Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஆரியரும் தமிழரும் - பாகம் 3
Posted By:peer On 8/4/2020 2:32:49 PM

முதல் பாகத்தில் சிலப்பதிகாரத்திலிருந்து குறிப்பிட்ட சில பகுதியை மட்டுமே பார்த்தோம். இப்பதிவில் முதல் பாகம் நீங்கலாக சிலம்பில் 'ஆரியர்' எனும் பெயர் பயின்று வரும் மற்ற சில இடங்களையும் பார்த்துவிடுவோம்.

"செறிகழல் வேந்தன் தென்றமி ழாற்றல்
அறியாது மலைந்த #ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக" - நீர்படைக்காதை 5-8.

விளக்கம்: வீரக்கழல் செறிந்தவனான வேந்தன்; தென்னக தமிழர்களின் ஆற்றலை அறியாது மலைந்த ஆரிய மன்னரை கொலைத்தொழில் செய்வதில் முதியோனான கூற்றுவனை போல பிணங்களை கொன்று குவித்தான் செங்குட்டுவன்.

"பாடகச் சீறடி #ஆரியப் பேடியோடு
எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றூவர்
அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை
இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவித்" - நீர்படைக்காதை 186-191.

விளக்கம்: பாடகம் அணிந்த சிறிய பாதங்களை உடைய ஆரிய பேடிகளையும், அழிதல் இல்லாத போந்தைக் கண்ணி சூடிய அருந்தமிழ் வேந்தனின் ஆற்றலை பற்றி தெரியாமல் மோதிய கனக விசயரை மற்ற இருமுடி வேந்தர்களுக்கு காட்டிட சேரன் ஏவினான்.

"வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபத் திருக்க வேந்தன்
அமரகத் துடைந்த #ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று தகையடி வணங்க" - நடுகற் காதை 86-89.

விளக்கம்: வச்சிரம், அவந்தி, மகத நாட்டு சித்திர மண்டபத்திலே சோழ வேந்தனும் இருந்தான், போர்களத்திலே தன்நிலையிழந்த ஆரிய மன்னர்கள் சென்று அவன் திருவடிகளை வணங்கியதாக மாடல மறையவன் கூறுதல்.

"கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி
உடன்றுமேல் வந்த #ஆரிய மன்னரைக்
கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய்" நடுகற் காதை 119-121

விளக்கம்: கங்கை கரையிலே ஆரிய மன்னரை செங்குட்டுவன் வென்றதை மாடலன் கூறுதல்.

"தண்டமிழ் இகழ்ந்த #ஆரிய மன்னரின்
கண்டனை யல்லையோ காவல் வேந்தே" - நடுகற் காதை 153-154

விளக்கம்: தமிழை இகழ்ந்த ஆரிய மன்னனை கண்டனையோ காவல் வேந்தனே என மாடலன் கூறுதல்.

"#ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி" - நடுகற் காதை 195.

விளக்கம்: ஆரிய அரசனை அருஞ்சிறையில் இருந்து விடுவித்தான்.

"#ஆரியநாட்டரசோட்டி அவர்
முடித்தலை அணங்காகிய பேரிமயக் கல்சுமத்திப்
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையிற் கங்கைப்பேர்
யாற்றிருந்து நங்கைதன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந்தரு
வெம்மை நீங்கி வஞ்சிமா நகர்புகுந்து" - வாழ்த்துக்காதை.

விளக்கம்: ஆரிய நாட்டு அரசர்களது முடியில் இமயக்கல்லை சுமத்தி கங்கை முதல் வஞ்சி வரை கொண்டு வருதல்..

"அருஞ்சிறை நீங்கிய #ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்" - வரந்தருகாதை 157-160

விளக்கம்: செங்குட்டுவனின் 50வது ஆண்டின் தொடக்க நாளிலே சிறைநீங்கிய ஆரிய மன்னரும், குடகு, கொங்கன், மாளுவ அரசன், இலங்கை அரசன் கயவாகு போன்றோர் இருத்தல்..

முதலில் சிலப்பதிகாரத்தில் கூறுப்படும் செங்குட்டுவனின் படையெடுப்பு விடயங்கள் நடந்த காலத்தினை மதிப்பிற்குரிய திரு இராம கி ஐயா அவர்களின் 'சிலம்பின் காலம்' நூலினை துணைக்கொண்டு மேலோட்டமாக அலசுவோம்.

