Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஆரியரும் தமிழரும் - பாகம் 1
Posted By:peer On 8/4/2020 2:26:26 PM

ஆரியரும் தமிழரும் - பாகம் 1

ஆரியம் என ஒன்று இல்லை. அது ஒரு போலி கற்பிதம். கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் பிரிவினைவாதம் என்றெல்லாம் 'இன்று' பலர் கூறிவருவதால் அதனை ஒரு தொடர் பதிவுகளாக வரலாற்று சான்றுகளுடன் வெவ்வேறு தளங்களில் எழுதுவதாக தீர்மானித்திருக்கிறேன். அதாவது வரலாறு, இலக்கியம் (வடமொழி, தமிழ்), கல்வெட்டியல், நாணயவியல், தொல்லியல், மானிடவியல், மொழியியல், ஆங்கிலேயர் கால கூற்றுகள், கடந்த காலங்களில் ஆரியர்களுக்கே இருந்த ஆரிய தற்பெருமை என ஏறத்தாழ அனைத்து தளங்களிலும் ஆரியருக்கும் தமிழருக்குமான வேறுபாடுகளை தொடர்ச்சியாக காணவிருக்கிறோம். நிற்க!

தமிழ் இலக்கியங்களில் இருந்தே ஆரிய வரலாற்றினை தொடங்குவோம். சங்க இலக்கியங்களில் பல இடங்களில் #ஆரிய என்கிற வார்த்தை வட இந்திய பகுதியில் இருக்கும் மன்னர்களையோ மக்களையோ குறித்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டை கபிலர் ஆரிய அரசனான பிரகதத்தனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க பாடப்பட்டதாக வரலாறு கூறும். இப்பதிவில் சிலம்பினை மட்டும் கொண்டு தொடங்குவோம்.


சிலம்பில் வரும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே 'ஆரிய படைக்கடந்த நெடுஞ்செழியன்' என இளங்கோவடிகளால் குறிக்கப்படுகிறான். அதனை,

#வடவாரிய படை கடந்து
தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்" என பாடுகிறார் இளங்கோவடிகள்.

அதாவது சேரன் செங்குட்டுவன் வடக்கே செல்வதற்கு முன்பே பாண்டியன் நெடுஞ்செழியன் ஆரிய படைகளை வீழ்த்தியிருக்கிறான்.

தொடர்ந்து பாண்டியனின் இறப்பிற்கு பின் சேரன் செங்குட்டுவன் இரண்டாவது முறையாக இரண்டு காரணங்களுக்காக வடபுல படையெடுப்பினை நிகழ்த்துகிறான். அதில் முதல் காரணம் ஆரிய அரசர்கள் தமிழினை இகழ்ந்ததால் அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டுவது. இரண்டாவது இமயத்தில் வில் கொடியை நட்டு கண்ணகிக்கு சிலையெடுக்க கற்களை கொண்டு வருவது.

அதில் செங்குட்டுவன் ஆரிய அரசர்களை நேருக்கு நேர் சந்தித்த இடம் இன்றைய காசிக்கு அருகில் இருக்கலாம் என்பது 'சிலம்பின் காலம்' என்ற நூலெழுதிய ஐயா திரு இராம கி அவர்களின் கருத்து.

செங்குட்டுவன் ஆரிய அரசனான கனகவிசயனை சந்திக்கும் இடத்தினை இளங்கோவடிகள் பின்வருமாறு விளக்குகிறார்.

"எருமைக் கடும்பரி யூர்வோன் உயிர்த்தொகை ஒருபக லெல்லையின் உண்ணு மென்பது
#ஆரிய வரசர் அமர்க்களத் தறிய" - கால்கோட்காதை 215.

அதாவது எருமைகடாவாகிய குதிரையின் மீது அமர்ந்து ஊர்ந்து வரும் மன்னனை ஒரு பகல் பொழுதிலே சேர மன்னன் வீழ்த்தும் நுற்பத்தை ஆரியர்கள் போர்க்களத்தில் தான் அறிந்தார்கள்.

இதுவரையில் ஆரியத்தை குறித்து வந்த இளங்கோவடிகள் இதற்கு அடுத்த வரியில் இன்னொரு அற்புதமான வரலாற்று தகவலை பதிவு செய்கிறார். அது,

"வாய்வாள் ஆண்மையின் வண்தமிழ் இகழ்ந்த காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும் ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு செங்குட் டுவன்தன் சினவலைப் படுதலும்- சடையினர் உடையினர் சாம்பற்பூச்சினர்" - கால்கோட்காதை 225.

