திதத்தத் தத்தித்த திதி தாதை தாத துத்தி தத்தி
(தா) தித தத்து அத்தி ததி தித்தித்ததே து துதித்து இதத்து
(ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத திதே துதை தாது அதத்து
(உ) தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே.
பதவுரை
திதத்த ததித்த ... திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை,
திதி ... தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை ... உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத ... மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி ... புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி ... பாம்பாகிய ஆதிசேஷனின்,
தா ... முதுகாகிய இடத்தையும்,
தித ... இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்)
தத்து ... அலை வீசுகின்ற,
அத்தி ... சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு),
ததி ... அயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே ... மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
து ... அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்),
துதித்து ... போற்றி வணங்குகின்ற,
இதத்து ... பேரின்ப சொரூபியாகிய,
ஆதி ... மூலப்பொருளே,
தத்தத்து ... தந்தங்களை உடைய,
அத்தி ... யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை ... கிளி போன்ற தேவயானையின்,
தாத ... தாசனே,
திதே துதை ... பல தீமைகள் நிறைந்ததும்,
தாது ... ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி ... மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து ... பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி ... எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு),
தீ ... அக்னியினால்,
தீ ... தகிக்கப்படும்,
திதி ... அந்த அந்திம நாளில்,
துதி தீ ... உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே ... உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.
பொழிப்புரை
நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும் பிரம்மனும் இடைச்சேரியில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயாலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.
(இந்த பாட்டிற்கு உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்றார்). |