சேரன் செங்குட்டுவனின் வடபுல படையெடுப்பானது வஞ்சியில் தொடங்கி நீலகிரி மலையினை கடந்து வந்த பாதை வரை சிலம்பிலேயே குறிப்புண்டு. அதன்பின் கர்நாடகத்தினூடே சென்று விந்தியத்தை தாண்டாமல் கிழக்கே தக்காண பீடபூமியின் வழியாக ஆந்திரம், தெலுங்கானம், ஒடிசா வழியே தான் மகத நாட்டு படையெடுப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் என்கிறார் திரு இராம கி அவர்கள். ஏனெனில் இவ்வாறு பயணித்தால் தான் வடக்கு கர்நாடகத்திற்கு மேலே ஆட்சியில் இருந்த நூற்றுவர்கன்னரின் உதவியுடன் கங்கையின் தென்கரை வரை சென்றிருக்கிறார்கள் என அறியமுடிகிறது. அதாவது நூற்றுவர்கன்னரின் அதிகாரமானது அப்போது கங்கைகரை வரையிலும் நீண்டிருக்கிறது.

சரி யார் இந்த நூற்றுவர்கண்ணர்? அவர்கள் தான் சாதவாகனர்கள். 'சதவா+கன்னர்கள்' என்பது தான் தமிழில் "நூற்றுவர்கன்னர்' என வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நூற்றுவர்கன்னர்கள் தான் கிமு 2 ஆம் நூற்றாண்டில் தொடங்கி கிபி 2 ஆம் நூற்றாண்டு வரை மகாராஷ்ட்டிரத்தில் இருந்து கர்நாடகம், மத்திய பிரதேசம், வடக்கு ஆந்திரம், தெலுங்கானம், முதலான மத்திய இந்திய பகுதியை ஆண்டுவந்த பேரரசர்கள். அதில் செங்குட்டுவனின் வடபுல படையெடுப்பு நிகழ்ந்த நேரத்தில் இவர்கள் கங்கைகரையில் பாடி அமைத்து செங்குட்டவனுக்கு உதவியதாக சிலம்பு கூறுவதை வைத்து பார்த்தால் நிச்சயமாக சாதவாகனர்கள் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தினை கட்டுபடுத்திய நேரத்தில் தான் செங்குட்டுவனின் இந்த படையெடுப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். எனில் கிமு 70 வாக்கில் முதலாம் சதகர்னி என்ற அரசன் தான் இத்தகைய பெரிய ராஜ்ஜியத்தை ஆண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சதகர்னி எனும் பெயரே கூட தமிழில் நூற்றுவர்கன்னர் என வழங்கியிருக்கலாம். அதுபோக சாதவாகனர்கள் தமிழை பெரிதும் மதித்தனர் என்பது அவர்கள் இருமொழிகளில் (பிராக்கிருத பிராமி & தமிழி) நாணயங்கள் வெளியிட்டிருப்பதை கொண்டு உறுதியாக சொல்லலாம்.

சரி செங்குட்டுவன் தோற்கடித்த ஆரியர் என்போர் யார்? என்ற கேள்விக்கு இப்போது விடை காணுவோம்!

சாதவாகனர்கள் கங்கைகரை வரையில் வந்து செங்குட்டுவனுக்கு உதவியதை பார்த்தோம். அப்படியானால் மகதநாட்டினை ஆண்டு வந்தவர்களின் அதிகாரம் அந்த சமயத்தில் குன்றியிருத்தல் வேண்டும் என்பதை அறிய முடிகிறது.

மகத நாட்டின் அதிகாரம் குன்றியது எப்போது? மௌரியர்கள் ஆட்சியில் பாரத தேசத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்த பின் மகதநாடு சுங்கர்களின் எழுச்சியால் வீழ்கிறது. சுங்கர்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டில் மௌரியர்களை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினர். இந்திய வரலாற்றில் முதன்முதலில் பிராமணர்கள் 'மனுதர்மத்தை மீறி' நேரடியாக அரசரானது என்றால் அது சுங்கர்கள் தான். சுங்கர்கள் கிமு 75 வாக்கில் கன்வா சாம்ராஜ்ஜியத்திடம் வீழ்ந்தனர். இவர்களும் பிராமணர்கள் தான். இந்த சுங்கர்களின் ஆட்சி வீழ்ந்து கன்வர்கள் எழுச்சி நடைபெற்ற சிறிது காலத்திலேயே செங்குட்டுவனின் படையெடுப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது திரு இராம கி ஐயா அவர்களின் கருத்து.

ஆகவே கங்கைக்கரைக்கு வடக்கே இருந்த ஆரிய அரசர்கள் தமிழை இகழ்ந்ததாகவும், ஆதலால் அவர்களை சேரன் வென்று இழுத்து வந்ததாகவும் கூறுகிறது சிலம்பு. எனவே சிலம்பு குறிப்பிடும் ஆரிய அரசர்கள் என்போர் கன்வர்கள் (அ) சுங்கர்களே! அவர்கள் ஆட்சி செய்த தேசமே ஆரிய தேசமாக இருத்தல் வேண்டும்.






தமிழ் மொழி
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..