அதாவது வடநாட்டில் உட்கார்ந்துக்கொண்டு வாயாலேயே தமிழை இகழ்ந்த கனகன் விசயன் என்ற வடநாட்டு ஆரிய அரசர்கள் ஐம்பத்திருவரெனும் கடுந்தேளரோடு களம்புகுந்த நேரத்தில் செங்குட்டுவனின் சினத்தை கண்டு அஞ்சி சிதறி ஓடினர். வெறுமனே ஓடவில்லை. அங்க தான் அப்பட்டமான ஒரு உண்மையினை பதிவு செய்கிறார் இளங்கோவடிகள். நீண்ட சடை, உடை அணிந்து சாம்பல் நீற்றினை பூசிக்கொண்டு போர் களத்தில் இருந்து தப்பித்து ஓடுகிறார்கள். சம்பவம் நடந்த இடம் காசியாக இருக்க வேண்டும் என்பது திரு இராம கி அவர்கள் பல சான்றுகளுடன் விளக்கியிருப்பதாலும் காசியில் சைவ சமயத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக மேற்குறிப்பிட்ட தோற்றத்தில் இருப்பதாலும் அவர்கள் சைவ வேடம் பூண்டு தப்பித்திருக்கிறார்கள் என அறியமுடிகிறது.

சிலம்பு காலத்திலே சைவ சமயம் இருந்ததையும் தவக்கோலம் பூண்டு ஆரியர்கள் ஓடியதையும் நடுகற் காதையில் மற்றொரு முறை வருவதை கொண்டும் அறியலாம். அது,

"இமயச் சிமையத் திருங்குயி லாலுவத்
துமையொரு பாகத் தொருவனை வணங்கி
அமர்க்களம் அரசன தாகத் துறந்து
தவப்பெருங் கோலங் கொண்டோர் தம்மேல்
கொதியழற் சீற்றங் கொண்டோன் கொற்றம் புதுவ தென்றனன் போர்வேற் செழியனென்" - நடுகற்காதை 102 - 107

அதாவது இமயமலை சாரலில் இருந்த திருங்குயிலாலுவம் எனும் இடத்தில் உமையொருபாகனாக கோவில் கொண்டுள்ள சிவபெருமானை வணங்கி, போர்க்களம் நும் மன்னனதாகுமாறு விட்டுவிட்டு ஓடிப்போய் தவப்பெருங்கோலம் கொண்டனர். அப்படி வீரமற்று ஓடிய ஆரிய மன்னர்களையும் கொதியழில் சீற்றம் கொண்டு பிடித்து வந்த நும் மன்னனின் வெற்றிச்செயல் தமிழக வீரவரலாற்றிலேயே இல்லாத புதுமையான விடயம் என மற்றைய இரு முடியுடைய வேந்தர்கள் சேரனை பற்றி கூறியதை செங்குட்டுவனிடம் நீலன் உரைக்கிறான்.

அதாவது சைவ வேடம் பூண்டு ஓடியவர்களை கூட விட்டுவிடாமல் அடையாளங்கண்டு பிடித்து வந்த செயல் நல்லதல்ல என மற்ற இரு முடியரசர்கள் கூறும் அளவிற்கு ஆரியர்களை 'அமிதாப் மாமா' அளவில் கண்டுபிடித்து இழுத்து வந்திருக்கிறான் சேரன்.

அதாவது இன்று மட்டுமே ஆரியர்கள், சைவ வேடம் பூண்டு தங்களை காப்பாற்றிக்கொள்ளவில்லை. சிலம்பு காலத்திலேயே இதான் நடந்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அன்றும் இன்றும் என்றுமே அவர்கள் 'சைவ' வேடதாரிகள் தான்!

இப்போர் எழுச்சியும் வெற்றியும் தமிழ் மறத்தை ஆரியருக்கு உணர்த்தவே நடந்ததேயன்றி நாடுகொள்ளும் ஆசையால் அல்ல என்பதனை உணர்க. அன்றைய நாளில் ஆரிய அரசர்கள் தம்மால் வெற்றிக்கொள்ள முடியாத அதேசமயம் தம்மைக்காட்டிலும் நாகரீகத்திலும் செம்மையான வாழ்விலும் உயர்ந்திருந்த தமிழர்களையும் தமிழையும் வாய் வார்த்தைகளால் இன்றை போலவே அன்றும் பழித்து இன்பம் கண்டபொழுது, இன்றைய தமிழர்கள் போன்று பொறுத்துக்கொண்டு இல்லாமல் அன்றைய தமிழரசர்கள் ஆரிய செருக்கினை அடக்கி அவர்களின் நாட்டிற்கே சென்று வெற்றிக்கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று போலே அன்றும் வடபுலம் தென்புலம் என இருசார் பிரிந்து, உறவும் பகையுமாய் கலந்து வாழ்ந்த நிலையும் உணரப்படும். இதனால் இமய வெற்றி என்பதே தமிழருக்கு பெரு வெற்றியாகவும் புகழ்வெற்றியாகவும் மதிக்கப்பட்டது என்பது விளங்கும்.

ஆகையால் தமிழையும் தமிழர்களையும் 'டமில்', 'டம்ளர்' என விளிக்கும் ஆரிய செருக்கினையும் ஆரியத்துக்கு ஏவலாளிகளாக இங்கிருக்கும் குமஸ்தாக்களின் ஆணவ மலத்தினையும் அடக்கும் ஆண்மை தமிழினத்திடம் உண்டு. இது தான் ஈராயிரம் ஆண்டுகால நீண்ட நெடிய வரலாறு. பாவம் அவர்களால் வார்த்தைகளால் மட்டுமே இகழ்ந்து இன்பம் காண முடிந்தது. முடிகிறது.

தொடர்வோம்...

பதிவு
#VickyKannan




தமிழ் மொழி
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..